

விவசாயத்தால் நஷ்டமே கிடைக்கும் என்பது போன்ற எதிர்மறை கருத்துகள் வலிமையடைந்து வரும் சூழலில், நன்கு திட்டமிட்ட விவசாய முறைகளால் என்றைக்கும் வெற்றியே கிடைக்கும் என்பதை திருப்பத்தூரைச் சேர்ந்த விவசாயிகள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், சின்னகம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சாம்ராஜ், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பணியுடன் விவசாயத்தையும் கவனித்து வந்தவர்.
தற்போது அவரது மகன் மதன்குமார், இந்த இயற்கை விவசாயத்தை திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விரிவுபடுத்தியுள்ளார். பாரம்பரிய நெல் ரகங்களோடு பல்வேறு கிழங்கு வகைகளையும் இவர் சாகுபடி செய்துவருகிறார்.
இவரைப்போலவே, வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி உஷாராணி, தனது நிலத்தில் கருப்புக்கவுனி, சீரகச் சம்பா, மாப்பிள்ளை சம்பா, சிவப்புக்கவுனி உள்ளிட்ட ரகங்களைப் பயிரிடுகிறார். கேத்தாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுஜாதா, கடந்த 25 ஆண்டுகளாக இயற்கை முறையில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் மற்றும் அரிசியை உற்பத்தி செய்து, மதிப்புக்கூட்டிச் சந்தைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகிறார்.