

உமா மகேஷ்வரி மேடம் வகுப்பறைக்குள் நுழையும்போதே கல்லூரி களைகட்டும். அவரை விரிவுரையாளர் என்று சொல்ல மாட்டோம். சரித்திர நாயகி என்றுதான் வாஞ்சையோடு அழைப்போம். புரட்சி வீரன் பகத்சிங்கின் சரித்திரத்தை அவர் கற்றுத்தரும் விதம் அலாதியானது. ‘புரட்சி ஓங்குக! ஏகாதிபத்தியம் ஒழிக!’ என பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஒன்றிணைந்து கோஷமிட்ட பகுதியை காட்சிப்படுத்தினார் அவர்.
அப்போது வகுப்பில் புரட்சிப் பாடல்கள் உருவாகின. சுதந்திரப் போராட்டத்தை ஒரு நாடகம்போல அவர் வடிவமைத்தார். ஒவ்வொரு மாணவரும் ஒரு கதாபாத்திரமாக மாறினோம் வகுப்பிலேயே நாடகம் அரங்கேறியது. “நான் தூக்கிலிடப்பட்ட பின்னர் என்னுடைய புரட்சிகரக் கருத்துகளின் நறுமணம் நம்முடைய இந்த அழகான தேசமெங்கும் பரவும்” எனும் வாசகத்தை பகத்சிங் சிறைக் குறிப்புகள் புத்தகத்திலிருந்து அவர் வாசித்தபோது வகுப்பிலிருக்கும் அத்தனைபேரும் குட்டி பகத்சிங்குகளாக உயிர்ப்பித்து எழுந்தோம்.
புரட்சி தொடர்பான பல நாவல்களை எங்களுக்கு அவர் அறிமுகப்படுத்தினார். உலகெங்கும் நடந்த புரட்சிகளை ஒப்பிட்டு அட்டவணையிட்டு, சிறப்பு வரைபடம் காட்டி விளக்கினார். இந்தியாவின் முதல் சுதந்திரப் போரான வேலூர் புரட்சியை விளக்க வேலூர் கோட்டைக்கே எங்களைச் சுற்றுலாப் பயணமாக அழைத்துச் சென்றார். இப்படி ஒவ்வொரு வகுப்பையும் அவர் புத்துணர்ச்சியோடு புதுமையாகப் படைத்தார்.
இயல், இசை, நாடகம் எனப் பல்வேறு அம்சங்களுடன்கூடிய வகுப்புகளாக அவை மாறின. அதெப்படி மற்ற வகுப்புகளின் நேரத்தில் மந்தமாக அமர்ந்திருக்கும் மாணவர்கள்கூட உமா மேம் வகுப்பில் உத்வேகத்தோடு செயல்படுகிறார்கள் என ஆச்சரியமாக இருக்கும். அவர் பன்முக அறிவுத்திறன்களை ஊக்குவிக்கும் வழியைப் பிரயோகித்தார் என்பது இப்போதுதான் புரிகிறது.
இப்படியும் கற்பிக்கலாம்
பாடப் புத்தகத்தில் இருப்பதை மட்டும் விளக்கியிருந்தால் சரித்திரம் கற்கும் ஆர்வமும் அறிவும் உள்ளவர்கள் மட்டுமே வகுப்பில் ஒன்றியிருப்பார்கள். ஆனால் நாவல், கதை, கவிதை, வசனங்களை எங்கள் சரித்திர நாயகி விளக்கும்போது மொழித் திறனாளிகளும், தன்னிலை அறியும் திறன் கொண்டவர்களும் ஊக்கம் பெற்றார்கள். உலகெங்கும் நடந்த புரட்சிகளை ஒப்பிட்டு அட்டவணையிட்டு, சிறப்பு வரைபடம் காட்டியபோது கணிதம் மற்றும் தர்க்கத் திறன் கொண்டவர்கள் ஆர்வம் கொண்டார்கள்.
புரட்சிப் பாடல்களைப் பாடியபோது இசைத் திறனாளிகள் லயித்துப்போனார்கள். சுதந்திரப் போராட்டத்தை ஒரு நாடகம்போல வடிவமைத்து, ஒவ்வொரு மாணவரும் ஒரு கதாபாத்திரமாக மாறி வகுப்பிலேயே நாடகம் அரங்கேறியபோது காட்சி மற்றும் வெளித் திறன், உடற்கூறு மற்றும் விளையாட்டுத் திறன், மனிதர்களோடு தொடர்புகொள்ளும் திறன் கொண்டவர்கள் உற்சாகமாகக் களம் இறங்கினார்கள்.
வேலூர் புரட்சியை விளக்க வேலூர் கோட்டைக்கே அழைத்துச் சென்றபோது இயற்கை சார்ந்த திறன் கொண்டவர்கள் நேரடியான அனுபவம் பெற்றுத் திளைத்தார்கள். இப்படிப் பன்முக அறிவுத்திறனின் அத்தனை அம்சங்களையும் ஒருங்கிணைத்து அவர் வகுப்பைப் படைத்தார்.
