

ரஜினியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்றவர், அவரது நண்பர், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபு. நடிகர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி பிரபலம் எனப் பல துறைகளில் தடம் பதித்தவர் அவருடைய மகள் லட்சுமி மஞ்சு.
மணி ரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமான இவர், அதன் பின்னர் ‘காற்றின் மொழி’ உள்பட பல தமிழ்ப் படங்களில் நடித்திருந்தார். ஒரு இடைவெளிக்குப் பிறகு ‘நான் ஸ்டாப்’ என்கிற நேரடித் தமிழ்ப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..
தெலுங்கு சினிமாவில் ஒரு தயாரிப்பாளர் என்கிற அடிப்படையில் கூறுங்கள்.. இருநூறு முதல் ஐநூறு கோடியில் படமெடுக்கும் கலாச்சாரம் சரியான பாதையா?
நிச்சயமாக இல்லை. மாஸ் ஹீரோ, ஹீரோயிசம் என்று கூறிவிட்டு, குறைந்தது பத்து படங்கள் எடுக்க வேண்டிய பணத்தை, ஒரு படத்துக்கு செலவு செய்தால் அந்தப் பணம் திரும்பி வந்துவிடும் என்பதற்கு என்ன கேரண்டி இருக்கிறது? 35 வருடங்களுக்கு முன்னால் வெளியான ‘முதல் மரியாதை’ என்றாலும் தற்போது வெளியான ‘ராக்கெட்ரி’ என்றாலும் அவற்றில் மாஸ் ஹீரோவும் உண்டு, ஹீரோயிசமும் உண்டு. அந்தப் படங்களில் கதைக்கு என்ன தேவையோ அதற்கு மட்டும்தான் செலவு செய்திருக்கிறார்கள். அவை பெற்றுள்ள வெற்றிதான் உண்மையான வெற்றி. எல்லா காலத்திலும் கதைக்குத்தான் வெற்றி கிடைக்கிறது.
சமீபத்திய பாலிவுட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அமீர் கானின் ‘லால் சிங் சத்தா’வுக்கு என்ன நேர்ந்தது? பெரிய பட்ஜெட்டில் அக்ஷய் குமார் நடித்த ‘சாம்ராட் பிருத்விராஜ்’ படம் படுதோல்வி அடைந்தது. ஹீரோ இருக்கிறார் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று நினைத்தால் பல நூறு கோடிகள் பாழாவதைத் தடுக்க முடியாது.
ஒரு வகையில் இது அராஜகம். பாலிவுட்டில் அளவான பட்ஜெட்டில் சமீபத்தில் வெளிவந்த ‘ஜுக் ஜுக் ஜியோ’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.
அதுவொரு குடும்பக் கதை. நீங்கள் எப்படிப்பட்டக் கதையை எடுத்தாலும் அது அழுத்தமான கதையாக இருக்க வேண்டும். அதற்குள் ஆடியன்ஸை உட்கார வைக்கும் உணர்வும் திரைக்கதையும் தேவை.
‘பான் இந்தியா’ ரிலீஸ் என்பதே அபத்தம் என்கிறீர்களா?
நான் அப்படிச் சொல்லவில்லை. ஒரு கதை எந்த மொழியில் உருவானாலும் அது எத்தனை மொழிகளில் வெளியானாலும் அது உருவாக்கும் உணர்வில் நாம் கலாச்சார ரீதியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் தேசிய உணர்ச்சி இந்திய அளவில் ஆடியன்ஸை இணைத்தது.
அதனால்தான் அது வெற்றிபெற்றது. ‘கே.ஜி.எஃப்’, ‘புஷ்பா’ படங்கள் தமிழ்நாட்டில் வெற்றிபெற்றதன் பின்னணியில், அந்தப் படங்களில் உருவாக்கப்பட்ட ‘உலக’கங்களுடன் தமிழ் மக்களுக்கு தொடர்பும் உணர்வுத் தொடர்ச்சியும் இருந்ததுதான் காரணம். ‘பான் இந்தியா’ என்று சொல்லிக்கொண்டு வரும் எல்லா படங்களுக்கும் இங்கே வரவேற்பு இருப்பதில்லை என்பதை கவனியுங்கள்.
