

சரபோஜி சரஸ்வதி மஹால் நூல் நிலையத்தை வளர்த்தெடுத்த சரபோஜி மன்னரின் மறைவுக்குப் பிறகு, சரபோஜி அரச குடும்பம் 1918-ல் ஒருலட்சம் நன்கொடையுடன் அன்றைய சென்னை ராஜதானி அரசாங்கத்திடம் நூலகத்தை ஒப்படைத்தது.
1983-ம் ஆண்டு இந்திய அரசு இதைத் ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நூலகமாக அறிவித்தது. இதன் பிறகு மாநில - மைய அரசுகள் இணைந்து இதை நிர்வகிக்கின்றன. இந்த நூலகம் ஆசியாவின் மிகப் பெரிய சுவடி நூலகமாகும்.
பொக்கிஷங்கள்
இங்கே தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மராட்டியம், இந்தி ஆகிய மொழிகளில் 48, 874 பனையோலைச் சுவடிகள் உள்ளன. 400-ஆண்டுகளுக்கு முன்னிருந்த நந்திநாகரி என்னும் எழுத்து வடிவத்தில் அமைந்த ஓலைச் சுவடிகளும் இவற்றில் அடக்கம். சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட 25 ஆயிரம் காகிதச் சுவடிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றோடு சுதந்திரத்துக்குப் பிறகு தாமாகவே முன்வந்து தமிழ் மக்கள் அளித்த 7,200 ஓலைச் சுவடிகளும் இங்கே பாதுகாக்கப்படுகின்றன.
அச்சு நூலகப் பிரிவு
ஓலைச் சுவடி காகிதச் சுவடிப் பிரிவோடு அச்சு நூலகப் பிரிவும் இருக்கிறது. 2,400-பாடல்கள் கொண்ட கிரந்த மொழியில் எழுதிய ராமாயணம், 1719-ல் பதிப்பிக்கப்பட்ட வாசுதேவரின் ராமாயணம், 1787-ல் எழுதப்பட்ட பஞ்சாங்கம், மன்னர் சரபோஜி வட இந்தியாவிலிருந்து சேகரித்துவந்த 47,334 நூல்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த 55 ஆயிரம் அச்சு நூல்கள் இங்கே உள்ளன.
அருங்காட்சியகம்
நூலகத்தின் ஒரு பிரிவாக அருங்காட்சியகம் இருக்கிறது. முகத் தோற்றத்தில் இருந்து ஒருவரின் குணத்தை அறிய முடியும் என்று கூறப்படும் ‘சாமுத்ரிகா லட்சண’ (physiognomy) கலையைக் கூறும் விளக்கச் சித்திரங்களை இங்கே மட்டுமே காண முடியும். 250 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்களையும் ஓவியங்களையும் இங்கே காணலாம்.
ஆய்வும் காப்பும்
தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மராட்டியம், மோடி, இந்தி ஆகிய மொழித் துறைகள் இந்த நூலகத்தில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் அந்தந்த மொழி சார்ந்த அறிஞர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். சுவடி விளக்க அட்டவணைகள் தயாரித்தல், சுவடிகளுக்கான கையெழுத்துப் பிரதிகள் உருவாக்குதல், அரிய வெளிவராத நூல்களைப் பதிப்பித்தல், ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டல் ஆகியவற்றை இவர்கள் செய்து வருகிறார்கள்.
இந்நூலகத்தில் வேதிமக் காப்புப் பிரிவு, நூலகப் பிரிவு, சுவடிப் பிரிவு, மோடி ஆவணப் பிரிவு, நுண்படப் பிரிவு, கணினிப் பிரிவு, நூல் அச்சாக்கம் மற்றும் கட்டமைப்புப் பிரிவு, விற்பனைப் பிரிவு மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை அமைந்துள்ளன.
