

விளைச்சல் இருக்கும்போது விலையில்லை; விலை இருக்கும்போது விளைச்சல் இல்லை எனப் புலம்பு வோர் மத்தியில் ஒரே பந்தலில் புடலங்காய், பீர்க்கங்காய் என இரு பயிர் சாகுபடி செய்து, அதிக மகசூல் பெறுவதுடன் கூடுதல் வருவாயும் பெற்று சாதித்து வருகிறார் இமானுவேல் (48).
அரசுப் பள்ளி ஆசிரியரான இவர், ஸ்ரீவில்லிபுத்தூரில் தனது தந்தைக்கு உதவியாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். புடலங்காய், பீர்க்கங்காய், பாகற்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட கொடி வகைக் காய்கறிகளைத் தரையில் வளர்ப்பதை விடப் பந்தல் அமைத்துச் சாகுபடி செய்தால் இரட்டிப்பு மகசூல் கிடைக்கிறது.
பந்தல் சாகுபடி முறையில் கொடியின் அனைத்துப் பாகங்களுக்கும் சூரிய ஒளி கிடைத்து, ஒளிச்சேர்க்கை நன்றாக நடப்பதால் காய்கள் முழுத் தரத்துடன் விளைவதுடன், காய்க்கும் காலமும் அதிகரிக்கிறது.
பந்தல் சாகுபடி முறையில் இரு பயிர் சாகுபடி செய்து, அதிக மகசூல் எடுத்து வரும் இமானுவேல், இதுகுறித்து கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்நத்தம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பூர்வீக விவசாய நிலத்தில் தந்தை வீரப்பன் (85) கரும்பு, கொய்யா மற்றும் காய்கறி சாகுபடி செய்து வந்தார்.
அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வரும் நான், விடுமுறை நாட்களில் தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்து வருகிறேன். கரோனா ஊரடங்கு காலத்தில் முழுநேரமாக விவசாயம் செய்தபோது தோட்டக்கலைத் துறை மானியத்தில் 2020இல் ஒரு ஏக்கரில் பந்தல் அமைத்துப் புடலங்காய் சாகுபடி செய்தோம்.