

எங்கு திரும்பினாலும் பசுமையான மலைத் தொடர்களால் மனதைக் கொள்ளை அடிக்கும் தைவான் தேசம் அதன் ஹைடெக் தொழில்நுட்பத்தாலும் பிரமிக்கவைக்கிறது. அதிலும், அதன் தலைநகரமான தைப்பே செல்லமாக ‘எலக்ட்ரானிக் சிட்டி’ என்றே அழைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு நம் கையிலும் மடியிலும் தவழும் அதிநவீனத் தொழில்நுட்பக் கருவிகளில் பெரும்பாலானவை அங்குதான் தயாரிக்கப்படுகின்றன. தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிப்பவர்களில் பலர் அங்கு இருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவர் வசந்தன் திருநாவுக்கரசு. தைவான் மண்ணில் மணக்கும் தமிழ்ப் பெயர்! திருவள்ளூர் மாவட்டம் சிறுவானூரைச் சேர்ந்தவர் வசந்தன். சென்னையில் இளநிலை பொறியியல் பட்டம், முதுநிலை நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (M.S. Nano Science and Technology) பட்டம் பெற்ற இவர் இப்போது தைப்பேயில் நானோ எலெக்ட்ரானிக்ஸில் (Nano Electronics) முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்.
எல்லாமே ஸ்மார்ட்
“உலகைப் புரட்டிப்போட்ட தொழில்நுட்பங்களில் முக்கியமானவை கணினியும் மொபைலும். இப்போது அவற்றையும் தாண்டிப்போகும் காலம் வந்துவிட்டது. இன்டர்னெட் ஆஃப் திங்க்ஸ் (Internet of Things) என்பதுதான் அது. இன்னும் சில ஆண்டுகளில் நாம் பயன்படுத்தும் அத்தனைப் பொருள்களும் ஸ்மார்ட் டெக்னாலஜியால் இணைக்கப்படும். மொபைல் என்பது ஒரு பட்டன் அளவுக்குச் சுருங்கிவிடும். அவ்வளவு ஏன் கருவியே இல்லாமல் சென்ஸார் மூலமாக அத்தனையும் இயக்கலாம்.
உதாரணத்துக்கு நம் வீட்டில் உள்ளன அத்தனை பொருள்களையும் ஸ்மார்ட் சென்ஸார், ஸ்மார்ட் ஃபோன் மூலமாக இணைத்துவிடலாம். அதேபோல வெர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பமும் அதிவேகமாக வளர்கிறது. இதன் மூலம் எங்கேயோ இருக்கும் நபரோடு உரையாடும்போது அவர் நம் அருகிலேயே இருப்பதுபோன்ற பிம்பத்தைக்கூட உருவாக்கலாம். இவை அனைத்தையும் நானோ தொழில்நுட்பம் மூலமாகக் கொண்டுவருவதற்கான ஆராய்ச்சிகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன” என்கிறார் வசந்தன்.
அடுத்த தலைமுறை தொழில்நுட்பம்
எலெக்ட்ரானிக்ஸில் மட்டுமல்ல இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட துறைகளையும் ஆட்சி செய்யப்போவது நானோ தொழில்நுட்பம்தான். அதிவேகமாகவும், அதிநுட்பமாகவும் செயல்படும் நானோ தொழில்நுட்பத்தைச் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத வகையிலும் உருவாக்க வேண்டும் என்கிற பார்வையும் கொண்டிருக்கிறார் இவர்.
நாம் உபயோகிக்கும் எலக்ட்ரானிக் கருவிகளின் உயிர்நாடி டிரான்ஸிஸ்டர் எனப்படும் நுண்ணிய பொருள். அதை நானோ மின்னணு மூலமாக ஆராய்ந்து அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை உருவாக்க முயன்றுவருகிறார். “20 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சி மாணவர் கண்டுபிடித்ததுதான் 14 நானோமீட்டர் இண்டெக்ரேட்டட் ஸர்க்யூட்ஸ் நானோ டெக்னாலஜி (Nanometer Integrated circuits). இன்றைக்கு அதிநவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி அதுதான். இதற்கு மேலே கொண்டு செல்ல 3 நானோமீட்டர் அளவிலான டெக்னாலஜியை உருவாக்க நான் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறேன்” என்கிறார்.
