

தகவல் நிரம்பி வழியும் யுகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்மில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாக மாறிப்போன சமூக ஊடகங்கள் தகவல் தெப்பக்குளத்தில் மிதந்துகொண்டிருக்கின்றன. இதனால் எந்நேரமும் எதையோ வாசித்துக்கொண்டிருக்கிறோம். அதேவேளையில் ஆழமான வாசிப்புப் பழக்கம் நம்மிடமிருந்து விலகிக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.
இரண்டுமே வாசிப்புதான் என்றாலும் புத்தக வாசிப்புக்கும் துண்டு துணுக்குகளின் வாசிப்புக்கும் நிச்சயம் பாரதூரமான வித்தியாசம் உள்ளது. துணுக்குகள் நமக்குத் தோழனாக முடியாது, அவை நம்மை ஆற்றுப்படுத்த வல்லவை அல்ல, அவற்றால் வழிகாட்ட முடியாது. இவை அனைத்தையும் இவற்றுக்கு அப்பாலும் செய்யக்கூடியவை புத்தகங்கள். புத்தகங்களிலும் சரியானவற்றைத் தேர்வுசெய்து வாசிப்பதுதான் புத்திசாலித்தனம்.
தத்துவ அறிஞர் பிரான்சிஸ் பேக்கன் சொன்னதுபோல, “சில புத்தகங்களைச் சுவைக்க வேண்டும், சிலவற்றை அரக்கப்பரக்கச் சாப்பிட வேண்டும், மிகச் சிலவற்றை மட்டுமே மெல்ல மென்று தின்று முழுவதுமாக ஜீரணிக்க வேண்டும்”. அப்படி முழுவதுமாகப் புசிக்க வேண்டிய புத்தகங்களில் சில:
பதிலைத் தேடிக் கண்டுபிடித்தோமா?
‘குரங்கிலிருந்து மனிதன் வந்ததை இதுவரை யாரும் பார்க்கவில்லை. அதனால் குரங்கிலிருந்து மனிதன் வந்தானென்பது அறிவியல்பூர்வமாகத் தவறு’ என்று அண்மையில் கூறினார் மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் சத்யபால் சிங். இதனால் அவர் மீம்களால் கேலி செய்யப்பட்டார், அவருடைய பிற்போக்குத்தனம் பகடிக்குள்ளானது. அதேவேளையில் டார்வின் கோட்பாட்டில் பிழை உள்ளதா என்ற கேள்வியும் பலருக்கு எழவே செய்தது. ஆனால், அதற்கான பதிலை தேடிக் கண்டுபிடித்தோமா?
மனிதப் பரிணாமம் குறித்து ஏராளமான புத்தகங்கள் இதுவரை வந்திருந்தாலும் காலத்துக்குத் தேவையான விவாதங்களுடன், ஆய்வு நிரூபணங்களுடன் எளிய மொழி நடையில் முனைவர்.சு.தினகரன் எழுதி இருக்கும் நூல்தான், ‘மனிதனாய் ஆன கதை’. விவசாயிகள் முதல் விஞ்ஞானிகள்வரை உறுப்பினர்களாகக் கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ‘அறிவியல் வெளியீடு’ இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
‘மனிதனாய் ஆன கதை’ l முனைவர்.சு.தினகரன்
அறிவியல் வெளியீடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
ரூ.40/-
245, (ப.எண்:130-3), அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை - 600 086.
தொடர்புக்கு: 044-28113630
படித்த மேதைகளை நோக்கி
கல்வியின் முக்கியத்துவம் பேசப்படும் போதெல்லாம், ‘படிக்காத மேதைகள் இல்லையா? ’ என்ற எதிர்வாதம்தான் உடனடியாக முன்வைக்கப்படுகிறது. ஓடாமல் இருக்கும் கடிகாரமும் இரண்டு வேளை சரியான நேரத்தைக் காட்டும் என்பதைப் போன்றதே இந்த வாதம். ஆகையால், இன்றைய இளைஞர்கள் தாங்கள் கல்வி கற்பது மட்டுமல்லாமல் தாங்கள் பெற்ற கல்வியை நாட்டின் வளர்ச்சிக்காக முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இந்தச் சிந்தனையை முன்னிறுத்தி இறையன்பு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்தான், ‘இணையற்ற இந்திய இளைஞர்களே’ புத்தகம்.