வேதிமக் காப்புப் பிரிவு 1980-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இப்பிரிவில் சுவடிகள் உடையாமலும், பூச்சிகள் அரிக்காமலும் இருக்க சுவடிகளைச் சிறு பிரஷ்களைக் கொண்டு சுத்தம் செய்து காக்கும் வேலை செவ்வனே நடந்து வருகிறது.
சுவடிகளைப் பாதுகாத்து வைத்திருக்கும் தேக்கு மர அலமாரிகளுக்கு வசம்பு, மிளகு, கிராம்பு, கருஞ்சீரகம், கிராம்பு, லவங்கப்பட்டை ஆகியவற்றின் பொடியுடன், ஒரு கட்டி பச்சைக் கற்பூரத்தை வைத்து காடா துணிகளில் சிறு சிறு முடிச்சுகளாகக் கட்டி அலமாரியின் ஒவ்வொரு அடுக்கிலும் இரண்டு முடிச்சுகள் வீதம் வைக்கின்றனர். இது ஆறு மாதங்களுக்குப் பூச்சிகளைத் தடுக்கப் பயன்படும்.
சிதைந்த காகிதச் சுவடிகளை செலுலோஸ் அசிடேட் ஃபோயில் பூசப்பட்ட டிஸ்யூ காகிதத்தைக் கொண்டு அஸிடோன் கரைசலால் ஒட்டுகின்றனர். பின்னர் அமிலம் கலக்காத கைவினை காகித அட்டைகளைப் பாதுகாப்புக்காக வைத்துக் கட்டுகின்றனர்.
மோடி ஆவணப்பிரிவு
இந்தப் பிரிவில் மராட்டிய மன்னர்கள் தமது காலத்தில் எழுதிய நாட்குறிப்புகள், கடிதங்கள், கணக்குகள், ஆணைகள், ஒப்பந்தங்கள், நிகழ்ச்சிக் குறிப்புகள் ஆகிவற்றை மோடி எனும் ஒருவகை எழுத்துகளால் எழுதி வைத்துள்ளனர். இவ்வெழுத்துகள் மராட்டிய மொழியை எழுதப் பயன்பட்ட எழுத்து வடிவமாகும்.
மராட்டியர்களின் அரசியல், சமுதாய வாழ்க்கை, பண்பாடு ஆகியவற்றைப் பேசும் அகச் சான்றுகளாக இவை விளங்குகின்றன.
நுண் படப் பிரிவு
செல்லரித்த காகிதம் மற்றும் ஓலைச் சுவடிகளை மீட்கும் விதமாக நுண்படப் பிரிவில் இவை படமெடுக்கப்படுகின்றன. இவை பாஸிட்டிவ் முறையில் பிலிம் சுருள்களில் ஏற்றப்பட்டு ஒளிப் படங்களாக உள்ளன. படிக்க ஆராய்ச்சியாளர்களும் எதிர்காலத் தலைமுறைக்கு உதவும் பொக்கிஷமாக இவை இருக்கின்றன.
கணினிப் பிரிவு
1987 முதல் இந்நூலகத்தில் கணினிப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்நூலகத்தின் நூலடைவு தயாரிக்கப்பட்டு நூலகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் நூல் பட்டியல் உள்ளது. ஆகவே இதை உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் தேடி அறியலாம்.
அச்சகப் பிரிவு
இங்குள்ள ஆவணங்கள் மீள்பிரதி எடுக்கப்பட்டு நூலகத்திலேயே இயங்கிவரும் அச்சகத்திலேயே அச்சிடப்பட்டுத் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் இங்கு புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
பயிற்சி பெறலாம்
இங்கே இருக்கும் சுவடிகளைப் படிக்கவும் சுவடிகளிலிருந்து மீட்டு எழுதவும் இங்கேயே குறுகிய காலப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து ஆராய்ச்சி மாணவர்கள் இந்த நூலகத்துக்கு வந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
படங்கள்: எம்.மூர்த்தி
தி இந்து, ‘சித்திரை மலரி’ல் வெளியான கட்டுரையின் சுருக்கமான வடிவம்.