

அவர் அருமையாக வயலின் வாசிப்பார். நண்பர்கள் மத்தியில் ‘வான் நிலா.. நிலா அல்ல’ என்று வாசித்தால் ஔரங்கசீப் கூட அந்த இசையை ரசிப்பார். அவருக்கு ஒருமுறை மேடையில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது . ஆனால் அவருக்கு கையெல்லாம் நடுங்கி, வியர்த்துச் சரியாக வாசிக்க முடியாமல் வயலின் இசையை வயலன்ஸ் (violence) இசையாக மாற்றிவிட்டார். காரணம் பதற்றம். அதுபோல தேர்விலும் இதுபோன்ற பதற்றத்தினால் பாதிக்கப்படுபவர்கள் ஏராளம். பதற்றப்படும் போது நம் உடலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகின்றன.
குறிப்பாக அட்ரினலின் என்ற ரசாயனம் சுரக்கிறது. இதனால் இதயம் வேகமாகத் துடிக்கிறது. ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, வியர்வை அதிகம் சுரக்கிறது, கை நடுக்கம் ஏற்படுகிறது. கை நடுக்கம் ஏற்படுவதால் கையெழுத்து பாதிக்கப்படுகிறது. மூளைக்கு சரியாக ரத்தம் செல்லாததால் கவனக்குறைவு ஏற்படுகிறது. படித்த விஷயங்களைக் கூட நினைவுக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்படுகிறது. பதற்றமே மறதிக்கான முதன்மையான காரணம்.
பதற்றத்தால் வரும் கவனமின்மையால் நன்கு படித்திருந்தும் கேள்விகளை சரியாகப் படிக்காமல் தவறான விடையை எழுதிவிடுவார்கள். அதேபோல் நிதானமாக செயல்பட முடியாததால் யோசித்து முடிவெடுக்கும் திறனும் பாதிக்கப்பட்டு விடைகளை ஒழுங்குபடுத்தி எழுதுவது சிக்கலாகிறது. குறித்த நேரத்துக்குள் எழுத முடியாமல் போகிறது . தவறுகள் மேலும் பதற்றத்தை உண்டாக்குகின்றன.
இந்தப் பதற்றத்தை எப்படி எதிர்கொள்வது? மனம், உடல் இரண்டையும் தயார்படுத்த வேண்டும். மனதளவில் நம்மால் நிச்சயமாக நன்றாக செயல்பட முடியாது என்ற எண்ணத்தைத் துடைத்து எறிய வேண்டும். தேர்வு எழுதும்போதே எத்தனை மதிப்பெண்கள் கிடைக்கும், எதிர்பார்த்த படிப்பு கிடைக்குமா, இல்லையென்றால் எல்லோரும் கேலி செய்வார்களோ என்றெல்லாம் எண்ணாமல் நாம் படித்ததை நாமே ரசிக்கும்படி நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும்.
மேலும் மனத்திரையில் தேர்வு எழுதுவது போன்றும் விடைகளைச் சரளமாக எழுதுவது போன்றும் பயப்படாமல் நிதானமாக எழுதுவது போன்றும் காட்சிப்படுத்திப் பார்க்க வேண்டும். வெற்றி பெற்றவர்கள், விளையாட்டு வீரர்கள் எல்லாம் முக்கியமான தருணத்தின் முன்பு இதுபோன்று காட்சிப்படுத்துவதாகக் கூறுகின்றனர்.
உடலளவில் பதற்றம் குறைவதற்கு உடற்பயிற்சியும், உணவும் முக்கிய காரணம். குறிப்பாக யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவை பதற்றத்தைக் குறைக்கப் பெரிதும் உதவுகின்றன. தேர்வு அன்று எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.
பதற்றமாக விடையளிக்கத் தொடங்கினால் பிள்ளையார்சுழி எப்படிப் போடுவது என்பதுகூட மறந்துவிடும்.-மீண்டும் நாளை...