காத்திருக்கிறது தைவான்!
2011-ல் சென்னையில் எம்.எஸ். நானோ டெக்னாலஜி படிக்கும்போது திருவண்ணாமலையில் நடைபெற்ற ஒரு சர்வதேசக் கல்வி மாநாட்டில் அவர் தன் ஆராய்ச்சித் தாளை வாசித்தார். அப்போது தைவான் சார்பில் பங்கேற்ற ஒரு பேராசிரியர் வசந்தின் திறமையை அடையாளம் கண்டு தைவானிலேயே முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்ய அழைத்தார். அதை அடுத்து மும்பை ஐ.ஐ.டி-ல் ஆறு மாதம் தேசிய அளவிலான ஆராய்ச்சி இன்ட்ர்ன்ஷிப் செய்ய வசந்தத் தேர்ந்தெடுக்கப்பட்டது அவருக்கு ஏற்றம் தந்தது.
அடுத்தபடியாக தைவானின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான அகடமியா சினிகா (Academia Sinica) நடத்திய இன்ட்ர்ன்ஷிப் தேர்வில் 20 நாடுகளிலிருந்து பங்கேற்றவர்களில் இந்தியாவிலிருந்து இருவர் தேர்வானார்கள். அவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த வசந்தன். இதன்மூலம் இந்திய மதிப்பில் மாதந்தோறும் 68 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையுடன் நானோ தொழில்நுட்பத்தில் பிஎச்.டி. செய்யும் மிகப் பெரிய வாய்ப்பு வசந்தனுக்கு கிடைத்தது.
உலகக் கல்வி அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழ்களில் வசந்தின் மூன்று கட்டுரைகள் இதுவரை பிரசுரிக்கப்பட்டுள்ளன. கல்வியில் மட்டுமல்லாமல் தைவான் தமிழ்ச் சங்கத்தின் முக்கிய உறுப்பினர், தைவான் வெளிநாட்டு மாணவர்கள் சங்கத் தலைவர் எனப் பொது விஷயங்களிலும் அசத்துகிறார் வசந்த். முனைவர் பட்டம் முடித்துவிட்டுத் தமிழகத்துக்கே திரும்பி வந்து சுயமாகத் தொழில் தொடங்குவதே தன் லட்சியம் என்கிறார்.
“இந்திய இளைஞர்களுக்குத் தைவானில் சம்பளத்துடன்கூடிய கல்வி காத்திருக்கிறது. ‘Taiwan Thamizh Sangam’, ‘Indians in Taiwan’ என்கிற ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிடுங்கள். தைவானில் உங்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை அளிக்க நான் காத்திருக்கிறேன். சரி…இன்னும் சில மணித் துளிகளில் நான் ரன் செய்த நானோ புரோகிராமுக்கான டீபக்கிங் ரிசல்ட் வந்திடும். அதைப் பார்த்துவிட்டு அடுத்தகட்ட ஆராய்ச்சிக்குத் தயாராகணும்” எனச் சுறுசுறுப்பாகப் புறப்பட்டார் நானோ தமிழன்.
காலந்தோறும் டிரான்ஸிஸ்டர்
டிரான்ஸிஸ்டர் என்பது ஒலிச் செறிவு ஊட்டக்கூடியதும் மாறு திசை முன்னோட்டத்தை நேர் திசை முன்னோட்டமாக மாற்றக் கூடியதுமான ஒருவகை குறைகடத்தி (semiconductor). முதன்முதலில் டிரான்ஸிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்டபோது அதன் அளவு இன்றுள்ளதுபோல பலமடங்கு இருந்தது. இப்போது ஒரு அங்குலத்துக்குள் 100 கோடி டிரான்ஸிஸ்டர்களைப் பொருத்தும் அளவுக்குத் தொழில்நுட்ப வளர்ச்சி வந்துவிட்டது.
நானோ என்றால்?
மிக நுண்ணிய அலகு நானோ எனப்படுகிறது. ஒரு மீட்டரில் 100 கோடியில் ஒரு பங்குதான் நானோ மீட்டர்.
சிறந்த கவிதைக்கான பரிசு