

கல்வராயன் மலையில் நிகழ்ந்த சில பல கள்ளச் சாராய மரணங்கள் தமிழகத்தையே உலுக்கின. பல உயிரிழப்புகளுக்குப் பின், விழித்துக்கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம், மலைவாழ் மக்களுக்கான பல்வேறு வாழ்வாதார முன்னெடுப்புகளை மேற்கொண்டது.
மாற்று வருமானத்துக்கு இப்பகுதி மக்களைத் தயார்படுத்தியது. இதன் விளைவாக இங்கொன்றும் அங்கொன்றுமாய் இப்பகுதியில் சில மாற்றங்கள் துளிர் விடத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில், கல்வராயன் மலையை, இன்று காளான் உற்பத்தியின் மையமாக மாற்றத் தொடங்கியிருக்கிறார் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாதேஷ். வேளாண் பணி சார்ந்த சுயதொழிலும் வாழ்க்கைக்குக் கைக் கொடுக்கும் என்பதைச் செயலில் நிரூபித்துக் காட்டியதோடு, 30க்கும் மேற்பட்ட மலைக் கிராம இளைஞர்களுக்கு, இந்தக் காளான் வளர்ப்பின் மூலம், வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறார்.
கல்வராயன் மலையில் உள்ள வெள்ளிமலை அருகே அமைந்துள்ள சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டதாரி இளைஞர் மாதேஷ். பட்டப்படிப்பு முடித்ததும் வழக்கமான வேலைகளுக்குச் செல்லாமல், சுயதொழில் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் இத்தொழிலில் களமிறங்கி தடம் பதித்திருக்கிறார்.
6 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த நிலத்தில் சிறிய குடில் அமைத்து காளான் உற்பத்தியைத் தொடங்கினார். கடும் உழைப்பும், முறையான பராமரிப்பும் குறுகிய காலத்தில் அவருக்கு நல்ல லாபத்தையும் உத்வேகத்தையும் கொடுத்தன.