

சென்னையின் மிகப் பழமைவாய்ந்த பள்ளிகளில் ஒன்றான சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக 1931-ம் ஆண்டில் தனது 27 வயதில் பொறுப்பேற்றவர். அப்பள்ளியின் முதல் இந்தியத் தலைமையாசிரியர். ‘தலைமையாசிரியர்களுக்கெல்லாம் தலைமகன்’, ‘இந்தியாவின் நவீன கல்வி வரலாற்றின் சிகரம்’ என்றெல்லாம் வாஞ்சையுடன் அழைக்கப்படுபவர் குருவில ஜேக்கப்.
அப்பள்ளியில் 30 ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வுபெற்றதை அடுத்து ஆந்திரப் பிரதேசத்தின் ஹைதராபாத் பொதுப் பள்ளி, மகாராஷ்டிராவில் உள்ள பம்பாய் கதீட்ரல் அண்டு ஜான் கேனன் ஆகிய பள்ளிகளின் முதல்வராகப் பணியாற்றியவர். அவர் முதல்வராகப் பொறுப்பேற்ற காலத்தில் அவர் பணிபுரிந்த பள்ளிகள் அனைத்தும் பின்தங்கிய நிலையில்தான் இருந்தன. பின்னர்த் தன்னுடைய தொலைதூரப் பார்வையாலும் சமூக அக்கறையாலும் அவற்றை முன்மாதிரிப் பள்ளிகளாக வளர்த்தெடுத்தவர் குருவில ஜேக்கப்.
அவர் பணிபுரிந்த ஒவ்வொரு பள்ளியிலும் பின்பற்றப்பட்ட பாடத்திட்டம், பயிற்றுவிக்கும் முறை முதல் வகுப்பறைகளின் உள்கட்டமைப்புவரை அத்தனையிலும் அவருடைய ஆத்மார்த்தமான பங்களிப்பும் புத்திக்கூர்மையும் இருந்திருக்கிறது. அவருடைய வாழ்க்கை வரலாறு புத்தகமான ‘Shaping Young Minds' ஆசிரியர்களால் மட்டுமின்றிப் பல ஆளுமைகளால் கொண்டாடப்பட்டுவருகிறது.
அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் அவரை நினைவுகூரும் கூட்டம் ஒன்றை சென்னையில் அண்மையில் நடத்தினர். பள்ளிக் கல்வியை ஆகச்சிறந்த முறையில் மேம்படுத்தும் முனைப்போடு குருவில ஜேக்கப் பெயரில் தொடங்கப்பட்ட, ‘Kuruvila Jacob Initiative’ திட்டத்தின் 15-வது ஆண்டுவிழா கூட்டம் அது.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரும் தி இந்து குழுமத்தின் தலைவர்களில் ஒருவருமான என்.முரளி உள்ளிட்ட பிரமுகர்கள் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தனர்.
‘21-ம் நூற்றாண்டின் சவால்கள்: நம்முடைய குழந்தைகளை ஆசிரியர்களாகிய நாம் சரியாகத் தயார்படுத்துகிறோமா?’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் உலக வங்கியின் முன்னாள் மூத்த கல்வி நிபுணரும் ‘அனைவருக்கும் கல்வி’ என்ற சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் முக்கிய உறுப்பினருமான டாக்டர் வினிடா கோல்.
ஆசிரியர்களுக்குத் தொடர் பயிற்சி
‘Kuruvila Jacob Initiative’ திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள பல பள்ளிகளின் ஆசிரியர்களுக்குச் சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகிறது.
பள்ளி முதல்வர், நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களைச் செழுமைப்படுத்தும் ‘கல்வி தலைமைப் பண்புத் திட்டம்’ என்ற ஓராண்டு முதுநிலைப் பட்டயம் மற்றும் பயிற்சி அவற்றில் குறிப்பிடத்தக்கது.
கல்வியின் மணத்தைச் சிறார்களுக்கு அறிமுகப்படுத்தும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்குக் கற்பிக்கும் கலையின் நுணுக்கங்களையும் அத்துறையில் நிகழ்ந்துவரும் புதிய வளர்ச்சிகளையும் பயிற்றுவிக்கும், ‘A Class Apart’ சான்றிதழ் திட்டம், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பாதுகாப்பில் கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள இடைவெளிகளையும் சவால்களையும் இடைநிலை வகுப்பு ஆசிரியர்களுக்குப் பயிற்றுவிக்கும் ‘சூழலியல் கல்வி’ சான்றிதழ் திட்டம், தரமான கல்வியை அரசுப் பள்ளிகளில் சாத்தியமாக்க சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு, ‘Model School Accreditation programmes’ திட்டம் உள்ளிட்ட 10 விதமான திட்டங்களைக் கடந்த 14 ஆண்டுகளாக ‘குருவில ஜேக்கப் முயற்சிகள்’ திட்டக் குழு நடைமுறைப்படுத்திவருகிறது.
இதுமட்டுமின்றி சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் ஏழை எளிய மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகையையும் இக்குழு அளித்துவருகிறது.
சிறந்த கல்வியாளருக்கான உயரிய விருதான பத்மஸ்ரீயால் 1971-ல் கவுரவிக்கப்பட்டவர் குருவில ஜேக்கப். அதைவிடவும் உயரிய கவுரவத்தை அவருடைய முன்னாள் மாணவர்கள் கல்விப் புலத்துக்கு அளிக்கும் சேவையின் மூலம் அவருக்குத் தற்போது செலுத்திவருகிறார்கள். நூற்றுக்கணக்கான நல்லாசிரியர் களை உருவாக்குவதைவிட ஆகச் சிறந்த ஆசானுக்குச் செய்யும் மரியாதை வேறென்னவாக இருந்திட முடியும்!