

இந்தியாவின் புகழ்பெற்ற சர்வதேசப் படவிழாக்களில் ஒன்றாக அடையாளம் பெற்றிருக்கிறது சென்னை சர்வதேசப் படவிழா. ஒவ்வொரு படவிழாவுக்கும் ஒரு சிறப்பு இருப்பதைப் போலவே, சென்னை சர்வதேசப் படவிழாவுக்குச் சிறப்பு சேர்த்து வருகிறது தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவு. வரும் 15ஆம் தேதி, சென்னையில் கோலாகலமாகத் தொடங்கவிருக்கும் இதன் போட்டிப் பிரிவுக்கு இம்முறை 30 படங்கள் விண்ணப்பித்திருந்தன. அவற்றிலிருந்து, 1. ‘ஆதார்’, 2. ‘இரவின் நிழல்’, 3. ‘இறுதிப் பக்கம்’,4. ‘மாமனிதன்’, 5. ‘கார்கி’, 6. ‘கசட தபற’ 7. ‘நட்சத்திரம் நகர்கிறது’. 8. ‘ஓ2’, 9. ‘பிகினிங்’, 10. ‘கோட்’, 11. ‘பபூன்’, 12. ‘யுத்த காண்டம்’ ஆகிய 12 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தேர்வு பெறாமல் போன படங்களில், ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்ற ’டாணாக்காரன்’ உட்பட சில படங்கள் இருக்கலாம். என்றாலும் இந்த 12 படங்களுக்கு இடையில் கடுமையான போட்டி இருக்கக்போவதை எடுத்துக்காட்டுகிறது தேர்வுப் பட்டியல்.
சிறந்த படம், சிறந்த இரண்டாவது படம், நடுவர்கள் சிறப்பு விருது, சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த ஒலிப்பதிவாளர் ஆகிய 8 விருதுகளுடன் திரையுலகில் சிறந்து விளங்கி வரும் ஒருவருக்கு ‘அமிதாப் பச்சன் யூத் ஐகான் விருது’ உள்பட மொத்தம் 9 விருதுகளை வழங்கிவருகின்றது இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன். இந்த ஒன்பது விருதுகளில் சிறந்த படத்துக்கான விருது, படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
மொத்தப் பரிசுத் தொகை ரூபாய் 7 லட்சம். சர்வதேசப் படவிழாக்களில் 100 விருதுகளைத் தாண்டி அள்ளி வந்திருக்கும் சீனு ராமசாமியின் ‘மாமனிதன்’, ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் ‘சிங்கிள் ஷாட் நான் - லீனியர்’ படமான ‘இரவின் நிழல்’, பா.இரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆகிய படங்கள் குறித்து இப்போதே நெட்டிசன்கள் விருதுக்கான தங்களுடைய தர வரிசையை வெளியிட்டு வருகிறார்கள்.
கவனம் ஈர்க்கும் பனோரமா: சென்னை சர்வதேசப் படவிழாவில் உலக சினிமாக்களுக்கு நடுவே பார்வையாளர்களை ஈர்க்கும் மற்றொரு அம்சம் ‘இந்தியன் பனோரமா’ படங்களின் திரையிடல். இந்தப் பட்டியலில் கம்பீரமாக இடம் பிடித்துள்ளது தமிழ்த் திரையின் உன்னதமான உலக சினிமாக்களில் ஒன்று என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் எம்.மணிகண்டனின் ‘கடைசி விவசாயி ’. இதுதவிர, ‘மாலை நேர மல்லிப்பூ’, ‘போத்தனூர் தபால் நிலையம்’ ஆகிய மேலும் இரு தமிழ் படங்களும் இடம்பிடித்துள்ளன.
கேரள ரசிகர்களைத் தாண்டி, பான் இந்தியன் சினிமா காதலர்களாலும் விமர்சகர்களாலும் சிலாகிக்கப்பட்டு வரும் மலையாளப் படமான ‘அப்பன்’ இப்பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது. படுத்துக்கொண்டே நடிப்பில் வெளுத்துக்கட்டிய அலென்சியர் லே லோபஸின் நடிப்பையும் ஒரு மலையக வீட்டையும் ரப்பர் மரத் தோட்டத்தையும் வைத்துக்கொண்டு விளையாடிய இயக்குநர் மஜுவின் ஆட்டத்தையும் பெரிய திரையில் பார்க்கத் தயாராகி விட்டார்கள் ரசிகர்கள். ‘அப்பன்’ படத்துடன் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள மற்றொரு மலையாளப் படம் ‘சௌதி வெள்ளக்கா சிசி.225/2009’.
