

கமலாவும், அவள் கணவனும் செருப்புகளை பயபக்தியுடன் விட்டுவிட்டு உள்ளே நுழைந்தார்கள். மெல்லிசை, அதிர்ந்து பேசாதவர்கள், அந்த அமைப்பின் தொண்டர்கள், தன்னார்வர்கள், மேடையில் இருந்த வெண்திரை, பிரதான குருவின் புகைப்படம்...கீழே தியானப் பயிற்சி அளிக்க வந்திருப்பவரின் சீடர்த்தனமான புன்னகை என அந்தத் திருமண மண்டபம் இப்போது ஆன்மிகக் கோலம் பூண்டிருந்தது.
தொடர்ந்து உபதேசங்கள், பிறவியின் நோக்கம், உய்வித்தல்கள்... நடுநடுவே உடலின் சக்கரங்கள் பற்றிப் பேசினார்கள்.
உபதேசங்களைப் பொழியும் சிடிக்களை பரவசமுடன் கமலா வாங்கினாள். இத்தனை நாள் எவ்வளவு சண்டைகள், டிவி சீரியல்கள், பட்டுப்புடவைகள்! பாவம், குண்டலினி எப்படி மேலெழும்பும்? அதைத் தட்டி எழுப்பப் பணம் செலுத்திவிட்டு கணவனிடம் ஆன்மிகம் தெறிக்கும் விழிகளுடன் சொன்னாள்.“ஏங்க, இந்தப் பிரபஞ்சத்துல, தானும் ஒரு தூசுங்கறது, தூசுகளின் தூசான உங்க அம்மாவுக்கு மட்டும் ஏன் புரியவே மாட்டேங்குது?”
எத்தனை பேர் உத்தியோக ரீதியில் இல்லாமலும், சாரணர் போன்ற பயிற்சிகளுக்காக இல்லாமலும், நீங்களாகவே போக்குவரத்து நெரிசலைச் சீர் செய்திருப்பீர்கள்?
பொறுப்பற்ற ஒருவரின் வாகனத் தவறால், எல்லா வாகனங்களையும் அவதிக்குள்ளாக்குகிற சாலைகளும், அந்த நெரிசல்களில் திணறிய அனுபவங்களும் எல்லோருக்கும் இருக்கின்றன. யாரும் தங்கள் வாகனங்களைப் பின்னால் எடுக்கவும் மாட்டார்கள்; எடுக்கவும் முடியாது. இப்போது குறுகிய சாலைகளையும், வண்டி ஓட்டத் தெரியாதவர்களையும் திட்டியவாறு, ஹாரன் அடிப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது.
இத்தகைய தருணங்களுக்கென்றே படைக்கப்பட்ட ஒருவர்--பெரும்பாலும் அதிகம் படிக்காதவராக இருப்பார்--தோன்றி போக்குவரத்துச் சட்டத்தைக் கையில் எடுப்பார்.
“அந்த வண்டி இப்படி வரட்டும்”
“ஹலோ, முதல்ல அவர் போகட்டும்.. ரைட்... ரைட்...வாங்க...”
சில நிமிடங்களில் திணறல் சீராகும். எங்காவது ஒரு இடைவெளி கிடைத்து தன் வண்டி மட்டும் நகர்ந்து விடாதா என்றே பலரும் நினைக்கையில் அந்த ஒருவரால் எப்படி சீருடையற்ற காவலராக மாறத் தோன்றியது?
காலந்தோறும் எத்தனையோ பெரியவர்கள் மனதுக்குள்ளே தூவ நல்ல விதைகளை ஸ்டாக் வைத்த வண்ணம் இருக்கிறார்கள். இவற்றை வளர்த்தால் மனதில் நல்ல மாற்றம் வரும் என்பதால், ஆசையுடன் அவற்றை “add to the cart” என்கிறோம். அந்த விதைகள் ஏன் விண்ணைப் பார்க்கவில்லை? அவை மலர்ந்திருந்தால் இந்த நேரம் உலகமே அழகிய சோலையாகி இருக்குமே!
நாம் நல்ல கருத்துக்களால் ஈர்க்கப்படுவதும், அவற்றை சேமிப்பதும் உண்மை. ஆனால், அவை அடுத்தவருக்கே பொருந்தும் என்றே நினைக்கிறோம். அடுத்தவர்கள் எல்லோரும் மாறிவிட்டால் இந்த உலகம் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று கனவுப்பால் அருந்துகிறோம். ஆனால், உண்மையில் நம் அந்தராத்மா, “நம் விருப்பத்துக்கு ஏற்ப இந்த உலகம் மாற வேண்டும்” என்றே ரகசியக்குரல் எழுப்புகிறது. இதைத்தான் “ஏன் இந்த மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்” என்று தந்திரமாக வியப்பும் கவலையும் அடைகிறோம்.
