சேதி தெரியுமா? - துப்பாக்கிச்சூட்டில் விவசாயிகள் பலி

சேதி தெரியுமா? - துப்பாக்கிச்சூட்டில் விவசாயிகள் பலி
Updated on
3 min read

மத்தியப் பிரதேசத்தின் மந்தசவுர் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஆறு விவசாயிகள் காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜூன் 6 அன்று கொல்லப்பட்டனர். விவசாயக் கடன்களை ரத்து செய்யக்கோரியும், விளை பொருட்களுக்கு நியாயவிலையை நிர்ணயிக்கக் கோரியும் மந்தசவுரில் விவசாயிகள் ஜூன் 1 முதல் 10-ம் தேதி வரை போராட்டம் செய்வதாக அறிவித்திருந்தனர். இப்போராட்டத்தைக் கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் விவசாயிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

இந்த வன்முறையால் பிரச்சினைக்குரிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட சுமார் 56 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், இந்தப் போராட்டத்தில் தொடர்புடைய 100 பேர் காவலில் வைக்கப்பட்டனர். விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யக்கோரிப் போராடிய விவசாயிகள் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் மத்தியப் பிரதேச விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர்.

மத்தியப் பிரதேசத்தில் இயல்புநிலை திரும்புவதற்காக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான் விவசாயிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார். விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.

ஆதார் அட்டை கட்டாயமில்லை

வருமான வரியைத் தாக்கல் செய்ய ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்க வேண்டுமென்று கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பான வழக்கில் ஜூன் 9-ம் தேதி உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பில் ஆதார் அட்டை இருப்பவர்கள் பான் எண்ணை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால், ஆதார் அட்டை இல்லாதவர்கள், பான் அட்டை இல்லாதவர்களுக்கு இதைக் கட்டாயமாக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறது.

ஆதார் அட்டை தனிமனிதச் சுதந்திரத்துக்கு எதிரானதா என்பது குறித்து அரசியல் சாசன அமர்வு முடிவை அறிவிப்பதற்கு முன், ஆதார் அட்டையை எந்தச் செயல்பாடுகளுக்கும் கட்டாயமாக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், தனிப்பட்ட விவரங்கள் பொதுத்தளங்களில் அம்பலமாகாமல் தடுப்பதற்கு மத்திய அரசு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

கடல் மாசுக்குக் காரணமாகும் பிளாஸ்டிக்

நதிகளில் எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள்தான் உலகம் முழுவதும் இருக்கும் கடல்கள் மாசடைவதற்குக் காரணம் என்று சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது. ‘தி ஓஷன் க்ளீன் அப்’ (‘The Ocean Cleanup’) என்ற டச்சு நிறுவனம் நடத்திய ஆய்வில் 11.5 - 24.1 லட்சம் டன் பிளாஸ்டிக் ஒவ்வோர் ஆண்டும் கடலில் கொட்டப்படு வது தெரியவந்தது. இவற்றை அகற்றுவதற்கு 48,000 முதல் 100,000 டிரக்குகள் தேவைப்படும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதிலும் உலகில் அதிகமாக மாசடைந்த 20 நதி களிலிருந்துதான் மூன்றில் இரண்டு பங்கு மாசு கடலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய நதியான சீனாவின் யாங்சி நதி அதிகமான மாசை கடலுக்கு அனுப்புகிறது. இந்த நதி கிழக்கு சீனக் கடலுக்கு 3,30,000 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அனுப்புகிறது.

மாசை கடலுக்கு அனுப்புவதில் இந்தியாவின் கங்கை நதி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. சீனாவிலிருந்து மேலும் மூன்று நதிகளும், இந்தோனேஷியாவின் நான்கு நதிகளும் அதிகமான மாசைக் கடத்தும் நதிகளின் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. “ஆசியாவின் நதிகளிலிருந்துதான் அதிகமான பிளாஸ்டிக் கழிவு கடலுக்குச் செல்கிறது. ஆசிய நாடுகளின் அசுர வேக பொருளாதார வளர்ச்சி, மோசமான கழிவு மேலாண்மை போன்றவற்றைப் பரிசீலிக்க வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது” என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் 2050-ல் கடலில் இருக்கும் மீன்களின் அளவைவிட பிளாஸ்டிக் கழிவின் அளவு அதிகமாக இருக்கும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்தார்.

