

விஜயன் ராஜேந்திரன்
முதுநிலை பொறியியல் படிப்பான எம்.இ. (வெல்டிங் டெக்னாலஜி) படித்துவிட்டு, பன்னாட்டுப் பெருநிறுவனம் ஒன்றில் லட்சங்களில் ஊதியம் பெற்றுப் பணியாற்றியவர் விஜயன் ராஜேந்திரன் (37). சேலம் மாவட்டம் கொளத்தூரைச் சேர்ந்த இவர், இன்று கோவை மாவட்டம் மாதம்பட்டி அருகே உள்ள குப்பனூர் கிராமத்தில் இயற்கை விவசாயத்தில் முத்திரை பதித்து வருகிறார்.
இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், செவ்வாழைத் தோப்புகள் மிடுக்குடன் வளர்ந்து நிற்கும் அழகிய கிராமம் குப்பனூர்.
ஒருபுறம் ஆடு மேய்ச்சல், மறுபுறம் நீர்ப்பாய்ச்சல் என விவசாயம் செழித்தோங்கும் இப்பகுதியில், சமீபத்தில் பெய்த மழையால் ஊரெங்கும் பச்சைக் கம்பளம் விரித்ததுபோல் வயல்வெளிகள் பசுமையுடன் காட்சியளிக்கின்றன.
அங்கே, தன்னுடைய குத்தகை நிலத்தில் அறுவடைப் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த விஜயன் ராஜேந்திரனைச் சந்தித்தபோது, தனது வேளாண் அனுபவங்களை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார்:
“கோவையில் பெருநிறுவனத்தில் பணியாற்றியபோதும், மனம் அதில் லயிக்கவில்லை; ஒருவித நிறைவின்மை இருந்துகொண்டே இருந்தது. தாத்தா, தந்தை வழியில் விவசாயப் பின்னணி இருந்ததால், நம்மாழ்வார் காட்டிய பாதையில் இயற்கை விவசாயத்தைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்ற லட்சியம் எனக்குள் எழுந்தது.