

புராணக் கதைகளை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி, தம் காலத்தின் சமூகக் கதைகளை அதிகமும் நாடக மேடைக்கு எடுத்தாண்ட காரணத்தாலேயே கந்தசாமி முதலியார் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறார். அவருடைய நாடகங்களின் புகழ், ஆங்கிலேயர்களையும் கவர்ந்தது.
வேல்ஸ் இளவரசர் எட்வர்டு, மதராஸுக்கு வருகை தந்தபோது, அவர் முன் நாடகம் நடத்தி அவரை மகிழ்விக்க அழைக்கப்பட்டவர் கந்தசாமி முதலியார். ஆங்கில நாடகம் நடத்தி அவரை மகிழ்வித்த கந்தசாமி முதலியாருக்குத் தங்கப் பதக்கம் வழங்கினார் இளவரசர் எட்வர்டு. அதே காலக்கட்டத்தில் மைசூர் மகாராஜாவின் அழைப்பை ஏற்று மைசூர் அரண்மனையிலும் நாடகங்களை நடத்திப் பாராட்டுப் பெற்றார்.