ஜெயிக்கலாம் ஜிம்னாஸ்டிக்ஸில்!

ஜெயிக்கலாம் ஜிம்னாஸ்டிக்ஸில்!
Updated on
2 min read

இருபத்தியிரண்டு வயதே ஆன தீபா கர்மகரைப் பெருமையுடன் திரும்பிப் பார்க்கிறது இந்திய விளையாட்டுத் துறை! பிரேசிலின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளத் தகுதி பெற்றிருக்கும் முதல் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை இவர். சும்மா இல்லை! 52 வருடங்களுக்குப் பிறகு ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய ஒலிம்பிக் வீரர் என்கிற சாதனையைப் படைத்திருக்கிறார். இந்த நேரத்தில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டின் மீது வெளிச்சம் படர்கிறது. ஜிம்னாஸ்டிக்ஸ் என்றாலே அது சர்க்கஸ்காரர்களின் விளையாட்டு என்ற பரவலான எண்ணம் இருக்கும் நிலையில், அது “விளையாட்டுகளின் தாய். ஜிம்னாஸ்டிக்ஸ் பழகினால் எந்த விளையாட்டிலும் மாணவர்கள் வெற்றிகளைக் குவிக்கலாம்” என்று விவரிக்கிறார், சென்னை, நந்தனம் உடற்பயிற்சிக் கல்லூரியில் ‘கூர்மா’ ஜிம்னாஸ்டிக்ஸ் பள்ளியை நடத்திவரும் பயிற்சியாளரும் தேசிய நடுவருமான ராஜா.

ஆதியில் ஆடைகள் இல்லை

போர், சாகசங்கள் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய கிரேக்கர்கள் இந்த உலகுக்குத் தந்த பல விளையாட்டுகளில் ஒன்றுதான் ஜிம்னாஸ்டிக்(Gtmnastic). ஆரம்பத்தில் ஆண்களின் விளையாட்டாக இருந்தது. இன்று உலகம் முழுவதும் பெண்கள் இவ்விளையாட்டு கலையில் அதிகமான ஈடுபட்டும் சாதனைகள் படைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். கிரேக்க மொழியில் ஜிம்னோ Gymno என்ற வார்த்தைக்கு ‘நிர்வாணம்’ என்று அர்த்தம். அதாவது ஆதியில் ஆடை அணியாமல் இந்த விளையாட்டைப் பழகவும் பலர் மத்தியில் நிகழ்த்தவும் செய்திருக்கிறார்கள்.

போட்டி குறைவு, வெற்றி அதிகம்!

தங்கள் பிள்ளைகள் டாக்டர் அல்லது என்ஜினியர் ஆக வேண்டும் என்று விரும்பு வதைப் போலவே விளையாட்டு என்று வந்து விட்டால் கிரிக்கெட் அல்லது டென்னிஸ் விளை யாட்டில் சாதிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புவார்கள். ஆனால் இந்த விளையாட்டுகளில் மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது. “இந்நிலையில் மாவட்ட, மாநில, தேசிய அளவில், மிகக் குறைவான போட்டிக்கு நடுவில் பதக்கங்களை அள்ளிக் கொண்டுவரும் ஒரு விளையாட்டாக ஜிம்னாஸ்டிக் இருக்கிறது. மாவட்ட, மாநிலப் போட்டிகளில் கலந்துகொண்டு புள்ளிகளைப் பெற்றிருந்தாலே ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். ஜிம்னாஸ்டிக்குக்கு மருத்துவக் கல்லூரிகளில் கூட கோட்டா இருக்கிறது. அரசு வேலைகளில் ஒதுக்கீடு இருக்கிறது” என்கிறார் ராஜா.

காற்றில் பறக்கலாம்

ஏதோ வேலைக்கான விளையாட்டு என நினைத்துவிட வேண்டும். இது ஒரு அற்புதக் கலை என்கிறார் பயிற்சியாளர் ராஜா. “தம்லிங், காக்கில், ரோல், அப்ஸ்டார்ட்ஸ் ஆகிய அடிப்படை ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள் அனைத்தும் உடலை ரப்பர் மாதிரி வளைக்கக்கூடியதாக மாற்றிவிடும். உச்சி முதல் உள்ளங்கால் வரை ரத்த ஓட்டம் ஒரே சீராகக் கிடைக்கும். இதனால் சுவாசக் கோளாறு தவிர்க்கப்படும்” என்கிறார். அத்தலெட்ஸ் உட்பட எந்த விளையாட்டைத் தேர்வு செய்வதற்கு முன்பும் ஜிம்னாஸ்டிக்ஸை குறைந்தது ஒரு ஆண்டு கற்றுக்கொண்டால் காற்றில் பறப்பதுபோன்ற உணர்வு நம் உடலுக்குக் கிடைத்துவிடுமாம்.

“ஜிம்னாஸ்டிக்கில் இரண்டு வகை இருந்தாலும் இந்தியாவில் நாங்கள் கற்பித்துவருவது ‘ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்’ தான். ஒலிம்பிக் வரை முன்னேறியிருக்கும் தீபா இந்தமுறையில் பயின்றவர்தான்” என்கிறார்.

மாணவர்களுக்கு 6 மாணவிகளுக்கு 4

ஜிம்னாஸ்டிக் போட்டிகள் மாணவர்களுக்கு ஃப்ளோர் (Floor), வால்ட் (Vault), ரோமன் ரிங்ஸ் (Roman Rings), பேரலல் பார்ஸ் (Parallel Bars), ஹரிசான்டல் பார்ஸ் (Horizontal Bars), போம்மெல் ஹார்ஸ் (Pommel Horse) என 6 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. மாணவிகளுக்கு ஃப்ளோர் (Floor), வால்ட்(Valt), அன்னீவன் பார்ஸ் (Unneven Bars), பேலன்ஸிங் பீம்ஸ் (Balancing Beams) என 4 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன.

ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் வெல்வது எளிதானது. காரணம் நல்ல ஸ்டைலில் சுறு சுறுப்பான வேகத்தில் செய்து காட்டுபவர்களுக்கு முழுமையான புள்ளிகள் தரப்படுகின்றன. எந்தப் பிரிவில் போட்டியிட்டாலும் வீரர், வீராங்கனைகள் தரும் டிவிஸ்ட்ஸ் முக்கிய மானது. பங்கேற்பாளரின் உடல்மொழி சுமாராக இருந்தாலும் பிரச்சினையில்லை; ஆனால் ஃபர்பெக்ஷனாகச் செய்து காண்பித்தால் புள்ளிகளை அள்ளிவிடலாம்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரது மாணவர்கள் அம்பாக அந்தரத்தில் பல்டியடித்து மின்னலாக வந்து நின்று முத்திரை காட்டி வணக்கம் செய்தார்கள். கடகடவென்று ஒருவர் மேல் ஒருவர் ஏறி ஒரு மனிதகோபுரம் கட்டினார்கள். மனிதச் சக்கரமாய் மாறினார்கள். இவர்களில் பலர் நாளைய சாதனையாளர்களாக இருக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in