புதிய கல்வி-பணி உலகம்: பட்டதாரி வேண்டாம் திறமைசாலியே போதும்!

புதிய கல்வி-பணி உலகம்: பட்டதாரி வேண்டாம் திறமைசாலியே போதும்!
Updated on
3 min read

ஏதோவொரு பட்டப் படிப்பை முடித்திருந்தாலே வேலை நிச்சயம் என்பது அந்தக் காலம். பட்டம் இருந்தும் திறன் போதாமையால் வேலையின்றித் தவிப்பது இந்தக் காலம். பட்டமே தேவை இல்லை திறன்களே போதும் என்பதே எதிர்காலம்.

நம்ப முடியவில்லையா? கூகுள், ஆப்பிள், ஐ.பி.எம்., நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட 15 சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள் பட்டதாரிகள் அல்லாத பலரை ஏற்கெனவே பணியமர்த்த ஆரம்பித்துவிட்டன.

அதிலும் அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தில் கடந்த ஆண்டு பணியமர்த்தப்பட்டவர்களில் 50 சதவீதத்தினர் திறமைசாலிகளே தவிரப் பட்டதாரிகள் அல்ல.

ஏன் இந்த முடிவு? இந்தியாவைப் போலவே அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிலும் உள்ள கல்லூரி கள் பணி வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை மாணவர்களுக்குக் கற்பிப்பதில்லையாம்.

ஆகவேதான் திறனற்ற பட்டதாரிகளைத் தேர்ந்தெடுப்பதைவிடப் பட்டமின்றி யும் திறமையுடன் திகழ்பவர்களுக்கு வேலை அளிக்கத் தொடங்கி இருக்கிறது ஆப்பிள் நிறுவனம் என்று அதன் தலைமைச் செயலதிகாரி டிம் குக் அண்மையில் தெரிவித்தார்.

வேகத்துக்கு ஈடுகொடுக்கும் கல்வி

இதே புரிதலுடன் சென்னையில் செயலாற்றிவருகிறது ஜோஹோ கார்ப் நிறுவனம். சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையான தரத்துடன் 47 விதமான மென்பொருள்களை தயாரித்துவரும் இந்திய நிறுவனம் இது. இந்நிறுவனத்தில் பணிபுரியும் 7,700 ஊழியர்களில் பலரிடம் பட்டம் இல்லை.

ஆனால், பட்டறிவு உள்ளது. இதுபோக, தொழில்நுட்பத் துறையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அதிவேக வளர்ச்சிக்குத் தமிழக மாணவர்களைத் தயார்படுத்தி வருகிறது ஜோஹோ கார்ப் நிறுவனத்தின் ஜோஹோ பல்கலைக்கழகம்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. பாடத்திட்டமும் கிடையாது, பட்டமும் வழங்கப்படுவதில்லை. ஆனாலும், ஜோஹோவில் படிக்கவும் இதன் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியவும் இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

அப்படி என்னதான் செய்கிறது இந்தப் பல்கலைக்கழகம் என்பதைக் கண்டறிய ஓர் விசிட் அடித்தோம். அதன் தலைமைக் கல்வியாளர் ராஜேந்திரன் தண்டபாணியோடும் ஜோஹோ பல்கலைக்கழகத்தில் படித்து ஜோஹோ கார்ப்பில் மென் பொறியாளராகப் பணியாற்றிவரும் சில இளைஞர்களோடும் உரையாடினோம்.

கட்டுப்பாடுகள் இனி இல்லை

“திரும்பிய திசையெல்லாம் கணினிப் படிப்புகள் வழங்கும் கல்லூரிகள் இருந்தும் எங்களுக்குத் தேவையான திறன் கொண்ட ஊழியர்கள் கிடைப்பது சிரமமாயிற்று. இதற்குத் தீர்வு காண ஜோஹோ பல்கலைக்கழகத்தை 2004-ல் தொடங்கி்னோம். மற்ற துறையில் தியரி, ப்ராக்டிக்கல்  இரண்டாகப் பிரிந்திருக்கும்.

கணினித் துறையில் ப்ராக்ட்டிக்கல் தவிர ஏதுமில்லை. ஆகையால் இங்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஏட்டுப் பாடத்தை மட்டுமே பயிற்றுவிப்பவர்கள் அல்ல. அவர்களே புதிய கணினித் திட்டங்களில் பணிபுரிபவர்கள் என்பதால் கணினித் தொழில் நுட்பத்தில் அப்டேட்டாக இருக்கி றார்கள். பிளஸ் 2 அல்லது டிப்ளமா முடித்தவர்களுக்கு நுழைவுத் தேர்வு அடிப்படையில் இங்கு சேர்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

மூன்று கட்டங்களாக நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் கணிதத் திறன், சிக்கல் தீர்க்கும் திறன் (problem solving skill) குறிப்பாக சமயோஜிதப் புத்திக்கூர்மை ஆகியவை சோதிக்கப்படும். ஆங்கில மொழி அறிவு கட்டாயமல்ல என்பதால் பல அரசுப் பள்ளி மாணவர்களும் எங்களிடம் படித்துவருகிறார்கள்.