கவனம் சிதறுகிறதே!
பன்முக அறிவுத்திறன்களைக் கொண்டாடும் தளமாகக் கல்வி அமைப்பு மாற வேண்டும் என்பதே உளவியல் நிபுணர் கார்டனர் கண்ட கனவு. சமீபத்தில் தொலைக்காட்சியில் கண்ட ஒரு விளம்பரம் இங்கு நினைவுக்கு வருகிறது. பரிட்சைக்குப் படித்துக் கொண்டிருக்கிறான் ஒரு சிறுவன். மேஜை மேல் கிடக்கும் ஸ்மார்ட் போன் அவனை இரண்டு கண்களால் பார்ப்பது போல அவனுக்குத் தோன்றுகிறது.
பதற்றத்தோடு வரவேற்பறையின் சோபாவில் சாய்ந்து மீண்டும் புத்தகத்தைத் திறந்தவுடன் சுவரில் தொங்கும் டிவியும் அவனை உற்றுப் பார்க்கிறது. மீண்டும் வேறு இடத்துக்கு ஓடுகிறான். அங்கேயும் ஒரு பெரிய பந்து அவனைப் பார்ப்பதுபோல ஒரு பிரமை. ஐயோ! தன்னைப் படிப்பில் ஊன்றவிடாமல் இவை அனைத்தும் மனதை சலனப்படுத்துகின்றனவே என வெறுப்படைகிறான்.
அங்கு வரும் அவன் அம்மா சத்துணவு பானம் கொடுக்கிறார். உடனே அவன் மனம் ஒருமுகப்பட்டுத் தெளிவான மனநிலையில் படிக்கிறான். சத்துணவு பானத்துக்கான அந்த விளம்பரம் நிறைவுபெறுகிறது.
சிறந்த கற்பனைத்திறனுடன் உருவாக்கப்பட்ட விளம்பரம்தான். ஆனால் ஈடுபாடு, ஒருமுகப்படுதல் இதன் மூலம் வாய்க்க வாய்ப்பில்லை. “பள்ளியிலிருந்து விடுபட்ட மனம்” (The Unschool Mind, 1991) என்ற புத்தகத்தில் மனச் சிதறலைக் கண்டு பயம் கொள்ளத் தேவையில்லை என்கிறார் கார்டனர்.
“நான் கற்கும் கல்வியை நிஜ வாழ்வில் பயன்படுத்த முடியும். எனக்குப் பிடித்த கருத்தியலை பிடித்தமான வழியில்தான் நான் படிக்கிறேன். இப்படி ஒருவர் உணரும்போது மனம் தானாகவே லயித்துப்போகும். மாறாகத் தன் திறனோடும், செயலாக்கத்துக்கும் சம்மந்தப்படாத விஷயத்தைப் படிக்கும்போது அங்கு புரிதல் ஏற்படாது, மனச் செறிவும் வாய்க்காது” என்கிறார் கார்டனர்.
உடல் ரீதியான அறிவுத்திறன் கொண்டவர் என்றால் அவர் விளையாட்டின் மூலமாகவே பயிலலாம். இசைத் திறன் கொண்டவர் எனில் இசை மூலம் படிக்கலாம். இதனால் அவர்கள் ஒருபோதும் தடம் புரண்டு செல்லமாட்டார்கள் என அறுதியிட்டுக் கூறுகிறார்.
புதிய அலை
அறிவியல் என்ற வடிவத்தில் உள்ள சில மூடநம்பிக்கைகளை பன்முக அறிவுத்திறன் கோட்பாடு தவிடு பொடியாக்குகிறது. மொழி அறிவும் கணித அறிவும் மட்டுமே உயர்வானவை என நம்பிவந்த அறிவுலகை உலுக்கிய கோட்பாடு இது. வகுப்பறையில் பெறுவது மட்டும் கல்வி அல்ல. இயற்கைச் சூழலில் மிகச் சிறப்பான அறிவு பெற முடியும்.
ஆட்டிசம், டிஸ்லெக்சியா போன்ற குறைபாடுகள் உள்ளவர்களை மூளை வளர்ச்சியற்றவர்கள் என முத்திரைக் குத்துவது தவறு. அவர்களிடம் அபாரமான காட்சி ரீதியான அறிவுத்திறன் இருக்கும். இப்படி அறிவுலகத்துள் பல திறப்புகளை ஏற்படுத்தியது அவரது கருத்தியல். அவருடைய பன்முகத்திறன் கருத்தியல் அறிவுலகத்துள் பாய்ந்த புதிய அலை எனலாம்.
அந்தப் பேராற்றல் கொண்ட அலையின் பன்முகங்களைக் கடந்த ஏழு மாதங்களாகக் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறோம். அதன் உச்சக்கட்டத்தை அடையும் தருணம் நெருங்கிவிட்டது. இந்தியச் சூழலில், குறிப்பாகத் தமிழகச் சூழலில் பன்முக அறிவுத்திறன் கோட்பாட்டை எப்படிச் செயல்படுத்தலாம் என்பதைத் தொடர்ந்து பேசுவோம்.