துறை அறிமுகம்: எதற்காக தண்டனை?

துறை அறிமுகம்: எதற்காக தண்டனை?
Updated on
2 min read

காலங்காலமாகக் குற்றங்கள் நிகழ்ந்தாலும் அவற்றை அணுகும் முறை வெகுவாக மாறியுள்ளது. ஒரு காலகட்டத்தில் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்கிற ரீதியில் குற்றத்துக்கான தண்டனை வழங்கப்பட்டது. அந்த நிலை மாறி, குற்றவாளியைச் சீர்திருத்துவதற்கான நடவடிக்கையே தண்டனை என்கிற பார்வையும் போக்கும் வந்துள்ளன. ஒவ்வொரு குற்றத்துக்கும் பின்னணியில் சமூக, உளவியல், அரசியல், பொருளாதாரக் காரணங்கள் இருக்கலாம்.

அவற்றின் அடிப்படையில் குற்றத்தையும் குற்றவாளியையும் ஆய்வுக்கு உட்படுத்தித் தீர்வு கண்டறிவதே குற்றவியல் (Criminology - கிரிமினாலஜி). தனித் துறையாக இது செயல்பட்டாலும் உளவியல், சட்டம், சமூகவியல், சைபர் குற்றம், குற்ற பலியாளரியல் (Victimology), திருத்த நிர்வாகம் (correctional administration), மனித உரிமைகள், காவல்துறை நிர்வாகம், நிதிக் குற்றம் (financial crimes), தடயவியல் அறிவியல் (forensic science), தடயவியல் மருத்துவம் உள்ளிட்ட பல்துறைகளோடு தொடர்புடையதாகும்.

சமூக மறுஅரவணைப்பு வேண்டாமா?

குற்றம் செய்பவர்கள் யார், குற்றம் நிகழ்வது ஏன் என்கிற அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு குற்றத்தைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டறிவதே குற்றவியலாளரின் பணி. “தூண்டுதலின் பெயரால்தான் பல குற்றங்கள் நிகழ்கின்றன. எந்தத் தவறான பழக்கவழக்கத்தையும் கற்றுக்கொள்ளவும் முடியும்; அதிலிருந்து விடுபடவும் முடியும். சிறைவாசிகளுக்குச் சீர்திருத்தக் கல்வி அளித்தல், யோகா பயிற்சி அளித்தல், தண்டனைக் காலம் முடிந்து வெளிவரும்போது பணிவாழ்க்கை அமைவதற்கான திறன்கள் ஆகியவற்றை வளர்க்க விரும்புகிறோம்.

கணினி அறிவு, கேக் பேக்கிங், ஜவுளி நெய்தல் உள்ளிட்டவற்றைச் சிறைவாசத்தின்போதே கற்பித்தல்; முக்கியமாக மீண்டும் சமூகம் அவர்களை ஏற்றுக்கொள்ள ஏதுவான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதைப் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்படிக் குற்றத்துக்கான தண்டனையில் சீர்திருத்தம், மறுசீரமைப்பு, சமூக மறுஅரவணைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தருவதே குற்றவியலின் அடிப்படை” என்கிறார் சென்னை பல்கலைக்கழகக் குற்றவியல் துறைத் தலைவர் பேராசிரியர் நிவாசன்.

அதே நேரத்தில் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுதல், சைபர் குற்றம், ஒயிட் காலர் குற்றம் எனப்படுகிற உயர் அதிகாரப் பணிச் சூழலில் நிகழும் குற்றங்கள் எனச் சமீபகாலமாக நூதனமான வழிகளில் பல குற்றங்கள் நடந்தேறுகின்றன. அவற்றின் மீது ஆய்வு நடத்துவது இத்துறையின் முக்கிய அம்சம். “குழந்தைக் குற்றவாளிகள், பயங்கரவாதத்தின் பலியாளர்கள், குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகிய தலைப்புகளில் ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றின் முடிவுகளை வெளியிட்டு அதன் மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டுவர முயற்சிக்கிறோம்” என்கிறார் ஸ்ரீநிவாசன்.

