

கைகயில் புதிய வாட்ச் கட்டினால் கையை நீட்டி நீட்டிப் பேசுவார்கள். அது ஒரு காலம். மொபைல்களின் அசுர வளர்ச்சி வாட்சுகளுக்குக் கடிவாளம் கட்டிவிட்டது. ஆனாலும் தொடர்ந்து வாட்ச் கட்டுபவர்களும் உள்ளார்கள். வாட்ச் பிரியர்களுக்காக ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட் வாட்ச் வரப்போகிறது. அந்தப் புதிய ஸ்மார்ட் வாட்சை உருவாக்கிவருகிறது எல்.ஜி. நிறுவனம். பிரான்ஸின் சந்தையைக் கலக்க வரும் இந்த வாட்ச் ஜூன் மாதம் களமிறங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விலை சுமார் 17,000 ரூபாய் என்றும் தெரிகிறது. ஆனால் விலை பற்றி எல்.ஜி. நிறுவனம் மூச்சுக்கூடவிடவில்லை. ஜூலைக்கு முன்னதாக இங்கிலாந்தில் இந்த வாட்ச் கிடைக்கும் என்றும் விலை சுமார் 18,000 ரூபாய் என்றும் ஏற்கனவே எல்.ஜி. நிறுவனம் தெரிவித்திருந்தது. பிரான்ஸ் தவிர்த்த பிற நாடுகளில் எப்போது வாட்ச் கிடைக்கும் எனக் கேட்காதீர்கள். அந்த நேரம் எப்போது வரும் என்பது எல்.ஜி.க்கு மட்டுமே வெளிச்சம்.
இந்த ஸ்மார்ட்வாட்சில் என்னென்ன வசதிகள் எல்லாம் இருக்கும் என்னும் முழுமையான விவரம் சரிவரத் தெரியவில்லை. இதன் டிஸ்ப்ளே 1.65 அங்குல அகலம் கொண்டது. 4 ஜிபி ஸ்டோரேஜ். ராம் ஸ்பீடு 512 எம்.பி. இதன் திரை ஒளி மங்காமல் எப்போதும் பளிச்சிடும். தூசு, தண்ணீர் பற்றிய கவலை இல்லை. இரண்டையும் தன்னுள் புக அனுமதிக்காது இந்த நவீனக் கைக்கடிகாரம். எனவே கடும் மழையோ கொடும் வெயிலோ கவலை இன்றி இதை அணியலாம். கண்ணைப் பறிக்கும் கறுப்பு, பளிச்சிடும் வெள்ளை ஆகிய இரு நிறங்களில் உங்கள் கையை அழகுபடுத்தப் போகும் வாட்ச் வரும் நேரத்தை எதிர்பார்க்கத் தயாராகிவிட்டீர்களா?