

கடந்த பத்தாண்டுகளில் கவனம் ஈர்த்த சுற்றுச்சூழல் நிகழ்வுகள்: ஆயுள் பறிக்கும் காற்று மாசு நகரமயமாக்கல், தனியார் போக்குவரத்து, வைக்கோல் எரிப்பு, மின்சாரத்திற்காகப் புதைபடிவ எரிபொருட்களை எரித்தல் உள்ளிட்ட காரணிகளால் நாடு முழுவதும் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியா முழுவதும் காற்றில் சராசரி நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) செறிவு பெருமளவு அதிகரித்திருப்பதைத் தரவுகள் உறுதிசெய்கின்றன.
பி.எம். 2.5 துகள்களின் செறிவின் அடிப்படையில் உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகராக புது டெல்லி இருக்கிறது. தற்போதைய நிலை தொடர்ந்தால் டெல்லி மக்களின் ஆயுட்காலம் 10.1 ஆண்டுகளும், உத்தரப்பிரதேச மக்களின் ஆயுட்காலம் 8.9 ஆண்டுகளும், பிஹார் மக்களின் ஆயுட்காலம் 7.9 ஆண்டுகளும் குறையும்.
திடக் கழிவு எனும் தீராப் பிரச்சினை: இந்தியாவில் தினமும் 1.5 லட்சம் டன் குப்பை உற்பத்தியாகிறது. சென்னையில் மட்டும் தினமும் 6,000 டன் திடக்கழிவு உற்பத்தியாகிறது. திடக்கழிவு மேலாண்மை சிக்கல்கள் காரணமாக, இந்தியா முழுவதும் திடக்கழிவு அகற்றும் தளங்களில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுகின்றன.
மும்பையில் தியோனார் குப்பைக் கிடங்கில் 2016இல் ஏற்பட்ட தீவிபத்து மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. சென்னை பள்ளிக்கரணை பெருங்குடிக் குப்பைக் கொட்டும் வளாகத்தில் மீண்டும் மீண்டும் நிகழும் தீ விபத்துகளும் அவை ஏற்படுத்தும் பாதிப்புகளும் தொடர்கின்றன.
ஞெகிழித் தடை இருக்கிறதா? - ஞெகிழித் தடை குறித்த பல அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் கடந்த ஆண்டுகளில் வெளியிட்டுள்ளன. இருப்பினும், சாக்கடைகள்-வடிகால்கள், ஆறு-வாய்க்கால்கள், தெரு-சாலைகள் என எங்கும் நீக்கமற ஞெகிழிக் கழிவு நிறைந்திருக்கிறது.
நாம் குடிக்கும் தண்ணீரிலும், சுவாசிக்கும் காற்றிலும்கூட நுண்ஞெகிழித் துகள்கள் கலந்துவிட்டன. ஒரு முறை பயன்படுத்தப்படும் ஞெகிழிப் பொருள்களுக்கு எதிரான தடை 2019இல் தமிழ்நாட்டிலும், 2022 ஜூலை 1 முதல் நாடு முழுவதும் விதிக்கப்பட்டது. ஆனால், நடைமுறையில் அவை இன்னும் கிடைத்துக்கொண்டிருப்பது, தடை அறிவிப்பு குறித்த பெருங்கேள்விகளை எழுப்புகிறது.
மனிதர்கள் ஏற்படுத்திய பேரழிவு: காட்டை திருத்துதல், மலைப் பாங்கான நிலப்பரப்புகளில் வளர்ச்சி நடவடிக்கைகள் நிலச்சரிவுக்கு முக்கிய காரணி. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் 2018, 2019இல் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
கனமழைக்குப் பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் கேரளத்திலும், கர்நாடகத்தின் குடகு மாவட்டத்திலும் ஏற்பட்ட நிலச்சரிவு சார்ந்த அழிவு நாட்டையே உலுக்கியது. 2015இல் சென்னையில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளமும் அதனால் ஏற்பட்ட சேதமும் தீவிரமான ஒன்று. ஏரிகளையும் நீர் பிடிப்பு பகுதிகளையும் நகரமயமாதல் விழுங்கியதால் ஏற்பட்ட பாதிப்பு அது. அந்தப் பாதிப்பு இன்றும் தொடர்கிறது.
தீவிரமடைந்துவரும் காட்டுத்தீ: இந்தியாவில் ஏற்படும் 90 சதவீதக் காட்டுத்தீ நிகழ்வுகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை என்று ’டிராபிக்கல் ஃபாரெஸ்ட் சயின்ஸ்’ இதழில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது. காடுகளை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட தீ, புல் எரிப்பு, பயிர் எரிப்பு போன்றவற்றாலோ இவை நிகழலாம்.
