

நோயாளியிடமிருந்து எடுக்கப்படும் மருத்துவக் குறிப்புகள் நோயாளியின் வர்ணனையை ஒட்டி இருக்கும். இன்றைய மருத்துவ அறிவியலின் முன்னேற்றம் காரணமாக, தொழில்நுட்பக் கருவிகள் பெருகப் பெருக அவற்றால் செய்யப்படும் பரிசோதனையின் முடிவுகளே நோயின் அறிகுறிகள் என்றாகிவிட்டன.
நோய் தாக்குண்ட நோயாளியின் அனுபவம் வேறு. அவருக்கு மருந்து அளிக்கும் மருத்துவரின் அறிவு வேறு. இந்த இரண்டையும் இணைக்கும் புள்ளிதான் மருத்துவம். அதிலும் நோய் நாடி நோய் முதல் நாடும் பழங்கால வைத்தியமுறையாக நம்மிடையே இன்றைக்கும் இருப்பது சித்த மருத்துவம். ஏனைய மருத்துவ முறைகளிலிருந்து மாறுபட்டுள்ள, நமது பாரம்பரியமான மருத்துவ முறையான சித்த மருத்துவம் குறித்த படிப்புகளைப் படிக்கும் ஆர்வம் தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகம் வளர்ந்துள்ளது.
இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் தமிழக அரசின் சுகாதாரத் துறையின்கீழ் வருகின்றன.
இதில் இரண்டரை ஆண்டுகள் படிக்கும் மருந்தாளுநர் D.I.P (Diploma in Pharmacy), D.N.T (Diploma Nursing Therapy) பட்டயப் படிப்புகளுக்கு வரவேற்பு கூடியுள்ளது. இந்தப் படிப்புகள் சென்னை, அரும்பாக்கத்திலும், திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையிலும் இருக்கும் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் கற்றுத் தரப்படுகின்றன. நர்சிங் படிக்கும் மாணவர்களுக்குக் களப்பயிற்சியும் வழங்கப்படுவது சிறப்பு.
கல்வித் தகுதி
கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களிலோ அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களிலோ பிளஸ் 2 அல்லது சி.பி.எஸ்.சி அல்லது அதற்கு இணையானவற்றில் தேறியிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 50 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் 45 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 40 சதவீதம், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 35 சதவீதம் மதிப்பெண்களும் எடுத்திருக்க வேண்டும்.
சித்த மருத்துவப் படிப்புகளுக்காக அணுக வேண்டிய முகவரி:
அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி 627 002.
அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை.