

கோயம்புத்தூர் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் இந்தியாவின் மாபெரும் வேளாண் கண்காட்சியான 24-வது ‘அக்ரி இன்டெக்ஸ் 2026’ ஜூலை 9ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இது குறித்து கொடிசியா தலைவர் வி.ரங்கசுவாமி, அக்ரி இன்டெக்ஸ் தலைவர் என். ஸ்ரீஹரி ஆகியோர் கூறும்போது, “தற்போதைய இந்திய வேளாண்மைத் துறை சார்ந்த நவீன மேம்பாடுகள், தோட்டக்கலை, பால் பண்ணை, கோழி வளர்ப்பு, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்தும் நோக்குடன் இந்த சர்வதேச கண்காட்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
சுமார் 1,50,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியில் டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 460க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களது 660 அரங்குகள் மூலம் பங்கேற்கின்றன.
இந்த ஐந்து நாள் நிகழ்வில் இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.