

பணியாளர்களுடன் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஆர்.அறிவழகன் (நிற்பவர்).
கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்களது விளைச்சலைச் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பிவிட்டு, அதற்கான தொகையைப் பெறுவதற்குள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. நிலுவைத் தொகை, வெட்டுக்கூலி, போக்குவரத்து வாடகை எனப் பல நெருக்கடிகள்.
மறுபுறம் நெல் போன்ற பயிர்களைச் சாகுபடி செய்ய நினைத்தால், ஆள் பற்றாக்குறை விவசாயத்தையே கைவிட்டுவிடலாமா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
இந்தச் சவால்களிலிருந்து மீள வழிதேடிய தஞ்சை விவசாயி ஒருவர், ‘மதிப்புக்கூட்டல்’ எனும் மந்திரத்தை கையில் எடுத்துள்ளார். கரும்பிலிருந்து வெல்லம் தயாரிக்கும் சிறு கூடத்தை நிறுவி, இன்று மற்ற விவசாயிகளுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
பாரம்பரியத்தில் ஒரு புதுமை
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ஓலத்தேவராயன்பேட்டையைச் சேர்ந்தவர் ஆர்.அறிவழகன் (48). பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், இன்றைய தலைமுறைக்கு விவசாயத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தனது செயல்பாடுகளை அமைத்துக்கொண்டார்.