

பண்ணையில் விளைந்த காய்களும், பழங்களும்...
விவசாயம் என்பது நஷ்டத்தைத் தரும் தொழில் என்பது நம்மூர் விவசாயிகள் மத்தியில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று. இந்த அவநம்பிக்கையைப் போக்கி, ஆங்காங்கே சில விவசாயிகள் விவசாயத்திலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்சி வருகிறார்கள்.
இந்த வரிசையில், உயர் மதிப்புமிக்க பயிர்களைச் சாகுபடி செய்வதோடு, சுற்றுலாவாசிகளையும் ஈர்க்கும் வகையில் கொடைக்கானல் அருகே ஒரு வேளாண் சுற்றுலாப் பண்ணை உருவாகியிருக்கிறது.
கொடைக்கானலில் இருந்து மேற்கே சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள கூக்கல் கிராமத்தில் அமைந்திருக்கும் ‘கூக்கல் வேல்லி ஆர்கானிக் ஃபார்ம்’ (Kookal Valley Organic Farm), வேளாண் சுற்றுலா குறித்துத் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு வழிகாட்டும் ஒரு முன்னோடிப் பண்ணையாகத் திகழ்கிறது.
இந்தப் பண்ணை உருவான கதையை இதன் நிறுவனர்களுள் ஒருவரான வே. சுரேஷ் விவரிக்கிறார்: எனது சொந்த ஊர் அருப்புக்கோட்டை. 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தாய்லாந்து நாட்டில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றினேன்.
அப்போது அங்குள்ள பல விவசாயப் பண்ணைகளை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள பெரும்பாலான பண்ணைகள் சுற்றுலாவுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. வெறும் வேளாண் விளைபொருட்களை மட்டும் உற்பத்தி செய்யாமல், அவற்றை வேளாண் சுற்றுலா மையங்களாகவும் மாற்றியிருக்கிறார்கள்.
இதனால் விளைபொருட்களுக்கு சில நேரங்களில் உரிய விலை கிடைக்கா விட்டாலும் கூட, சுற்றுலா மூலமாகப் போதிய வருமானம் அங்குள்ள விவசாயிகளுக்குக் கிடைத்துவிடுகிறது.
அதைப் பார்த்ததும், ஊர் திரும்பிய பிறகு நாமும் இதுபோன்று ஒரு வேளாண் சுற்றுலாப் பண்ணையை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தேன். இதற்காகத் தாய்லாந்தில் உள்ள பல பண்ணைகளுக்கு நேரில் சென்று விவரங்களைத் திரட்டியதோடு, முறைப்படி பயிற்சியும் எடுத்துக்கொண்டேன்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் வாய்ப்பு அமைந்தது. நானும், எனது உறவினர் சுப்பாராமனும் இணைந்து கூக்கல் கிராமத்தில் 12 ஏக்கர் நிலம் வாங்கினோம். 2022இல் விவசாயச் சாகுபடியைத் தொடங்கினோம். 2024இல் ‘வில்லா’ வகையைச் சேர்ந்த தங்கும் இடங்களை உருவாக்கினோம்.