

“பாடப் புத்தகங்கள் சொல்லித்தருவதைவிட அதிலுள்ள பாடங்களைச் செயல்முறையில் கற்கும்போது மாணவர்களால் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் கற்றுக்கொள்ள முடிகிறது” என்கிறார் ஆசிரியர் ஜி. கண்ணபிரான்.
உடுமலைப்பேட்டை அருகிலுள்ள ராகல்பாவி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் கண்ணபிரான். இவருக்குப் பிடிக்காதது, புத்தகத்தில் இருப்பதை அப்படியே எழுதிப்போட்டுப் படிக்கவைப்பது. அறிவுசார் அனுபவக் கல்வியால்தான் எடிசன்களையும் நியூட்டன்களையும் உருவாக்க முடியும் என்பதில் தீர்க்கமாக இருக்கும் இவர், தனது இந்தக் கொள்கைக்காகப் பள்ளி நேரங்கள் கடந்தும் உழைக்கிறார்.
நேனோ சோலார் சிஸ்டம்
உதாரணத்துக்கு, நாமெல்லாம் சூரியக் குடும்பம் என்பதைப் புத்தகத்தில் படித்துத்தான் உருப்போட்டிருப்போம். ஆனால், கண்ணபிரானிடம் படிக்கும் மாணவர்கள் சூரியக் குடும்பத்தில் ஒவ்வொரு கோளும் எந்த இடத்தில் எவ்வளவு பெரிய வடிவில் இருக்கும் என்பதையெல்லாம் படம் போட்டே காட்டிவிடுவார்கள். களிமண் உருண்டைகள், பாசிமணிகள் இவற்றைக் கொண்டு கண்ணபிரான் உருவாக்கிக்காட்டிய ‘நானோ சோலார் சிஸ்டத்தின்’ மாதிரிதான் இவர்களைச் சூரியக் குடும்பத்தைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள வைத்திருக்கிறது.
இதுதாண்டா வெப்பக் கடத்தல்
ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை ஒன்று உண்டு என்ற நியூட்டன் விதியை ஒரு பலூனையும் ‘ஸ்ட்ரா’வையும் வைத்துச் செய்முறை விளக்கம் தந்து அசத்துகிறார்கள் இந்த மாணவர்கள். காற்றடைத்த பலூனை நெருப்பின் அருகே கொண்டுபோனால் வெடித்துவிடும். அதுவே, தண்ணீர் நிரப்பிய பலூனாக இருந்தால் முதலில் தண்ணீர் சூடாகி அதன்பிறகு தான் பலூன் வெடிக்கும். இதைச் செய்துகாட்டி, ‘இதுதாண்டா வெப்பக் கடத்தல்’ என்று மாணவர்களுக்கு அழகாகப் புரியவைக்கிறார் இந்த ஆசிரியர்.
இப்படி, பலூனை மட்டுமே வைத்து 30-க்கும் மேற்பட்ட அறிவியல் சோதனைகள் இவர் வசம். மாணவர்களுக்கு அறிவியல் சோதனைகளைச் செய்துகாட்டுவதற்காகவே இந்தப் பள்ளியில் ‘கலீலியோ சைன்ஸ் கிளப்’ வைத்திருக்கிறார்கள். மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் குழுவின் அனுசரணையும் கிடைப்பதால் அசத்துகிறார்கள் மாணவர்கள்.
5 ஆண்டுகள் 500 சோதனைகள்
மெழுகுவர்த்தியை அணைத்த பிறகு அதிலிருந்து வெண்புகை வரும். தீக்குச்சியைப் பற்றவைத்து அந்தப் புகையின் அருகில் கொண்டுபோனாலே மெழுகுவர்த்தி மீண்டும் பற்றிக்கொள்ளும். இதற்கும் காரணம் அந்தப் புகையில் எரியக்கூடிய வாயுக்கள் அதிகம் இருப்பதுதான். இதையெல்லாம் கண்ணபிரானின் மாணவர்கள் கரைத்துக் குடித்திருக்கிறார்கள். இப்படிக் கடந்த 5 வருடங்களில் சுமார் 500 அறிவியல் சோதனைகளைச் செய்துகாட்டி மாணவர்களை அறிவுசார் களஞ்சியங்களாக மாற்றியிருக்கிறார். இப்போது, தாங்களே சிறு சிறு அறிவியல் சோதனைகளைச் செய்து மற்றவர்களுக்கு அழகாய் விளக்குமளவுக்குக் கைதேர்ந்திருக்கிறார்கள் இந்தப் பள்ளியின் மாணவர்கள்.
படிப்பில் சுவாரஸ்யம் கூட்டுவது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களின்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களுக்கு இயற்கையின் மீதும் நேசம் வளர்க்கிறார் கண்ணபிரான். சனிக்கிழமைகளில் உடுமலை, திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மற்ற பள்ளிகளுக்கும் சென்று அங்குள்ள மாணவர்களுக்கும் அறிவியல் பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறார்.
சிகரம் தொடவைப்பேன்
“நான் செய்துகாட்டும் ஆய்வுகள் அனைத்துமே பாடத்தில் வருகின்றன. ஆனால், பாடமாகப் படித்தால் மாணவருக்குப் புரிய மறுக்கிறது. திடப்பொருள் திரவமாகாமல் ஆவியாதல்தான் பதங்கமாதல் என்று சொன்னால் மாணவர்களுக்கு எளிதில் புரிவதில்லை. அதையே, ஒரு கற்பூரத்தைக் கொளுத்தி அது எரிந்து காற்றில் கலப்பதைக் காட்டி ‘இதுதாம்பா பதங்கமாதல்’ என்று சொன்னால் பசுமரத்தாணியாய்ப் பதிகிறது” என்று சொல்லும் கண்ணபிரான்,
“மாணவர்களுக்குச் சிந்திக்கும் ஆற்றலையும் ஆராய்ச்சி அறிவையும் ஊக்குவிக்க வேண்டும். எப்போதோ நோபல் பரிசு வாங்கியவர்களைப் பற்றியே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பேசப்போகிறோம். நாம் எப்போது நோபல் பரிசு வாங்குவது? இதற்கான தேடல்தான் எனது இப்போதைய இந்த முயற்சி. இது தொடக்கம்தான். இன்னும் முப்பது ஆண்டுகள் எனக்கு பணிக்காலம். அதற்குள்ளாக எனது மாணவர்களை சிகரம் தொடவைப்பேன்” என்கிறார் அசைக்க முடியாத நம்பிக்கையுடன்.
தொடர்புக்கு ஜி.கண்ணபிரான்: 99424 67764