கரோனா அச்சுறுத்தல் முடிந்த பிறகும் திரையரங்குகளுக்காகத் தயாரிக்கப்பட்ட பல படங்கள் ஓடிடியில் தஞ்சமடைவது ஏன்?
எந்தவொரு தயாரிப்பாளரும் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடவே விரும்புவார். தமிழ்நாட்டுத் தயாரிப்பாளர்களுக்கு இந்த உணர்வு இன்னும் அதிகம். கடந்த ஆறு மாதத்தில் திரையரங்குகளில் வெளியான தமிழ்ப் படங்களின் பட்டியல் பெரியது. தெலுங்கு சினிமாவிலோ ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘புஷ்பா’ தவிர சொல்லிக்கொள்ள பெரிதாக எதுவுமில்லை. ஒரு படம் ரிலீஸுக்கு தயாரானதும் அது தூங்கக் கூடாது.
திரையரங்கோ, ஓடிடியோ தயாரிப்பாளர் தனது பணத்துக்கு வீணாக வட்டி கட்டிக்கொண்டிருக்க முடியாது. அதனால்தான் பலர் நேரடியாக ஓடிடியில் வெளியிடுவதை தங்களது முதலீட்டுக்கான பாதுகாப்பாக நினைக்கிறார்கள். அளவான லாபம் போதும் என்று நினைப்பவர்கள் ஓடிடியைத் தேர்வு செய்கிறார்கள்.
அதில் தவறில்லை. அதேநேரம், திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானால், வெற்றிபெறும், லாபம் குவிக்கும் என்று நம்புகிறவர்கள் துணிந்து இறங்கி வெற்றிபெறுகிறார்கள். இந்த தன்னம்பிக்கையை ‘ஃபைனல் புராடெக்ட்’தான் கொடுக்கும்.
எப்படி இவ்வளவு நன்றாகத் தமிழ் பேசுகிறீர்கள்?
நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையின் தியாகராய நகரில். இது எனது ஊர். தமிழ்தான் எனக்கு முதல் மொழி. அதன்பிறகுதான் தெலுங்கு கற்றுக்கொண்டேன். நான் ஹாலிவுட் படங்கள் பார்த்து வளர்ந்தவள் கிடையாது. பாரதிராஜா சார் படங்களையும் மணி ரத்னம் சார் படங்களையும் பார்த்து வளர்ந்தவள்.
‘நான் ஸ்டாப்’ படத்தில் ஏற்றுள்ள காவல் அதிகாரி கதாபாத்திரம் பற்றி கூறுங்கள்?
இந்தப் படத்தில் நான் அடிக்கிற போலீஸ் இல்லை. தோள் மேல் கைபோட்டு அட்வைஸ் செய்கிற போலீஸ் ஆபீசர். அதேநேரம், எந்த இடத்தில் கெத்தாக நடந்துகொள்ள வேண்டுமோ அங்கே வேறொரு முகம் காட்டுவேன்.
எனது கதாபாத்திரத்தின் பெயர் ரஜினி. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளரான ஐயப்பன் பிரேம்குமார் இயக்குகிறார். அவர் நல்ல திரைக்கதையுடன் வந்து சொன்னபோது கதாபாத்திரத்துடன் உடனே ‘கனெக்ட்’ ஆகி நடிக்க ஒப்புக்கொண்டேன். துவாரகா பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசைய மைக்கிறார்.
தர்ஷன், மாதூரி ஜெய்ன், விஜய் வர்மா, ஆர்.ஜே. ஆசீக் என பத்துக்கும் அதிகமான நடிகர்கள் இருக்கிறார்கள். நான்கு இளைஞர்களை மையப்படுத்தி ஒரே இரவில் நடக்கும் கதை. சோசியல் த்ரில்லர் என்று சொல்லலாம். ஜாலியாகத் தொடங்கும் படம் சட்டென்று ‘சீரியஸ்’ மூடுக்கு மாறி பரபரவென்று நகரும். தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறோம்.