

ஒருவர் தன் மகனை என்னிடம் அழைத்து வந்தார். ‘‘என் பையன் ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி’’ என்றார். ‘‘பரவாயில்லையே. இசையில் அவ்வளவு ஆர்வமா?’’ என்றேன். ‘‘அதெல்லாம் இல்லை. ராத்திரி முழுக்கப் படிச்சிட்டு பகல்ல தூங்கறான். நீங்கதான் அறிவுரை சொல்லணும்’’ என்றார். இரவில் கம்போஸிங் செய்வதை ஏ.ஆர்.ரஹ்மானே நிறுத்திவிட்டார் என்பதை அவனிடம் சொன்னேன். இரவில் கண் விழிப்பதால் ஏற்படும் உபாதைகளையும் சொல்லி அனுப்பினேன்.
ஒவ்வொருவருக்கும் ஓர் இயற்கைச் சக்கரம் இருக்கிறது. இதை உயிரியல் கடிகாரம் என்றும் வைத்துக்கொள்ளலாம். சிலர் இரவில் விழிப்போடு சுறுசுறுப்புடன் இருப்பார்கள். சிலருக்கு சூரியன் மறையத் தொடங்கும்போதே கண்கள் சொக்கத் தொடங்கும்.‘பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்’ என்னும் திருக்குறள் வரியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆந்தையின் முழு பலம் இரவிலும், காகத்தின் முழு பலம் பகலிலும் வெளிப்படும் என்பது இதன் பொருள். மருத்துவ ரீதியாக நீண்ட நாட்கள் இரவில் கண் விழித்து வேலை செய்பவர்களுக்கு இதய பாதிப்புகள், சர்க்கரை, உடல் பருமன், கவனக் குறைவு, காலப்போக்கில் தூக்கமின்மை போன்றவை வரும் வாய்ப்புகள் அதிகம். எனவே, முடிந்தவரை இயற்கையோடு இணைந்து படிப்பதே சிறந்தது.
தேர்வுக் காலத்தில் இரவில் கண் விழித்துப் படித்தாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் - அது குறுகியகால நடவடிக்கையாக இருக்கட்டும். அவ்வாறு இரவில் கண் விழித்துப் படிக்கும்போதும் சில விஷயங்களைப் பின்பற்றுவது நல்லது. இரவில் பொதுவாகவே சிந்திக்கும் திறன் குறைவு. எனவே, கடினமான விஷயங்களைப் படிப்பதைத் தவிர்த்து, ஏற்கெனவே படித்ததையோ, எளிமையானதையோ படிக்கலாம். புதிதாக ஒரு விஷயத்தைப் படிப்பதை இரவில் தவிர்த்துவிடுங்கள்.
இரவு கண் விழிக்கும்போது நம் உடலில் நீர்ச் சத்து குறைந்து, உடல் வெப்பம் அடைகிறது. ஆகவே, நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். டீ, காபி தவிர்ப்பது நல்லது. காரசாரம் அதிகம் அல்லாத உணவை மிதமான அளவு சாப்பிடுங்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மூளைக்கும் கண்களுக்கும் ஓய்வு கொடுங்கள். அதற்காக முகநூலில் மூழ்கிவிட வேண்டாம். அது வேறு எங்காவது உங்களை இழுத்துச்சென்றுவிடக்கூடும்.
ஒரு மருத்துவராக என்னைக் கேட்டால் இரவு 8 மணிக்குள் உணவு சாப்பிட்டுவிட்டு 9 மணிக்குள் படுக்கைக்குச் செல்வது மிகவும் நல்லது. அப்படி செய்தால் அதிகாலை 4.30 மணிக்கு சிறிதும் களைப்பு இல்லாமல் புத்துணர்ச்சியுடன் எழலாம். அதிகாலை 4.30 மணியில் இருந்து 6 மணி வரை ஒன்றரை மணி நேரம் அமைதியான சூழலில் கவனச் சிதறல் இல்லாமல் படிப்பது மற்ற வேளைகளில் 6 மணி நேரம் படிப்பதற்குச் சமம். படிப்பதும் பசுமரத்தாணிபோல பதியும்.-மீண்டும் நாளை...