

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தபி.இ. பட்டதாரி கலைக் கதிரவன்,பி.டெக். பட்டதாரி கிருஷ்ணசாமி. இருவரும் பள்ளிக்கூட நண்பர்கள். இவர்கள் கல்லூரி படிப்பை வெவ்வேறு இடங்களில் முடித்தனர்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இருவரும் சந்தித்தனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த அவர்கள் ஒரே அறையில் தங்கினர். சொந்த ஊரில் ஏதாவது தொழில் புரிய வேண்டும் என இருவரும் எண்ணினர். இதில் திருமணம் முடித்த கலைக்கதிரவன் ஒரு கட்டத்தில் தனது வேலையை உதறிவிட்டு, 2019-ல் சொந்த ஊர் திரும்பினார்.
பின்னர் ராமநாதபுரத்துக்கே உகந்தகருவாடு விற்கும் தொழிலை தேர்ந்தெடுத்தார். விடுமுறை நாளில் சொந்த ஊருக்கு வரும் கிருஷ்ணசாமி, நண்பரின் கருவாடு விற்பனைக்கு உதவினார்.
இருப்பினும், தரமான கருவாடுகளை வாங்கி விற்க அவர்கள் திட்டமிட்டனர். இதற்காக ராமநாதபுரம், ராமேசுவரம் பகுதியில் பல இடங்களிலும் தேடி அலைந்து ஒரு வழியாக பாம்பனைச் சேர்ந்த மீன் வியாபாரி மூக்கனை சந்தித்தனர். அவர் மூலம் தரமான கருவாடுகளை வாங்கினர்.
கருவாடு வாடையின்றி பார்சல்செய்து விற்க திட்டமிட்ட அவர்கள், அதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து, காற்று புகாத வகையில் சிறிய கன்டெய்னர்களில் குறிப்பிட்ட எடையளவில் கருவாடு பார்சல்களை தயாரித்தனர். கிப்ட் பாக்ஸ் வடிவிலான அந்த பார்சல்களை ஆன்லைன் மூலம் மார்க்கெட்டிங் செய்தனர். ‘லெமுரியன் பஜார்’ என்ற பெயரிலான ஆன்லைன் கருவாடு விற்பனை அவர்களுக்கு நம்பிக்கையை தந்தது. மாதம் ரூ.3 லட்சம் வரை விற்றதால் உற்சாகம் அடைந்தனர்.
இந்நிலையில், 2021-ல் கிருஷ்ணசாமியும் தனது வேலையைத் துறந்துவிட்டு நண்பருடன் கருவாடு விற்கும் தொழிலில் இணைந்தார். இருவரும் இத் தொழிலில் மும்முரம் காட்டிய நிலையில், ‘ஒரு ரயில் நிலையம், ஒரு பொருள்’ என்ற தெற்கு ரயில்வே திட்டம் மூலம் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் சில்லரை விலையில் கருவாடு பார்சலை வைத்து விற்றனர். இது மக்களைப் பெரிதும் கவர்ந்தது.
இருப்பினும், விற்பனையை அதிகரிக்க மக்கள் அதிகம் வந்து செல்லும் மதுரை ரயில் நிலையத்தைத் தேர்ந்தெடுத்தனர், ஏற்கெனவே ஒரு ரயில் நிலையம், ஒரு பொருள், திட்டத்தில் மதுரை சுங்குடி சேலை விற்க அனுமதித்த நிலையில், முதலில் அதிகாரிகள் தயங்கினர்.
மக்கள் கூடும் பகுதியில் கருவாடு விற்க முடியுமா என அதிகாரிகள் தயக்கம் காட்டினர்.ஒருவழியாக வர்த்தகப் பிரிவு அதிகாரிகளிடம் பேசி, வாடை எதுவுமின்றி கருவாடு தயாரிக்கும் விதம் குறித்து செயல்விளக்கம் அளித்து, ஓராண்டு ஒப்பந்தத்தில் கடை ஒன்றுக்கு அனுமதி பெற்றனர்.
இதன் மூலம் ‘லெமுரியன்ஸ் ட்ரைஃபிஷ் ஹட்’ பெயரில் தொடங்கிய இக்கடையில் 30 வகையான கருவாடுகளைவிற்கின்றனர். சுமார் ரூ.100 முதல் கருவாடு பார்சல் கிடைக்கிறது.
இதுகுறித்து கலைக் கதிரவன் பகிர்ந்து கொண்டார். ‘‘மீன்களை வாங்கி 3 நாளில் நவீன தொழில்நுட்பத்தில் கருவாடு தயாரிக்கிறோம். சூலை, நெத்திலி தவிர, பிற 28 வகை கருவாடுகளில் கெடாமல் இருக்க உப்பு கலக்கிறோம்.
உணவு பாதுகாப்புத் துறை, ஆய்வகம் மூலம் உரிய சான்றிதழ்களைப் பெற்றுள்ளோம். பாம்பன் பகுதி புதுமைப் பெண்கள் மகளிர் சுயஉதவிக் குழுவினர் இந்தக் கருவாடு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். நாங்கள் விற்கும் கருவாடு பார்சலில் கருவாட்டின் வாடையே இருக்காது.
வீடுகளில் கருவாட்டின் வாடையைத் தவிர்க்க, மறைத்து வைப்பது வழக்கம்.நாங்கள் விற்கும் கருவாடு பார்சல் 4 மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம். தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஆன்லைனில் பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகிறோம். தற்போதுசில்லரை விற்பனையிலும் இறங்கியுள்ளோம். மதுரை ரயில் நிலையத்தைத் தேர்ந்தெடுத்து விற்பனையை தொடங்கி உள்ளோம். தினமும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது.
நாங்கள் கடை தொடங்கிய நேரம் மதுரை ரயில் நிலையத்தில் ரயில் பாதை இணைப்பு பணியால் ரயில் போக்குவரத்து குறைந்து இருந்தது. தற்போது, அது சீரானதால் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. நமது நாட்டில் படித்த இளைஞர்கள் இங்குள்ள வளங்களைப் பயன்படுத்தி தொழில் முனைவோர் ஆக வேண்டும்.
அப்போதுதான் நாமும் பலருக்கு வேலை கொடுக்கலாம். 14 ஆண்டுகளுக்கு பிறகே நாங்கள் இதை யோசிக்க முடிந்தது. புதிய வகை கருவாடு விற்பனையை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க இலக்கு வைத்துள்ளோம்’’ என்று நம்பிக்கையோடு பேசினார்.