

உலக அளவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகளுக்கும் பள்ளிகளுக்கும் இடையிலான இணக்கம் குறைந்துவருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார கழகமான யுனெஸ்கோ தெரிவித்தது. ஒருபுறம் அனைவருக்கும் கல்வி வழங்கும் திட்டங்கள் தீட்டப்பட்டாலும் மறுபுறம் படிப்பிலிருந்து இடைநின்றுபோகும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் பள்ளிக்குச் செல்லும் பாதையே மிகப் பெரிய சிக்கலாக பல பிள்ளைகளுக்கு உள்ளது.
அடிப்படை போக்குவரத்து வசதியோ, செப்பனிடப்பட்ட சாலைகளோ இல்லாததால் பள்ளியைச் சென்றடையவே அவதிப்படும் குழந்தைகள் ஏராளம். பாலம் கட்டுவது, தார்ச் சாலைகள் அமைப்பது, தரமான பள்ளிப் போக்குவரத்து வாகனங்களைத் தயாரிப்பது போன்ற எளிமையான தீர்வுகள் இதற்கு உண்டு. ஆனால் நிதி தட்டுப்பாட்டாலும், புயல், வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் சில பகுதிகளை அசாதாரணச் சூழலிலேயே எப்போதுமே வைத்திருப்பதாலும் பள்ளிக்குச் செல்லுதல் என்பதே பல குழந்தைகளுக்கு சாகசம் மிகுந்த சவால்தான். கல்வி பெற தினந்தோறும் எதிர்நீச்சல்போடும் குழந்தைகளில் சிலர் இவர்கள்:
ஆறு கடந்தால் கல்வி!
பிலிப்பைன்ஸ் நாட்டின் ரைஜல் கிராமத்தில் ஓடும் நதியை டயர் டியூப் மாட்டிக்கொண்டு நீந்திக் கடக்கும் இந்த அரும்புகள் ஆரம்பப் பள்ளி மாணவர்கள். ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் சில நாட்கள் வீடு திரும்ப முடியாமல் பள்ளியிலேயே இவர்கள் தங்கிய நாட்களும் உண்டு.
தொங்கினால்தான் படிப்பு!
இந்தோனேசியாவின் பாது புஸூக் கிராமத்துக் குழந்தைகள் படிக்க வேண்டுமானால் பாதாங் நகருக்குச் செல்ல வேண்டும். அதற்குக் கரை புரண்டோடும் வெள்ளத்தையும் 30 அடி உயரத்தில் பழுதடைந்து தொங்கும் பாலத்தையும் 11 கி.மீ. காட்டுப் பாதையையும் நடந்தே தினந்தோறும் கடக்கிறார்கள்.
பள்ளத்தாக்கைத் தாண்டி பள்ளி!
எட்டாக் கனியான கல்வியை எட்டிப்பிடிப்போம் என்கின்றனர் கொலம்பியாவின் மழைக்காட்டில் வாழும் பழங்குடிப் பிள்ளைகள். அதள பாதாளப் பள்ளத்தாக்கின் இரு முனைகளை இணைக்கும் இரும்புக் கம்பிகளைப் பிடித்துத் தொங்கி நாள்தோறும் 64 கி.மீ.ரை கடந்து கற்கிறார்கள் இவர்கள்.
மலைப் பாதையில் மழலையர்!
அரை மீட்டர் அகலத்துக்கும் குறைவான செங்குத்தான மலைப் பாதையில் தத்தித் தத்தி நடக்கிறார்கள் இவர்கள். சீனாவின் பிஜ்லி நகரில் உள்ள பான்போ ஆரம்பப் பள்ளியை நோக்கிய இந்த அபாயகரமான பயணத்தின் ஒரே ஆறுதல் இவர்களுக்குப் பாதுகாப்பாக பள்ளித் தலைமை ஆசிரியர் சூலியாங்ஃபானும் கூடவே நடப்பதுதான்.