

வீடுகளில் திண்ணைகள் அரிதாகிவிட்டதாலோ என்னவோ அனைவரையும் உற்ற சொந்தங்களாகப் போற்றும் மனப்பாங்கும் மக்கள் மத்தியில் குறுகிவிட்டது.
மறந்துவிட்ட அந்த மரபின் அடையாளச் சின்னத்தை நினைவுகூரும் விதமாக, தனது அமைப்புக்கு ‘திண்ணை’ என்று பெயர் சூட்டியிக்கிறார் ஆசிரியர் கோ.செந்தில்குமார்.
தொடர் முயற்சி
தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தமிழாசிரியர் செந்தில்குமார். உரிய வழிகாட்டல் இல்லாதபோதும் அஞ்சல் வழியிலேயே பிஎட், எம்ஏ, வரை முடித்தவர்.
அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுவதற்காக அவர் ஆரம்பித்ததுதான் ‘திண்ணை’. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தேவையான தயாரிப்பு களையும் பயிற்சிகளையும் வழங்குவதே திண்ணையின் அடிப்படை நோக்கம்.
இதற்காக ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் பல துறைகளைச் சேர்ந்த 26 பயிற்றுநர்கள் செந்தில்குமாரின் ஒருங்கிணைப்பில் செயல்படுகிறார்கள்.
இவர்கள் ஆண்டுக்கு ஐந்து மாதங்கள் வீதம் இரண்டு பிரிவாகப் பிரிந்து தலா 50 நாட்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்கள். இதில் பயிற்சி எடுக்கும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளை சமாளிக்கும் வகையில் ஊக்கமும் தன்னம்பிக்கையும் பெறுகிறார்கள்.
- கோ.செந்தில்குமார்
கடந்த மூன்றாண்டுகளில் இங்கு பயிற்சி எடுத்தவர்களில் 100 பேர் இப்போது அரசுப் பணிகளில் இருக்கிறார்கள். அண்மையில் வெளிவந்த க்ரூப் 2 முதல் நிலைத்தேர்வில், இங்கு பயின்ற 36 பேர் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இதுவே ‘திண்ணை’க்குக் கிடைத்த வெற்றி.
அறிவூட்டும் மேடை
இந்தப் பயிற்சிகளுக்குக் கட்டணம். ஏதும் இல்லை அது மட்டுமல்லாமல், திறமையும் தகுதியும் இருந்தும் உயர் கல்வி படிக்க முடியாமல் இருக்கும் ஏழை மாணவர்களில் பத்துப் பேரின் உயர் கல்விக்கான செலவை வருடாவருடம் ஏற்றுக்கொண்டு அவர்களைப் படிக்கவைக்கிறது ‘திண்ணை’.
இதற்காகவே, இந்த அமைப்பில் இருக்கும் 100 அங்கத்தினர்களும் சேர்ந்து ‘சாளரம்’ என்ற அமைப்பை வைத்திருக்கிறார்கள். அங்கத்தினர்கள் தரும் நிதியுதவியைக் கொண்டே ஏழை மாணவர்களை உயர் கல்விக்கு அனுப்புகிறது திண்ணையின் சாளரம்.
அடுத்ததாக, பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆதாரக் கல்வியை அளிப்பது இந்த அமைப்பின் நோக்கமாகும். இதற்காக ஆண்டுக்கு 50 மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு ஏழு வாரங்களுக்கு 14 நாட்கள் ஆதாரக் கல்வியைப் போதிக்கிறார்கள்.
இதன் மூலம், அந்த மாணவர்கள் ஊரகத் திறனாய்வுத் தேர்வுகளில் வெற்றிபெற்று கல்வி உதவித் தொகை பெற்று கல்வியைத் தொடர முடியும் என்கிறார் செந்தில்குமார்.
மேலும், தனது பள்ளியில் படிக்கும் ஆதரவற்ற குழந்தைகளின் படிப்புக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆசிரியர் குழு மூலமாகச் செய்துவரும் செந்தில்குமார், “எனக்குக் கிடைக்காத வழிகாட்டல்கள் அடுத்த தலைமுறைக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ‘திண்ணை’யைத் தொடங்கினோம்.
முதல் ஆண்டு எங்களிடம் பயிற்சி எடுத்த எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட 15 பேரும் இப்போது அரசுப் பணிகளில் இருக்கிறார்கள். இப்போது ஆண்டுக்கு 400 பேர் வரை எங்களது பயிற்சி மையத்தில் பயிற்சி எடுக்கிறார்கள்.
இடவசதி இல்லாததால் நுழைவுத் தேர்வு வைத்து பயிற்சிக்கு மாணவர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்’’ என்கிறார்.
திண்ணையின் மகத்துவத்தை மீண்டும் உலகுக்குச் சொல்கிறது இந்த ‘திண்ணை’.
தொடர்புக்கு: 9942052222