அக்கறையும் விழிப்புணர்வும்

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த குற்றவியல் இந்தியா முழுவதும் பல பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகிறது. “வகுப்பு விரிவுரை, புத்தக அறிவு தாண்டி சட்ட வல்லுநர்கள், நீதித் துறை நிபுணர்கள், சமூக ஆர்வலர்களை அழைத்துச் சமூகப் பிரச்சினைகள் குறித்து மாணவர்களுக்குக் கருத்தரங்கம், பயிலரங்கம், விவாத நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். இதன் மூலம் மட்டுமே அவர்களுடைய கள அறிவும், சமூகப் பொறுப்பும் விரிவடையும். அந்த வகையில் குற்றவியல் படிப்பு ஏட்டுக் கல்வியாக இல்லாமல் செயல்முறைக் கல்வியாகவே கற்பிக்கப்படுகிறது” என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் ஸ்ரீநிவாசன்.

குற்றவியலைப் படித்தவர்களுக்குப் பொதுத் துறைகளிலும், தனியார் நிறுவனங்களிலும், சூழலியல் குற்றங்கள், மனித உரிமை தொடர்பான பிரச்சினைகளில் செயல்படும் சமூகப் பணி போன்ற துறைகளிலும் வேலைவாய்ப்பு உள்ளது. வேலை என்பதைக் கடந்து பகுத்தாய்வு திறனையும், விமர்சனப் பார்வையையும், சமூக விழிப்புணர்வோடுகூடிய சமூக அக்கறையையும் ஏற்படுத்தும் தனித்துவமான துறையாகக் குற்றவியல் விளங்குகிறது.

என்ன, எங்கே படிக்கலாம்?

குற்றவியலில் இளநிலை (பி.ஏ./ பி.எஸ்சி.), முதுநிலை (எம்.ஏ./ எம்.எஸ்சி.) படிப்புகள் பல நிறுவனங்களில் அளிக்கப்படுகின்றன. இளநிலை படிக்க அடிப்படை தேவை ஏதோ ஒரு பிரிவில் பிளஸ் டூ முடித்திருக்க வேண்டும். அதேபோல பி.ஏ., பி.காம்., பி..எஸ்சி. இப்படி எந்தப் பாடத்தில் இளநிலை முடித்திருந்தாலும் முதுநிலை குற்றவியல் படிக்கலாம். மேலும் சென்னை பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வுப் பிரிவும் உள்ளது.

சென்னை பல்கலைக்கழகம்

எம்.எஸ்சி. கிரிமினாலஜி அண்ட் கிரிமினல் ஜஸ்டிஸ் சைன்ஸ்

(2 ஆண்டுகள்)

சைபர் கிரைம் அண்ட் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி ஓராண்டு

பட்டயப் படிப்பு.

முனைவர் பட்ட ஆய்வு (முழு நேரம், பகுதி நேரம்). யூ.ஜி.சி., தமிழக அரசு, தேசியப் பெண்கள் கமிஷன், யூனிசெஃப் உள்ளிட்ட அளிக்கும் கல்வி உதவித் தொகையோடு இதைப் படிக்கலாம்.

இதே போல, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், லக்னோ பல்கலைக்கழகம், லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரிமினாலஜி அண்ட் ஃபாரன்ஸீக் சைன்ஸ் (புது டெல்லி), டிஜி வைஷ்ணவ் கல்லூரி உள்ளிட்ட நிறுவனங்களிலும் கற்றுத் தரப்படுகிறது.

வேலைவாய்ப்பு

# கல்வியாளர்

# ஆய்வாளர்

# தடயவியல் மற்றும் பாதுகாப்பு மேலாளர்

# தனியார் உளவுத்துறை நிபுணர்

# அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தடயவியல் விஞ்ஞானி உதவியாளர்

# சமூகப் பணியாளர்

# மறுவாழ்வு மைய ஆலோசகர்

# குற்ற நிருபர், குற்றவியல் பத்திரிகையாளர்

# சோஷியல் டிஃபன்ஸ் துறையில் புரோபேஷனரி அதிகாரி

# யூ.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி. எஸ்.எஸ்.பி., ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி. உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் எழுதி அரசு அதிகாரி மேலும் பல பணி வாய்ப்புகள் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in