தொகுப்பாளரை உருவாக்கும் தமிழ்ப் பயிலரங்கம்!

தொகுப்பாளரை உருவாக்கும் தமிழ்ப் பயிலரங்கம்!
Updated on
2 min read

தொலைக்காட்சித் துறை, திரைப்படத் துறை, நிகழ்ச்சி மேலாண்மைத் துறை, வானொலித் துறை உள்ளிட்ட துறைகளில் இன்று தொகுப்பாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. தமிழ் ஊடகங்களில் தொகுப்பாளராக மிளிரவும் படைப்பாளியாக ஒளிரவும் தமிழ் வளர்ச்சித் துறை நடத்திவரும் திட்டம்தான் ‘இளந்தமிழர் இலக்கியப் பயிற்சி பட்டறை’.

vijayajpg

ஆண்டுதோறும் ஒருவார உண்டு உறைவிட இளந்தமிழர் இலக்கியப் பயிற்சி பட்டறையைத் தமிழ் வளர்ச்சித் துறை நடத்துகிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.10 லட்சத்தை அரசு ஒதுக்கீடு செய்கிறது.

தமிழ் வளர்ச்சித் துறையால் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரிகளுக்கு இடையே கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி போன்றவை நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் முதல், இரண்டாம் பரிசு பெற்ற மாணவர்களுக்கு இங்கு பிரத்யேகப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

திருச்சி திருவரங்கத்தில் இந்தப் பயிலரங்கம் முதலாமாண்டு நடத்தப்பட்டது. ஏழாம் ஆண்டாக அண்மையில் மதுரையில் நடத்தப்பட்டது. மேடை பேச்சாளர்கள், திரைப்படப் பாடலாசிரியர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் எனப் பலதரப்பட்ட ஆளுமைகள் இங்கே பயிற்சியளித்துவருகிறார்கள். படைப்புத் திறனுள்ள கிராமப்புற மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுடைய திறமைகளை வெளிக்கொணர இவர்கள் உதவுகின்றனர்.

“2012-ல் தொடங்கி இதுவரை 1,500-க்கும் மேற்பட்டோருக்குப் பயிற்சி அளித்துள்ளோம். தமிழ் சார்ந்த கருத்துகளைக் கூறுவது மட்டுமின்றி யோகா, கலை பயிற்சிகளையும் அளிக்கிறோம். ஒருவார காலப் பயிற்சி, எதிர்கால வாழ்க்கைக்கு உதவும். தமிழ் மாணவர்களைவிட, பிற துறை, பொறியியல் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்” என்கிறார் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் விஜயராகவன்.

பயிலரங்கத்தின் பயனாளிகள்

2012-ல் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றேன். தமிழ் மொழியின் வளத்தைக் கற்றேன். மேடைப் பேச்சாளராக வலம் வருகிறேன்.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசுகிறேன். காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பணி வாய்ப்பை ஏற்படுத்தித் தந்ததும் இந்தப் பட்டறைதான்

– காரைக்குடி பழ.பாஸ்கரன், தொலைக்காட்சிப் பிரபலம்.

தமிழ் ஆர்வம் கொண்ட கிராமப்புற மாணவர்களின் திறமைகள் வெளிப்படும் வகையில் வழிகாட்ட முடிகிறது. பிற மாணவர்களுக்குப் பயிற்சி தரும் வகையில் வளர்த்தெடுத்தது இந்தப் பட்டறை. இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கிடைத்தது.

- முனீஸ்வரன்,  சட்டக் கல்லூரி மாணவர்.

அடிப்படையில் தமிழ் மாணவர் என்றாலும், என்னைச் செதுக்கியது இளந்தமிழ் பயிற்சிப் பட்டறை. கல்லூரிக் காலத்தில் பயிற்சி எடுத்தேன். இதன்மூலம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற வாய்ப்பு கிட்டியது. ‘முகிலோடு முத்தம்’, ‘காற்று’ உள்ளிட்டத் திரைப்படங்களுக்கு பாடல் எழுதி உள்ளேன்.

- கன்னியாகுமரி விஜய்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in