பிரதமருடன் சீன அதிபர் சந்திப்பு

கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் ஜூன் 9-ம் தேதி நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசிய மோடி, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதைப் பற்றிக் கலந்தாலோசித்தார். கடந்த மாதம், பெய்ஜிங்கில் நடைபெற்ற பெல்ட்-சாலை மன்ற (Belt and Road Forum) மாநாட்டில் 29 உலகத் தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆனால், இந்த மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. அதற்குப் பிறகு, இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துக்கொள்ளும் முதல் சந்திப்பு என்பதால் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

இந்தச் சந்திப்பில், இரண்டு நாடுகளும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்தவும், சர்வதேசப் பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து செயல்படவும், இருதரப்பு முக்கியப் பிரச்சினைகளை மதிக்கவும், சச்சரவுகளைச் சரியாகக் கையாளவும் வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார். இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதற்கு சீனா அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, அடுத்த மாதம் ஜெர்மனியில் நடக்கும் ஜி-20 மாநாட்டிலும் இந்தியா-சீனா பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கத்தாரின் உறவைத் துண்டித்த அரபு நாடுகள்

கத்தார் நாட்டுக்கான தூதரக உறவுகளை ஜூன் 5-ம் தேதி, பஹ்ரைன், எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நான்கு நாடுகளும் முற்றிலும் துண்டித்துவிட்டன. ஈரானுக்கு ஆதரவு, பயங்கரவாதிகளுக்கு ஆதரவு போன்றவற்றை இந்தத் துண்டிப்புக்கான காரணங்களாகச் சொல்கின்றன அரபு நாடுகள். கத்தாருக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான உறவு துண்டிப்பால் எண்ணெய் விலை உயர்வதற்கும், எல்.என்.ஜி. கேஸ் ஏற்றுமதி பாதிக்கப்படவும் வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.

அரபு நாடுகளின் மத்தியில் குழப்பங்களை உருவாக்க கத்தார் பயங்கரவாதத்தை ஊக்குவித்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்நாடு ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-கொய்தா இயக்கங்களுக்கு உதவிசெய்துவருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது சவுதி அரேபியா. இந்நிலையில் அரபு நாடுகளுடனான உறவைப் புதுப்பிக்க கத்தார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

சீனாவில் 6.6 கோடி பழமையான முதலையின் படிவம்

வடகிழக்கு சீனாவில் 6.6 கோடி முதல் 14.5 கோடி ஆண்டுகள் வரை பழமையான முதலையின் படிமமும், ஆறு வகையான டைனோசர்களின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. சீன அறிவியல் அகாடமியின் ஆய்வாளர்கள் ஜூன் 1-ம் தேதி, 1.5 மீட்டர் நீளமான முதலையின் படிவங்களைக் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்தப் படிமத்தின் தலையிலிருந்து வால்வரை முழுமையாகப் பாதுகாக்கப்பட்டிருந்த நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

கடந்த ஆண்டு, லாங்ஷன் மலையில் டைனோசர் படிவங்கள் கிடைத்ததை அடுத்து, சீன அறிவியல் அகாடமியின் ஆய்வாளர்கள் இந்த ஆராய்ச்சியை மீண்டும் தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. “முதலைகளும், டைனோசர்களும் ஒன்றாக வாழக்கூடியவை. அப்படியிருப்பின் மேலும் பல படிமங்கள் இந்த இடத்தில் புதைந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கிறோம். இப்போது கிடைத்திருக்கும் கண்டுபிடிப்புகள் படிவங்களின் வளங்களைப் புரிந்துகொள்வதற்கு மேலும் உதவும்” என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in