

வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே குறைந்த விலையில் அனைத்து மக்களுக்கும் மாம்பழங்கள் கிடைக்கின்றன. இவற்றை சில முக்கிய தொழில்நுட்பங்களை கடைபிடித்து இயற்கை முறையில் நஞ்சு இல்லாத மாம்பழங்களாக விவசாயிகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.
நேபாளம், ஜப்பான் போன்ற நாடுகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மாம்பழங்களில் உள்ள வேதிப்பொருட்களின் அளவு அதிகமாக இருப்பதால் நடப்பு வருடத்தில் இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டனர். இந்த நிலையில் இயற்கை வழி சாகுபடி தொழில்நுட்பங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
சத்து பற்றாக்குறை தவிர்த்தல்
மேட்டுப்பகுதி நிலங்களில் அதிகம் உற்பத்தியாகும் மா மரங்களில் தரமான பூக்கள், நோய் எதிர்ப்பை அதிகரித்தல், பூச்சித் தாக்கத்தை குறைத்தல், இனிப்பான தரமான மாம்பழ உற்பத்தி ஆகியவற்றுக்கு சாம்பல் சத்து மிகவும் முக்கியமானது.
மரத்திலிருந்து ஆறு அடி தூரத்தில் கரும்பாலை சாம்பல் அல்லது நெல் உமி சாம்பல் அடியுரமாக வைப்பதால் சாம்பல் சத்தும், சுண்ணாம்பு சத்தும் மண்ணுக்குக் கிடைக்கின்றன. முறையான வரப்புகள், வட்டப்பாத்தி அமைத்தல், சரிவுக்கு குறுக்கே உழுதல் போன்றவை முக்கியான உத்திகள்.