

பள்ளியின் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தினந்தோறும், “என் நாட்டுக்காகவும் என் நாட்டு மக்களுக்காகவும் நான் இந்த உதவியைச் செய்கிறேன்” என ஈரோடு மாவட்டம் க. (வுந்தப்பாடி) ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் சொல்லி உண்டியலில் காசு போடுகிறார்கள். பிறருக்கு உதவ வேண்டும் என்ற இந்த மனப்பான்மையை இவர்களுக்கு ஊட்டியவர் பள்ளித் தலைமை ஆசிரியர் அ.வாசுகி.
இருபது ஆண்டுகளாக ஆசிரியப் பணியில் இருக்கும் வாசுகி இதுவரை தான் பணிபுரிந்த இடங்களில் எல்லாம் முத்திரை பதித்தவர். செயல்வழிக் கற்றல் முறையை அரசு 2006-ல்தான் அறிமுகம் செய்தது. ஆனால், 2004-லேயே சலங்கபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தனது மாணவர்களைச் செயல்வழி முறையில் கற்கவைத்தவர் வாசுகி.
படிப்பு மட்டுமே மனிதனாக்காது
“படிப்பு மட்டும் போதாது. அன்பு, பாசம், பிறருக்கு உதவும் மனப்பான்மை எல்லாம் சேர்ந்துதான் ஒரு குழந்தையை முழுமையான மனிதராக மாற்ற முடியும்” என்கிறார் வாசுகி.
இந்தப் பள்ளியின் மாணவர்கள் தினமும் அன்று என்ன உதவி செய்தார்கள் என்பதை அடுத்த நாள் காலை வழிபாடுக் கூட்டத்தில் ‘நான் செய்த உதவி’ என்று தினம் ஒருவர் வீதம் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லி முடித்ததும், ‘உதவி செய்ய வாருங்கள் தோழர்களே’ என்று ஒரு மாணவர் அழைப்பார். அங்கிருக்கும் உண்டியலில் வகுப்புவாரியாக மாணவர்கள் காசு போட்டுவிட்டு, ‘என் நாட்டுக்காகவும் என் நாட்டு மக்களுக்காகவும் இந்த உதவியைச் செய்கிறேன்’ என்று சொல்லித் தன் பெயரையும் சொல்லிச் செல்வார்கள்.
மாணவர்களே தயாரித்த உண்டியல்
இந்த உண்டியல்கூட மாணவர்களே தயாரித்ததுதான். ஆண்டு இறுதியில் சேர்ந்திருக்கும் மொத்தப் பணத்தையும் யாருக்கு என்ன உதவி செய்யலாம் என்று அவர்களே கூடித் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டியாக மட்டும் வாசுகி இருக்கிறார். உள்ளூரில் யாருக்கும் உதவி செய்வதில்லை எனத் தீர்மானித்திருக்கிறார்கள்.
கடலூர் பாதிப்புக்குக் கரம் நீட்டியவர்கள்
இதுவரை, கருணை இல்லங்களுக்குத் தேவையான பீரோ, சோபா, ஃபேன் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் பகுதி மக்களுக்காக இரண்டாயிரம் ரூபாய் நிதியுடன் வீட்டிலிருந்து அரிசி, பருப்பு என அத்தனை அத்தியாவசியப் பொருட்களையும் கொண்டுவந்து குவித்திருக்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்குச் சீருடைகள், விபத்தில் காயப்பட்டு சிகிச்சையில் இருந்த ஒரு மாணவிக்காக இரண்டாயிரம் ரூபாய் உதவி என இவர்களின் ஈகைப் பட்டியல் நீள்கிறது.
உதவி வாங்கிக் கழித்தல்
“சமுதாயத்தின் மோசமான கருத்துகள் எதுவும் இந்தப் பிள்ளைகளின் மனதைப் பாதித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். அதனால், அவர்களின் சிநேகிதியாக இருக்கிறேன். பொதுவாக ஆசிரியர்கள், ‘கடன் வாங்கிக் கழித்தல்’ என்பார்கள். ஆனால் நான், ‘உதவி வாங்கிக் கழித்தல்’ என்று சொல்லிக் கொடுப்பேன். உதவி செய்தால் திருப்பித் தர வேண்டாம் என்பதையும் அவர்களுக்குப் புரியவைப்பேன்” என்று வித்தியாசமாகச் சிந்திக்கிறார் வாசுகி.
கிடைத்த அங்கீகாரங்கள்
பள்ளி வளாகத்தில் ஏதாவது பொருள் கீழே கிடந்தால் அதை எடுத்துக்கொண்டு போய் அதற்கென வைக்கப்பட்டுள்ள பிரத்யேகப் பெட்டியில் மாணவர்கள் போட்டுவிட வேண்டும். பொருளைத் தவறவிட்டவர் எங்கும் தேட வேண்டாம். அந்தப் பெட்டியிலிருந்து தங்களது பொருளை எடுத்துக்கொள்ளலாம். எந்தப் பொருளையும் இந்த மாணவர்கள் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்துவதில்லை.
இதையெல்லாம் இந்த மாணவர்களுக்குக் கற்றுத் தந்திருக்கும் வாசுகியைத் தேடி விருதுகள் வந்துகொண்டே இருக்கின்றன. இடைநின்ற மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வந்ததற்காக ‘காமராஜர் நல்லிணக்க விருது’, புதுமையைப் புகுத்தியதற்காக அகமதாபாத் ஐ.ஐ.எம். நிறுவனத்தின் ‘கற்றலில் புதுமையைப் புகுத்தியவர் விருது’ போன்றவை வாசுகியின் தன்னலம் கருதாச் சேவைக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரங்கள்.
தலைமை ஆசிரியர் வாசுகியின் தொடர்பு எண்: 94433 39901