

உலகத்தையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் சமூக வலைத்தளத்தால் வளர்ச்சியும் உண்டு வீழ்ச்சியும் உண்டு. காலம் ஓட ஓடச் சமூக வலைதளப் பயனர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே இருக்கிறது. இன்ஸ்டாகிராம் 2கே கிட்ஸ்களுக்கானது என்கிற பிம்பம் இருக்க, 2கே, 90’ஸ் கிட்ஸ்களையும் தன்னை ஃபாலோ செய்ய வைத்திருக்கிறார் இந்த 70’ஸ் கிட்.
தமிழ்நாட்டில் முதன் முறையாகச் சுற்றுலாத் துறை சார்பில் இந்த ஆண்டு வழங்கப்பட்ட விருதுகளில், ‘சமூக ஊடகங்களில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்’ என்கிற விருதைப் பெற்றிருக்கிறார் ஃபர்ஹானா சுஹைல். இவருக்கு பூர்விகம் துபாய். திருமணமான கையோடு சென்னைக்கு குடிபெயர்ந்தவர், தனது தேடலைத் தொடங்கியிருக்கிறார்.
“புதிய நகரம், புதிய மனிதர்கள். இங்கே சுற்றிப்பார்ப்பதற்கு, ஷாப்பிங் செய்வதற்கென இருக்கும் வழக்கமான இடங்களையும் கடைகளையும் தாண்டித் தேடத் தொடங்கினேன். புதுமைகளுக்கு பழக்கப்பட்ட சென்னையும் சென்னை மக்களும் தங்களை அப்டேட் செய்துகொள்ளத் தயங்குவதில்லை. நகரின் பல்வேறு இடங்களில் புதுப்புது நிகழ்ச்சிகளும் பாட்டும் இசையும் கலையும் உணவுத் திருவிழாவும் ஆடை விற்பனையும் வார இறுதிகளில் நடப்பதை அறிந்தேன். நேரம் கிடைக்கும்போது அவற்றில் கலந்துகொண்டேன். நான் போக விரும்பிய இடங்கள், நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களை என்னுடைய ‘நியூ டு சென்னை’ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினேன். திருமணமான பெண்கள், நகரத்திற்குப் புதிதாகக் குடிபெயர்ந்தவர்கள் என மெல்ல மெல்ல என்னைச் சிலர் பின்தொடர்ந்தனர்” என்றவரை இப்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்கின்றனர்.
கரோனாவால் இணைந்த கைகள்
வெள்ளம், புயல், கரோனா போன்ற அசாதாரண சூழல்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள பெரிதும் கைகொடுத்தது சமூக வலைத்தளம். இதே போன்றதொரு சிக்கலான நேரத்தில், இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தியிருக்கிறார் ஃபர்ஹானா. “கரோனாவால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது பெண் ஒருவர் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். வீட்டிலிருந்து உணவு தயார் செய்து தருவதாகவும் வாய்ப்பிருந்தால் விற்றுத்தர உதவும்படியும் கேட்டிருந்தார். ஹோட்டல்கள் திறப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த அந்நேரத்தில் தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டு அந்தப் பெண்ணின் வீட்டு உணவகத்தைப் பற்றி ஸ்டோரியாகப் பதிவு செய்தேன். அது நிறைய பேரைச் சென்றடையவே, கரோனா காலத்தில் அந்தப் பெண்ணுக்கு நல்ல வியாபாரம் இருந்தது. பிறகு, பெரிய அளவில் மார்கெட்டிங் செய்ய முடியாத ‘ஹோம் பிசினஸ்’ செய்யும் பெண்களின் தொழில்களைப் பற்றிப் பதிவுசெய்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. வியாபாரிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் மத்தியில் ஒரு உறவுப் பாலமாக இயங்கத் தொடங்கினேன்” என்றவர், தான் சில கட்டுப் பாடுகளுடன் இயங்கிவருவதாகவும் குறிப்பிட்டார்.
“ஒரு பொருளை, நிறுவனத்தைப் பற்றி விளம்பரப்படுத்தும் முன் அவர்கள் தரும் தகவல்களைக் கட்டாயமாகச் சரிபார்ப்பது என்பதில் உறுதியாக இருக்கிறேன். நானே அந்தந்த பொருட்களைப் பயன்படுத்தி, தகவல்களைச் சரிபார்த்து இது மக்களுக்குப் பரிந்துரை செய்வதற்குத் தகுதியானதா என்பதைத் தெரிந்தபின் மட்டுமே பதிவிடுகிறேன். நாளடைவில் இன்ஸ்டாகிராம் மூலம் சம்பாதிக்கத் தொடங்கினேன். இந்தக் காலத்தில் ஸ்டார்ட் அப் தொடங்கும் பெண்கள் ஏராளம். செலவு செய்து மார்கெட்டிங் செய்ய இயலாதவர்களைக் கட்டணமின்றி விளம்பரப்படுத்தி வருகிறேன். இதில் ஒரு சின்ன மனநிறைவு” என்றவர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் மது, புகை சம்பந்தமான பொருட்களைப் பற்றி விளம்பரப் படுத்தப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
கெட்டதைப் புறக்கணிக்க வேண்டும்
சென்னையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை, தள்ளுபடி விற்பனைகளை வாரம் தவறாமல் அப்டேட் செய்யும் ஃபர்ஹானாவின் இன்ஸ்டாகிராம் பக்கம், வீக்கெண்டுக்கான சிறந்த கையேடு. எளிமையான மொழிநடையில் பார்த்ததும் விளங்கக்கூடிய பாணியில் தகவல்கள் பதிவிடுவது இவரது ஸ்பெஷல். நம்பகத்தன்மையான, உறுதியான தகவல்களை மட்டும் பகிர்வதாலும் இவரைப் பலர் பின்தொடர்கின்றனர்.
ஃபர்ஹானாவைப் போல இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தி பகுதிநேரமாகவும் முழுநேரமாகவும் சுயதொழில் செய்பவர்கள் ஏராளம். சமையல், மாடலிங், மேக்-அப், பயணம், டிஜிட்டல் ஆர்ட் எனப் பல துறை சார்ந்து ஆன்லைனில் இயங்கும் பெண்களுக்கு வாய்ப்புகள் இருக்கும் அதே நேரத்தில் பாதுகாப்பின்மையும் ஒரு பிரச்சினையாக இருப்பதை மறுக்க முடியாது. இது குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட ஃபர்ஹானா, “தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சனங்களையும் கேள்விகளையும் மக்கள் கமென்ட்டில் பதிவிடுவது தவிர்க்க முடியாதது. முடிந்தவரை கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது. சில நேரம் பொறுத்துக்கொள்ள முடியாத வார்த்தைகளைப் பயன்படுத்தி இருந்தால் ப்ளாக் செய்துவிடலாம் அல்லது சைபர் க்ரைமில் புகார் அளிக்கலாம். இது போன்ற தேவையில்லாத பிரச்சினைகளால் நம் வளர்ச்சி தடைபடாமல் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். பிரச்சினைகளைக் கையாள கற்றுக்கொள்ள வேண்டும்” என முடித்தார் ஃபர்ஹானா.
ஃபர்ஹானாவைப் பின்தொடர: shorturl.at/jtDRU