

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்களை உருவாக்கிய முதல் அரசியல் இயக்கம் காங்கிரஸ். அதன் முகமாக மாறிய அண்ணல் காந்தியடிகளின் சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அவருடைய மாணவராகத் தன்னை வரித்துக் கொண்ட கும்பகோணத்தைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர்தான் கே.சுப்ரமணியம்.
வழக்கறிஞராகச் சில காலம் பணியாற்றி இருந்தாலும் நாடகங்கள் நடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த கே.சுப்ரமணியம் சென்னை வந்ததும் 20ஆம் நூற்றாண்டின் புதிய கலையான சினிமாவின் மீது தனது முழுக் கவனத்தையும் திருப்பினார். ராஜா சாண்டோவிடம் உதவி இயக்குந ராகவும் படத் தயாரிப்பிலும் பல சலனப் படங்களில் கற்றுக்கொண்டு கடகடவென முன்னேறினார்.