தெலுங்கு சுயாதீன சினிமாவுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்ற ‘சினிமா பண்டி’, பள்ளி இறுதி வகுப்பு மாணவர்கள் இருவர், ஸ்மார்ட் போனைத் தவறாகப் பயன்படுத்தப்போய், அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் உருவாகும் சிக்கலை வெகு யதார்த்தமாக முன்வைத்த பிருத்வி கோணனூரின் கன்னடப் படமான ‘ஹதினெலெண்டு’ ஆகியவற்றையும் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். இப்பிரிவில் திரையிட மராத்தியிலிருந்து ‘எக்தா காய் ஜலா’, வங்காளத்திலிருந்து ‘மஹாநந்தா’, ஒடியாவிலிருந்து ‘பிரதிக்சயா’, இந்தியிலிருந்து ‘தி ஸ்டோரி டெல்லர்’, சம்ஸ்கிருத மொழியில் உருவான ‘தயா’ ஆகிய படங்களும் இடம்பெற்றுள்ளன.
மாணவர்களின் படைப்புகள்: மாநில செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் எம்.பி.சாமிநாதன் தொடங்கி வைக்கவிருக்கும் 20வது சென்னை சர்வதேசப் படவிழாவின் மற்றொரு முக்கியமான அம்சம், அரசுத் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் கன்னிப் படைப்புகளுக்குக் கிடைக்கும் முதல் அங்கீகாரம்! புனே திரைப்படக் கல்லூரிக்கு இணையான வரலாறும் பாரம்பரியமும் கொண்ட, தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இயக்கியுள்ள 9 டிப்ளமோ குறும்படங்கள் இப்படவிழாவில் திரையிடலுக்குத் தேர்வாகியுள்ளன.
அவை, கருணாகரன் டிண்டா இயக்கியுள்ள ‘ஒயின் ஷாப்’, ‘ஆடுபுலி ஆட்டம்’, மனசா.வி. இயக்கியுள்ள ‘மாயா’, ரகுல் கிரி இயக்கியுள்ள ‘டைம்’, ரப்பானி கான் இயக்கியுள்ள ’அழகி’, சிவகுமார்.பி. இயக்கியுள்ள ‘பெர்சீவ்’, சிவா.எஸ். இயக்கியுள்ள ‘இன்செக்ட்ஸ்’, சிந்து பரத் இயக்கியுள்ள ‘சிறை’, ஏ.ஸ்வீட்ராஜ் இயக்கியுள்ள ‘ஊமை விழி’ ஆகியன.
சென்னை, அண்ணா சாலை, ஆயிரம் விளக்குப் பகுதியில் அமைந்திருக்கும் சத்யம் சினிமா வளாகத்தில் உள்ள நான்கு திரையரங்குகள், அண்ணா திரையரங்கம் உள்பட மொத்தம் 5 திரையரங்குகளில் 4 காட்சிகள் வீதம், ஒவ்வொரு நாளும் 20 படங்கள் திரையிடப்படவுள்ளன.
ஒரு திரை ஆர்வலர் அதிக பட்சமாக நாளொன்றுக்கு 4 படங்கள் மட்டுமே பார்க்க முடியும். எனவே, படங்களைப் பற்றி அறிந்துகொண்டு, தேர்வு செய்து பார்ப்பது உலக சினிமா திரை அனுபவத்தை மேம்படச் செய்வதுடன் பெரும் கொண்டாட்டமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தவறவிடக் கூடாத படங்களைக் குறித்து தெரிந்துகொள்ள ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் இணையதளத்தின் இந்து டாக்கீஸ் பிரிவில் வெளியாகும் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசியுங்கள். - ஆர்.சி.ஜெயந்தன், jesudoss.c@hindutamil.co.in