

ஹொய்சாளர்களுக்குப் பிறகு கங்கபாடி, கோலார் உள்ளிட்ட பகுதிகள் விஜயநகரப் பேரரசின் ஆளுமைக்குள் வந்தன. இதனிடையே, கங்கர்களால் கைவிடப்பட்ட கோலார் பகுதியை நுளம்பர்கள் கைப்பற்றினார்கள். கங்கர்களை வெல்வதற்கு முன்னதாக கோலாரில் நுளம்பர்களைத் தோற்கடிக்க வேண்டும் என திட்டமிட்ட ராஜேந்திரன், அதன்படியே அவர்களை அங்கிருந்து துரத்தினார்.
தென்கிழக்கு கர்நாடகம், வடமேற்கு தமிழகம், தென்மேற்கு ஆந்திரம் இம்மூன்று பகுதிகளுக்கும் மையமான இடத்தில் கோலார் அமைந்திருக்கிறது. எனவே இம்மூன்று பகுதிகளையும் கண்காணிக்க ஏதுவாக கோலாரில் நிரந்தரப் படை முகாம் ஒன்றை நிறுத்தி வைத்த ராஜேந்திரன், கோலாரை உள்ளடக்கிய பரந்து விரிந்த பகுதியை நிகரிலிச் சோழ மண்டலம் எனவும் பிரகடனம் செய்தார்.
சோழர் படைத்தளபதிகள்
கும்பகோணம் அருகேயுள்ள அம்மன்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் ராமன் என்ற பிரம்மராயன் ராஜராஜனின் தளபதியாக இருந்தவர். இவரது மகன் மாறாயன் அருள்மொழி என்ற உத்தம சோழ பிரம்மராயன். இவர்தான் கோலார் படைமுகாமுக்குத் தளபதியாக இருந்தார் என்கிறது கோலாரில் உள்ள கல்வெட்டுச் சான்று. சாளுக்கியர்களைத் தமிழகம் நோக்கி முன்னேற விடாமல் தடுப்பதற்கும் சோழர்களுக்கு கோலார் முகாம் பயன்பட்டது.
கோலாரில் ராஜராஜன் கட்டிய கோலாரம்மா கோயில் வடக்குப் பார்த்தது. இதனுள்ளே சப்த கன்னிகா சிலைகள் சுதை சிற்பங்களாக உள்ளன. பிற்காலத்தில் இதை ஒட்டியே கிழக்கு பார்த்த சந்நிதி வைத்து ராஜேந்திரனும் ஒரு கோயிலைக் கட்டினார். அபிஷேகங்கள் செய்ய ஏதுவாக, தான் கட்டிய கோயிலுக்குள் கல்லால் ஆன சப்த கன்னிகா சிலைகளை பிரதிஷ்டை செய்தார். இந்தக் கோயிலின் விமானம் வண்டிக்கூடு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜராஜன் கட்டிய கோயிலிலும் விமானம் இருந்திருக்கிறது. ஆனால், அது பிற்காலத்தில் சிதிலமடைந்து போயிருக்கிறது. இவ்விரண்டு கோயில்களுமே இப்போது வழிபாட்டில் உள்ளன.
இந்தக் கோயில்களுக்குப் பூஜைகள் செய்வதற்காக கோலார் அருகே அரையூர் என்ற கிராமத்தை சிவ பிராமணர் ஒருவருக்கு ராஜேந்திரன் எழுதி வைத்ததாக கோயிலின் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள ஒரு கல்வெட்டு சொல்கிறது. கோயிலின் உள் முகப்பில் கல் மண்டபம் ஒன்று எழுப்பட்டுள்ளது. இந்த மண்டபம் ராஜேந்திரனின் படைத் தளபதிகளில் ஒருவரான சேனாபதி ஸ்ரீவிக்கிரம சோழ சோழிய வரையன் என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இதுபற்றிய சுருக்கம் அந்த மண்டபத்தில் உள்ள கருங்கல் தூண்களில் தமிழ் எழுத்துக்களாகப் பொறிக் கப்பட்டுள்ளது.
போர்க்களம் காட்டும் பலகைச் சிற்பம்
கோலாரம்மா கோயிலின் முன் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள பலகைச் சிற்பம் ஒன்றில் போர்க்களக் காட்சிகள் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சரவையில் அவைப் புலவராக இருந்தவர் ஜெயங்கொண்டார். இவர் இயற்றிய கலிங்கத்துப் பரணியில், போர் தொடங்கி முடியும் வரை போர்க்களக் காட்சிகளை தத்ரூபமாக விவரித்திருப்பார். அந்த வர்ணனை முழுவதையும் ஒரே கல்லில் பலகைச் சிற்பமாய் வடித்திருக்கிறார் சிற்பி.