‘இணையற்ற இந்திய இளைஞர்களே’ | l வெ.இறையன்பு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
ரூ.65/-
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098
தொலைபேசி எண்: 044-26251968
கதை வடிவில் கணிதம்
பொது அறிவு, சமூக நீதி, நற்பண்புகளைக் கதைகள் மூலம் உணர்த்துவது போல அறிவியல் சிந்தனைகளையும் கதைகள் மூலமாகக் கொண்டு சேர்க்கும் முயற்சிகள் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன. அந்த வகையில் கணிதத்தையும் கதையாகச் சொல்லும் முயற்சியில், ‘கதையில் கலந்த கணிதம்’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர் பேராசிரியர் இரா. சிவராமன். அவருடைய புதிய புத்தகம், ‘கதையிலிருந்து கணிதம் வரை’ ’13’ என்ற எண் துரதிருஷ்டமாக நம்பப்படத் தொடங்கியதற்குப் பின்னால் உள்ள இயேசு கிறிஸ்துவின் இறுதி உணவுக் காட்சி, கிறிஸ்து காலத்துக்கு முன்பாகப் புனித எண்ணாக 13 கருதப்பட்ட வரலாறு…இப்படிக் கணிதத்தைக் காலத்தோடும் வரலாற்றோடும் வெவ்வேறு கதைகளின் ஊடாகப் பல கோணங்களில் விளக்குகிறது இப்புத்தகம்.
‘கதையிலிருந்து கணிதம்வரை’ l இரா.சிவராமன்
ரூ. 120/-
691 பதிப்பகம், எண். 57, பாரதீஸ்வரர் காலனி மூன்றாம் தெரு, கோடம்பாக்கம்,
சென்னை - 600 024 தொடர்புக்கு: 97108 95757
உரிமையை மீட்போம்
பல மொழிகள், பல பண்பாடுகள் கொண்ட மக்களை மட்டுமல்லாமல் பல்வேறு சமூக ஏற்றத் தாழ்வுகள், அதனால் கல்வி வளர்ச்சியிலும் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட தேசம் இந்தியா. இந்த காரணங்களைப் புறந்தள்ளிவிட்டுக் கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்வது தவறான கொள்கை. இதனால் மாநிலங்களின் அதிகாரம் பறிபோகும் என்பதைச் சட்டரீதியாகவும் சமூக-கலாச்சார அடிப்படையிலும் சுட்டிக்காட்டி 2011-ம் ஆண்டில் சென்னையில் நடத்தப்பட்டது, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரக் கோரும் மாநாடு. அதன் எழுத்து வடிவம்தான் இந்தப் புத்தகம்.
‘மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?’ l தொகுப்பாசிரியர் கி. வீரமணி
திராவிடக் கழக (இயக்க) வெளியீடு
ரூ.50/-
பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600 007. தொடர்புக்கு: 044- 26618161
நூலகத்தின் சில பக்கங்கள்
‘அறிவுப் போராட்டத் திற்கான படைக்கலன்கள் செய்யும் படை வீடு நூலகம்’ என்றார் இங்கர்சால். இப்படி மூளையைப் பட்டை தீட்டும் அறிவுக்கூடமான நூலகங்கள் காலந்தோறும்
நிறுவப்பட்ட கதைகளை, வெவ்வேறு வகைப்பட்ட நூலகங்கள் குறித்த விவரங்களை, இன்றைய டிஜிட்டல் நூலகங்கள் பற்றிய தகவல்களை ‘நூலகங்களும் ஆவணங்களும் பாதுகாப்பு முறைகளும்’ என்ற புத்தக வடிவில் வழங்கி இருக்கிறார் முனைவர் ப.பாலசுப்பிரமணியன்.
‘நூலகங்களும் ஆவணங்களும் பாதுகாப்பு முறைகளும்’ l ப.பாலசுப்பிரமணியன்
சங்கர் பதிப்பகம்
ரூ.85/-
21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2-வது தெரு, இராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம்,
சென்னை – 600 049 தொடர்புக்கு: 044 – 2650 2086