

மணிவிழா கொண்டாட்டம் என்றால் பந்தல் கட்டி, ஊரைக் கூட்டி விருந்து வைப்பது மட்டும்தானா? தங்களது ஆசானின் மணிவிழாவை அறிவுத் திருவிழாவாகக் கொண்டாடி அசத்தினார்கள் கோவை பேராசிரியர்கள். தகுதி வாய்ந்த ஏழை மாணவர்களைக் கணித ஆராய்ச்சியில் முன்னுக்குக் கொண்டுவர உறுதிபூண்டிருக்கிறார்கள் இவர்கள்.
பெருமை சேர்க்கும் மாணவர்கள்
கோவை பாரதியார் பல்கலைக்கழகக் கணிதத் துறை தலைவரான முனைவர் கே.பாலசந்திரன், நாமக்கல் மாவட்டம் முத்துகா பட்டியைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் விடுதலைப் போராட்ட வீரர் கிருஷ்ணனின் மகன். 1988-லிருந்து இதுவரைக்கும் 46 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியவர். இவரது வழிகாட்டலில் பி.ஹெச்.டி. பெற்றவர்கள் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட சிறந்த கல்வி நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகள் வகிக்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளாக, அமெரிக்கா, ஜப்பான், கொரியா, சீனா ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் வருகைதரு பேராசிரியராக இருக்கும் பாலசந்திரனுக்கு மார்ச் 25-ல் அறுபதாம் ஆண்டு மணி விழா.
ஏட்டிலிருந்து சமூகத்துக்கு
இந்த விழாவை வழக்கமான சம்பிரதாயமாக அல்லாமல் சர்வதேசக் கருத்தரங்கமாக நடத்தினார்கள். மார்ச் 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கோவை மண்டல அண்ணா பல்கலைக்கழகத்தின் கணிதத் துறைகள் இணைந்து நடத்தின.
கொரியா, சீனா, அமெரிக்கா நாடுகளின் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இந்திய அளவில் முன்னணி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 12 விஞ்ஞானிகள் இதில் கலந்துகொண்டனர். பாலசந்திரனின் வழிகாட்டுதலில் பி.ஹெச்.டி. முடித்த 46 பேரும் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களையும் எதிர்காலத் திட்டங்களையும் எடுத்து வைத்தார்கள்.
“இது ஒரு சந்தோஷமான நிகழ்வு. எல்லோருக்கும் இந்த அரிய வாய்ப்பு கிடைத்துவிடாது. அந்த வகையில் மிகுந்த மன நிறைவோடு இருக்கிறேன். எனது மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, எஞ்சிய பணிக் காலத்துக்குள் இன்னும் பல ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற உந்துதலை எனக்குள்ளே விதைத்திருக்கிறது” என்கிறார் பாலசந்திரன்.
வெறுமனே கூடிக் கலைந்தோம் என்றில்லாமல், சென்னையைப் போலக் கோவையிலும் கணித ஆராய்ச்சி மையம் ஒன்றை நிறுவிக் கணித ஆய்வில் ஆர்வம் கொண்ட ஏழை மாணவர்களை வழிநடத்த பாலசந்திரனும் அவரது மாணவர்களும் முடிவெடுத்திருக்கிறார்கள். பாலசந்திரனைத் தொடர்புகொள்ள: 9442709274
பாலசந்திரன்