பலகைச் சிற்பத்திலிருந்த ஒவ்வொரு காட்சியையும் நமக்கு விளக்கிய பேராசிரியர் சிவராமகிருஷ்ணன், “சோழப் படையெடுப்பு முடிந்த பிறகு இந்த பலகைச் சிற்பம் வடிக்கப்பட்டிருக்க வேண்டும். உலக அளவில், தமிழர் களின் வீரத்தைப் பிரதிபலிக்கும் மிகச் சிறந்த சிற்பத்தொகுப்பு இதுவாகத்தான் இருக்க வேண்டும்’’ என்று பெருமிதம் கொண்டார்.
ராஜேந்திரன் புனரமைத்த சமணர் கோயில்
ஹனசோஹே - மைசூரிலிருந்து குடகு நோக்கிச் செல்லும் வழியில் 69-வது கிலோ மீட்டரில் ஒரு பகுதி உள்ளது. முன்பு ‘வனசோகா’எனப்பட்ட இது தற்போது சிக்கன ஹனசோஹே, பெத்தன ஹனசோஹே என இரண்டு ஊர்களாகப் பிரிந்து கிடக்கிறது. இரண்டு ஊர்களையும் ஒரு கால்வாய் தான் பிரிக்கிறது. இந்த ஊர்களை ஒட்டி மலையின் அடிவாரத்தில் ஆர்ப்பரிக்கிறது காவிரி ஆறு.
மலையிலிருந்து உருண்டோடி வரும் சிற்றாறுகள் காவிரியின் மடியில் வந்து சங்கமிக்கும் இடம் என்பதால் திரும்பிய பக்கமெல்லாம் பசுமை தேசமாய்த் தெரிகிறது ஹனசோஹே. ராஜராஜன் ஆட்சியில் குடமலை நாட்டை கொங்கர் வம்சத்தைச் சேர்ந்த மணிஜா என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்தார். அப்போது படைத் தளபதியாக இருந்து குடமலை நாட்டின் மீது படை நடத்திய ராஜேந்திரன், மணிஜாவைத் தோற்கடிக்கிறார். எனினும், மணிஜாவின் வீரத்தை மெச்சி அவருக்கு ‘சத்திரிய சிகாமணி’ என்று பட்டம் வழங்கிய ராஜராஜன், குடமலை நாட்டை ஆளும் தங்களது பிரதிநிதியாக அவரையே நியமிக்கிறார்.
சிக்கன ஹனசோஹேயில் உள்ள முதலாம் தீர்த்தங்கரரான ஆதிநாதரின் சமணர் கோயிலை ராஜேந்திரன் தனது ஆட்சியில் புனரமைப்பு செய்திருக்கிறார். கோயிலின் உள்மண்டப விதானத்தின் கல் உத்திரத்தில் வடிக்கப்பட்டுள்ள ‘ ராஜேந்திர சோழ புஸ்துக கஜ்ஜம்’ என்ற கல்வெட்டு வரிகள் இதை நமக்கு உறுதிப்படுத்துகின்றன. சிக்கன ஹனசோஹேவின் தென்பகுதியில் உள்ள சிறிய கிராமம் ஒடுகல். இங்குள்ள குளக் கரையில் சோழர் காலத்து வீரக்கல் ஒன்று நட்டு வைக்கப்பட்டுள்ளது. இதிலும் போர்க்களக் காட்சிகள் இருந்ததை ஒப்பீடு செய்த பொறியாளர் கோமகன், “கலியூரைப் போலவே ஹனசோஹேயும் போர்க்களமாக இருந்திருக்கிறது என்பதை இதன் மூலம் தீர்மானிக்கலாம்’’ என்றார்.
இதுவரை நாம் தடம் பதித்த இடங்கள் அனைத்தும் ராஜேந்திரன் படைத் தளபதியாக இருந்து போர் நடத்திய இடங்கள். கி.பி.1014-ல் மன்னனாக அவர் முடி சூட்டிக்கொண்டார். ஒரு மன்னன் என்ற முறையில் ஆந்திர மாநிலத்தின் வனவாசியிலிருந்து (இப்போது பனவாசி) ராஜேந்திரன் தனது படையை நடத்திச் சென்றான். அடுத்த வாய்ப்பில் நாம் அதைப் பார்க்கலாம்.
பயணக்குழுவினர்
(சற்று இடைவெளிக்குப் பிறகு, கங்கை கொண்ட வரலாற்றுப் பயணம் தொடரும்)