முதலாமாண்டில் வகுப்பறையில் செயல்வழிக் கற்றல், இரண்டா மாண்டில் ஜோஹோ அலுவலக ஊழியர்களுடன் குழுவாக இணைந்து சோதனை வழியாகக் கற்றல் என்பதுதான் எங்களுடைய பாணி.

கட்டுப்பாடற்ற சூழலில்தான் உண்மையான கற்றல் சாத்தியம் என்று உறுதியாக நம்புகிறோம். ஆகையால், வருகைப் பதிவு, தேர்வு போன்ற எத்தகைய நிபந்தனையும் கிடையாது. குறிப்பாக, ஜோஹோ நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தம் இங்கே படிப்பவர்களுக்கு விதிக்கப்படுவதில்லை. இருப்பினும், இங்கே படித்தவர்களில் 700-க்கும் மேற்பட்டவர்கள் ஜோஹோ நிறுவனத்திலேயே இன்றுவரை உத்வேகத்துடன் பணியாற்றி வருகிறார்கள்.

அதேபோல சக ஊழியரைப் போட்டியாளராகக் கருதாமல் தோழமையோடு அணுக ‘ஜெம்ஸ்’ திட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளோம். இதில் தனித்துச் சிறப்பாகச் செயலாற்றுபவர்களைக் காட்டிலும் உடனிருப்பவர்களோடு இணக்கமாகச் செயல்படுபவர்களை ஊக்குவிக்கிறோம். இவ்வாறாகப் புதிய பணிக் கலாச்சாரத்தை உருவாக் குவதே எங்களுடைய இலக்கு” என்கிறார் ராஜேந்திரன் தண்டபாணி.

அமெரிக்கா செல்லவில்லை…

‘ஸ்கூல் ஆஃப் டெக்னாலஜி’, ‘ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்ட் ஸ்டடி’, ‘ஸ்கூல் ஆஃப் டிசைன்’, ‘ஸ்கூல் ஆஃப் பிஸினஸ்’ ஆகிய நான்கு விதமான இரண்டாண்டு படிப்புகள் ஜோஹோ பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகின்றன. அவற்றில் கணினி அறிவியலில் தேர்ந்த மாணவர்களுக்காக நடத்தப்படும் ‘ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடி’யின் இரண்டாமாண்டு மாணவர் பிரேம்.

அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பி.டெக்.கணினி அறிவியல் படிக்க இடம் கிடைத்தும் அதை உதறித்தள்ளி விட்டு ஜோஹோவில் படித்துவருவதாகச் சொல்கிறார் இவர். “ஈரோட்டைச் சேர்ந்த நான் அமெரிக்கா விசாவுக்காக சென்னை வந்தபோதுஜோஹோ வளாகத்தைப் பார்வையிட்டு முன்னாள் மாணவர்களுடன் உரையாடிய பிறகு இங்கேதான் படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.  டிஜிட்டல் உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ‘ஹாக்கிங்’யைத் தடுக்க ‘எத்திக்கல் ஹேக்கிங்’ என்ற சவால் மிகுந்த பணியை உற்சாகமாகச் செய்துவருகிறேன்” என்கிறார் பிரேம்.

திறமைக்கு ஏற்ற பணி

மதுரையைச் சேர்ந்த நிஷாந்தினி டிப்ளமா படித்தவர். 2011-ல் ஜோஹோ பல்கலைக்கழகத்தில் ‘ஸ்கூல் ஆஃப் டெக்னாலஜி’யில் படித்துக் கடந்த ஆறாண்டுகளாக ஜோஹோ கார்ப் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். “நான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். டிப்ளமா முடித்ததும் டிவிஎஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

 ஆனாலும், ஜோஹோவில் சேரும் கனவால் பெற்றோரைச் சமாதானப்படுத்தி சம்மதம் பெற்று இங்கு வந்து படித்தேன். ரூ. 8,000 முதல் ரூ. 15,000வரை ஊக்கத்தொகை, மூன்று வேளை உணவு, போக்குவரத்து வசதிகள், லேப்டாப், அலைபேசி ஆகியவை வழங்கப்பட்டன. என்னுடைய பேட்சில் 25 மாணவிகள் தேர்வாகி இருந்தோம். இப்போது எல்லோருமே அவரவர் திறமைக்கு ஏற்ப பணிபுரிந்து கொண்டிருக்கிறோம்” என்கிறார் நிஷாந்தினி.

பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்பதுபோல் புதிய பணி உலகத்துக்குத் தேவையான கல்வியை மாணவர் களுக்கு ஊட்டத் தவறிவிட்டு வேலையின்மைக்கு அவர்களை மட்டுமே குறை சொல்லிக் கொண்டி ருக்கிறோம்.இந்நிலையில், கணினிக் கல்வியில் மாற்றம் கொண்டுவர முயலும் ஜோஹோ போன்ற நிறுவனங்களை அடையாளம் காணும் அதேவேளையில் நம்முடைய கல்வி நிறுவனங்களின் போதாமைக்கும் தீர்வு காண வேண்டிய நேரம் இது.

கூடுதல் விவரங்களுக்கு:

www.zohouniversity.com

கட்டுரையாளர் தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in