

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை நடைமுறைக்கு வருவதையொட்டி சமீபகாலமாக அது பற்றி நிறைய பேசப்படுகிறது. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு இந்தப் புதிய வரி முறையைக் கொண்டுவந்துள்ளது.
ஜி.எஸ்.டி. என்ற சுருக்கக் குறியீடு, தமிழகத்தில் மட்டுமில்லாமல் நாடெங்கிலும் 150 ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்றிருந்தது. அது கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு என்றழைக்கப்படும் ஜி.எஸ்.டி. சாலைதான்.
ஆங்கிலேயர் வைத்த பெயர்
தரை வழியாக நாட்டின் வடமேற்குப் பகுதிக்கு, ஆப்கானிஸ்தானத்துக்குப் பயணிக்க வசதியாக, அசோகரின் காலத்தில் சாலை போடப்பட்டது. அப்போது அதன் பெயர் ‘உத்தரபாதா’. அதுவே 1833-வது ஆண்டிலிருந்து 1860-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆங்கிலேயர்களால் மேம்படுத்தப்பட்டது. அந்தக் காலத்தில் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த வில்லியம் பென்டிக் பிரபு, கிராண்ட் டிரங்க் ரோடு (பெரிய முதன்மைப் பாதை) என்று இதற்குப் பெயரிட்டார்.
அதையொட்டி நாடெங்கும் தரை வழியாகப் பயணிப்பதற்குப் பெரிய சாலைகள் அமைக்கப்பட்டன. இதையொட்டியே தெற்கில் முக்கிய மாகாணமாக இருந்த மதராஸ் மாகாணத்தில் ஜி.எஸ்.டி. சாலை அமைக்கப்பட்டது.
இன்றைய நிலை
சென்னை அண்ணா சாலை (பழைய மவுண்ட் ரோடு) முடிவடைந்த பிறகு நீண்டுள்ள நெடுஞ்சாலையே ஜி.எஸ்.டி. சாலை. தற்போது ஜி.எஸ்.டி. சாலை ‘தேசிய நெடுஞ்சாலை 45’ என்று பெயர் மாற்றப்பட்டுவிட்டது. இது திருச்சி வழியாக திண்டுக்கல், தேனிவரை நீண்டுள்ளது. இதன் நீளம் 472 கி.மீ. மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளால் ஜி.எஸ்.டி. சாலையின் தொடக்கப் பகுதி அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாலும், இன்றளவும் இது மிக முக்கியமான ஒரு சாலையாகவே திகழ்கிறது.