“உன்னைப் போல் பிறரையும் நினை” என்பதைப் போல “உன்னைப் போல பிறர் இல்லை”; “பிறரைப் போல நாம் இல்லை”; “யாரும் யாரையும் போல இல்லை” என்பவையும் உண்மையே.
இந்த உலகில் ஒரே ஒரு ‘நீங்கள்தான்’. உங்களைப்போல தனித்துவம் கொண்ட இன்னொருவர் இருக்கவே முடியாது. இயற்கை மிகவும் சிரமப்பட்டு ஒரே ஒரு உங்களை உருவாக்கியிருக்கிறது. இதற்கு முன் நீங்கள் இல்லை, இனியும் நீங்கள் இல்லை! என்ன ஒரு தயாரிப்பு நீங்கள்!
இது பிறருக்கும் பொருந்துகிற போது, அடுத்தவரை எப்படி முழுமையாகக் கழற்றிப் போட்டு உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றம் செய்ய முடியும்? ஆனால் நாம் அத்தகைய ரசாயன மற்றும் ஜீன் ஆச்சரியத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம்!
“ஏன், அவளால முடிஞ்சது உன்னால முடியாதா?”
“அவனைப் பார், நீயும் இருக்கியே” என்பன போன்ற வார்த்தைகள் நம்முள் சாதாரணமானவை.
ஒரு ரோஜாவை, இன்னொரு ரோஜாவாகக்கூட மாற்ற இயலாதபோது, அதை எப்படி மல்லிகையாக மாற்ற முடியும்? எப்படி இன்னொரு மனிதரது தனித்துவத்தைக் கலைக்க முடியும்? அடுத்தவரை மாற்றும் முயற்சிகள் உலகின் சிறந்த வெட்டி வேலைகளில் ஒன்றாகவே கருதப்படும்.
அப்படியானால் மாற்றம் வர வேண்டாமா? கண்டிப்பாக வேண்டும். ஆனால் அடுத்தவருக்கு அல்ல நமக்கு! இந்த உலகில் நம்மால் மாற்றக்கூடிய ஒரே நபர் நாம்தான்! நாம் வேண்டுமானால் விருப்பம் போல பல கெட்டப்புகளில் மாறி மகிழலாம். இது புரியாமல் “எல்லாமே மாறணும்”; “எல்லோரும் மாறணும்” என்றால் அது ஜோக்காகத்தான் இருக்க முடியும்.
அந்த மாற்றத்தை ஒருவர் மனப்பூர்வமாக விரும்பினாலொழிய அவரை யாரும் மாற்றவே முடியாது.
அதனால்தான் மாமியார், மருமகள் சண்டை ஓயட்டும் என்ற எண்ணத்தில் அழைத்து வரப்பட்ட கமலாவால் மாமியார் மீது தனக்குள்ள வெறுப்பை ஆன்மிக வார்த்தைகளில் கொட்ட முடிகிறது. எந்த நல்ல சூழலும் அவளை மாற்றப் போவதில்லை--அவளாக விரும்பாதவரை.
நம்மால் முடியாதபோது ஒரே ஒரு மனிதரால் போக்குவரத்துக் கடவுளாக அவதாரம் எடுக்க முடிகிறது. அது அவரது இயல்பு. விமானங்கள் தடுமாறினாலும் அவர் இதே வேலையைத்தான் செய்வார்!
இன்னொரு எளிய உதாரணம். “அப்படிச் செய்திருக்கணும், ஏன் இப்படிச் செய்யலை?”என்று நாட்டிலுள்ள எல்லா அரசியல்வாதிகளுக்கும் டீக்கடை, ட்விட்டர் மூலம் அறிவுரை சொல்கிறோம். சரி, நாமே ஏன் களத்தில் இறங்கவில்லை? ஏனென்றால், நேரடி அரசியலில் ஈடுபடுவது நமது இயல்பு அல்ல. அந்த இயல்பைக் கொண்டவர்கள் அரசியல் செய்கிறார்கள்; நாம் “அரசியலில் நுழையத்தான் போனோம். அன்னிக்கு ஒரே ட்ராஃபிக் ஜாம். திரும்பி வந்துட்டோம்...”என்று சாக்குகள் சொல்லி, ஆலோசகர்களாக மாறுகிறோம்!
எல்லோரும் அவரவர் இயல்பின்படிதான் இருப்பார்கள். இருக்கவும் முடியும். எனவே ‘ஜட்ஜ்’ முன்னால் ஆடத் தயாராக இல்லாத உங்கள் குழந்தையை மட்டம் தட்டித் திட்டாதீர்கள்!
தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com