

பேசும் படமாக 1931இல் புதிய பரிமாணத்தை எட்டிய தமிழ் சினிமா, அதற்குப் பிந்தைய இரண்டு பத்தாண்டுகளில் இரண்டு முறை அரசியல் சார்புடன் தனது உள்ளடக்கத் தேர்வில் குவி மையம் கொண்டது. முதல் முறை, ஆங்கிலேய ஆட்சியை நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்த்து விடுதலை உணர்வை வெளிப்படுத்திய முதல் பத்தாண்டுகள்.
அதனோடு ஆண் மையச் சமூகத்தில் பெண்கள் பெற வேண்டிய சமூக விடுதலை, அவர்களின் கல்வி, சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டுவரும் மக்களுக்கான சமூக விடுதலை ஆகியவற்றையும் இணைத்துக்கொண்டு களாமாடியது. முதல் முறை அரசியலைத் தொட்டபோது, களத்தில் பெரும் போராட்ட சக்தியாக நின்ற காங்கிரஸ் இயக்கத்தின் சார்பு கொண்டதாகத் தமிழ் சினிமா விளங்கியதில் வியப்பில்லை.