

சமையல் அறைக்கு வருகிறார் அப்பா. அடுப்பை ஏற்றிக் கொண்டே சமையலறை மேடை மேல் இருக்கும் கணினி ஒலிப்பெட்டி (speaker) போன்ற அந்தக் கருவியைப் பார்த்து, ‘ஓகே கூகுள், பிளே மார்னிங் பிளே லிஸ்ட்’ என்கிறார். உடனே அந்தக் கருவி மேல் புறத்தில் பதிந்திருக்கும் சின்னச் சின்ன மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டே சுழல்கின்றன. அதிலிருந்து ஒரு பெண் குரல் அவர் சொன்னதையே திரும்பச் சொல்லி ஒரு பாடலை இசைக்கிறது.
அடுத்து, வேகமாக வெளியே கிளம்பும் அம்மாவிடம் “உன்னுடைய விமானம் தாமதமாகக் கிளம்புகிறது” எனச் சொல்கிறது அந்தக் கருவி. வீட்டு அறைகளின் மின்விளக்குகளை எரியவைக்கச் சொன்னால் செய்கிறது, வீட்டுப் பாடத்தில் குழந்தைகள் சந்தேகம் கேட்டால் பதில் சொல்கிறது, நகரின் குறிப்பிட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்பான தகவலைக் கேட்டாலும் சொல்கிறது. இப்படிச் சகலகலா தொழில்நுட்ப சகாவாக உடனுக்குடன் பலவற்றைச் சொல்கிறது; சொன்னதை செய்கிறது ‘கூகுள் ஹோம்’.
குரலால் உலகை இயக்கலாம்
இதை வடிவமைத்தவர் கூகுள் நிறுவன ஊழியரான மரியோ குவைரோஸ். கூகுள் குரோம்காஸ்ட்டை (Google Chromecast) உருவாக்கியதும் இவர்தான். கூகுள் தலைமை செயல் அதிகாரியான தமிழர் சுந்தர் பிச்சை சில தினங்களுக்கு முன்பு கூகுள் ஐ/ஓ 2016 (Google I/O 2016) என்னும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ‘கூகுள் ஹோம்’-ஐ அறிமுகப்படுத்தினார். அன்றைய தினமே,
“நான் எதிர்காலத்தைப் பார்க்கிறேன். அதில் கருவி என்ற ஒன்றே இல்லாமல் போகப் போகிறது. எல்லாவற்றுக்கும் மொபைல் போனைப் பயன்படுத்தும் இந்த உலகம் எல்லாவற்றுக்கும் செயற்கை அறிவுத்திறனைத் தேடும் உலகமாக மாறப்போகிறது” எனத் தனது கூகுள் வலைப்பூவில் சுந்தர் பிச்சை பதிவிட்டார்.
வயர்லெஸ் ஒலிப்பெட்டியான இந்தக் கருவி குரல் ஆணையில் இயங்கும் கருவியாகும். இதனுடைய சிறப்பம்சம் மற்றத் தொழில்நுட்பக் கருவிகளைத் தொடர்புகொண்டு உடனுக்குடன் தகவல்களைப் பரிமாற்றுவது. 2017-ல்தான் இது சந்தைக்கு வரும் எனச் சொல்லப்படுகிறது. விலை இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.
அதற்கும் மேலே
ஏற்கெனவே ‘அமேசான் எக்கோ’ (Amazon Echo) என்னும் வயர்லெஸ் ஸ்பீக்கரை 2015-லேயே அமேசான்.காம் அறிமுகப்படுத்தியது. அதனிடம் ‘அலெக்ஸா’ (Alexa) என அழைத்தால் பாடல் இசைப்பது, அலாரம் வைப்பது, போக்குவரத்து நெரிசல் தகவல்களை அறிவிப்பது, ஒலிப்புத்தகங்களை வாசிப்பது உள்ளிட்ட பலவற்றைச் செய்யும். ‘கூகுள் ஹோம்’ இதற்கு ஒருபடி மேலே தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்து நிற்கிறது.
கூகுள் காஸ்ட் (Google Cast) மற்றும் குரோம்காஸ்ட் (Chromecast) தொழில்நுட்பமும் இதனுடன் இணைக்கப் பட்டிருப்பதால் பல அதிநவீனத் தொழில்நுட்பக் கருவிகளை இதன் மூலமாகவே இயக்க முடியும் உதாரணத்துக்கு, கூகுள் ஹோமிடம் சொல்லி யூடியூப் வீடியோகளைத் தொலைக்காட்சியில் பார்க்கலாம், கூகுள் பிளே மியூசிக்கின் மூலமாக வீட்டிலிருக்கும் அத்தனை ஸ்பீக்கர்களையும் இயக்கலாம்.
என்ன நடக்கிறது?
உலகத்தைக் குரலால் இயக்கும் தொழில்நுட்பம் என அசத்தும் இந்த கூகுள் கண்டுபிடிப்புக்குப் பின்னால் மிகப் பெரிய சிக்கல் ஒன்று ஒளிந்திருக்கிறது. அதுதான் நம்முடைய அந்தரங்கம்.
ஏற்கெனவே மின்னஞ்சல், தேடு பொறி, கூகுள் மேப் போன்ற சேவைகளை இலவசமாகத் தந்து நம்மைப் பற்றிய அத்தனை தகவல்களைத் திரட்டிவைத்திருக் கிறது கூகுள். நம்முடைய வங்கி கணக்கு, தனி நபர் விவரங்கள், ஒளிப்படங்கள், தகவல் பரிமாற்றங்கள் என நம் அந்தரங்கம் மொத்தத்தையும் நாம் இணைய தளத்தில் வெவ்வேறு விஷயங்களில் பதிவிடுகிறோம். நம்முடைய தகவல்களைப் பத்திரமாகப் பதிந்துவைத்துக் கொள்வதாக மட்டுமே நினைக்கிறோம். ஆனால் உண்மையில் நம்மைப் பற்றிய அத்தனை தகவல்களையும் நாம் சமர்ப்பிக்கிறோம்.
இவை வெவ்வேறு நோக்கில் பல நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன என்னும் குற்றச்சாட்டு கூகுள் மீது சமீபகாலமாகச் சொல்லப்படுகிறது. ஆகவேதான் வேலை இல்லாமல் திரிந்த காலம்வரை கேட்பார் அற்று இருந்த நாம், புதிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததும் கிரெடிட் கார்ட் வாங்கச் சொல்லி போனில் அழைப்பு வருகிறது. டாக்ஸி பதிவு செய்ய ஏதோ ஒரு டாக்ஸி நிறுவனத்துக்கு அழைத்தால் உடனடியாக நம்முடைய தெருவைச் சொல்கிறார்கள்.
அதிலும் நம்முடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டே அத்தனை தகவல்களைத் திரட்டி வேலைகளையும் செய்து தரும் ‘கூகுள் ஹோம்’ நம் வீட்டுக்குள் வந்தால் என்னவாகும்?