அதே நேரம், காலநிலை மாற்றம் காட்டுத்தீயைப் பரவலாக்கி வருவதையும் மறுக்க முடியாது. 2020இல் மிசோரமில் ஏற்பட்ட காட்டுத்தீ ஏற்படுத்திய அழிவின் வீரியம் அதிகம். 2021 மார்ச் மாதத்தில், ஒடிசாவின் சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ, அந்த மாநிலத்தின் 26 மாவட்டங்களுக்குப் பரவிப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
கட்டுப்பாடற்ற பெருந்திட்டங்கள்: வெளிப்படையாகவே சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பல பெரிய திட்டங்கள் இந்தியாவில் தற்போதும் நடைமுறைப் படுத்தப்பட்டுவருகின்றன. உத்தரகாண்ட்டில் சர்ச்சைக்குரிய 825 கி.மீ. சார் தாம் நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் அக்கறையை நிராகரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
உத்தரகாண்ட்டில் 1000 மெகாவாட் தேஹ்ரி II அணை உட்பட ஏழு நீர்மின் திட்டங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் உண்மைகளைத் தவறாகச் சித்தரித்தது பின்னர் கண்டறியப்பட்டது. தமிழகத்தில் எட்டு வழிச் சாலை, நியூட்ரினோ ஆய்வகம், மீத்தேன் எரிவாயு கிணறுகள் போன்ற பல திட்டங்கள் கடுமையான எதிர்ப்பை இன்றும் சந்தித்துவருகின்றன.
நீர்த்துப்போக வைக்கும் சட்டத்திருத்தங்கள்: கடந்த எட்டு ஆண்டுகளில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பல்லுயிர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சட்டங்களில் பல்வேறு திருத்தங்களைச் செய்துவருகிறது. பெரும்பாலான தொழில்துறை திட்டங்களுக்கும், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறுவதை வலியுறுத்தும் பிரிவுகளை, அந்தத் திருத்தங்கள் நீர்த்துப்போகச் செய்தன.
வன (பாதுகாப்பு) சட்டம் 1980 இல் 2021 ஜூலையில் முன்மொழியப்பட்ட மாற்றம் சுற்றுச்சூழல் சுற்றுலாவை அனுமதிக்கும் நோக்கிலிருந்தது. பல்லுயிர் பாதுகாப்பு சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றம் வெளிநாட்டுப் பங்குகளை வைத்திருக்கும் இந்திய நிறுவனங்களுக்குச் சாதகமாக இருந்தது.
காட்டைக் கொல்லுதல்: 1947 உடன் ஒப்பிடும்போது இந்தியாவின் மக்கள்தொகை மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்டது. பெருகிவரும் மக்கள்தொகைக்கு இடமளிக்கும் வகையில், ஒரு காலத்தில் மரங்கள் சூழ்ந்திருந்த பரந்த காட்டுப் பகுதிகள் காடழிப்பைச் சந்தித்துள்ளன. 29,௦௦௦ சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள காட்டு நிலங்கள் விவசாய நிலங்களாகவும் குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.
தேசியத் தொலையுணர்வு மையம்’ (NRSC) வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் வரைபடங்கள் காடுகளின் அழிப்பை வெட்டவெளிச்சமாக்கி உள்ளன. 2015-க்குப் பிறகு இந்தியக் காடுகளின் நிலை மிக மோசமாகச் சரிந்துவருவதையும் அதன் தரவுகள் உணர்த்துகின்றன.
அதிகரிக்கும் மக்கள் குரல்: சுற்றுச்சூழல் செயல்பாடுகள் கடந்த பத்தாண்டுகளில் மக்களின் உரிமைகள், வாழ்வாதாரத்திற்கான போராட்டங்களாக மாறியுள்ளன. ஹஸ்தியோ ஆரண்யா காட்டில் நிலக்கரிச் சுரங்கத்துக்கு எதிராகக் கடந்த செப்டம்பரில் சத்தீஸ்கரில், பழங்குடியின சமூகத்தினர் 300 கி.மீ. தூரம் அணிவகுத்து முன்னெடுத்த போராட்டம் உலக அளவில் கவனிக்கப்பட்டது.
கோவா காட்டுப் பகுதிகளில் 40,000 மரங்களை வெட்டி வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராகவும், மும்பை மெட்ரோ ரயிலுக்காக ஆரே காட்டுப்பகுதி அழிப்புக்கு எதிராக, தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் மீத்தேன் எரிவாயு திட்டங்கள், மேகமலை நியூட்ரினோ திட்டம் போன்றவற்றுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் தொடர்கின்றன.
எரிசக்தி அதிர்ச்சி தராமல் இருக்க… மின்சாரமும் வாகனப் பயன்பாடும் நிலக்கரி, பெட்ரோல் உள்ளிட்ட மாசுபடுத்தும் ஆற்றல் ஆதாரங்களையே இன்றும் நம்பியுள்ளன. இதன் விளைவாக அதிகரிக்கும் பசுங்குடில் வாயு உமிழ்வு, உலகின் அழிவைத் துரிதப்படுத்தி வருகிறது. 2030க்குள் இந்தியா தனது ஆற்றல் தேவையின் 50 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களின் மூலம் பெறும் என்று அறிவித்திருக்கிறது.
2030 இல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் 450 ஜிகாவாட் என்கிற இலக்கை இந்தியா எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் காற்றாலை மின்னுற்பத்தித் திறனில் 25 சதவீதமும், தேசியப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் 15 சதவீதமும் தமிழ்நாட்டின் பங்களிப்பாக இருக்கின்றன.