மருத்துவமும் ஆராய்ச்சியும் சந்திக்கும் புள்ளி

மருத்துவமும் ஆராய்ச்சியும் சந்திக்கும் புள்ளி
Updated on
1 min read

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி), ‘Eminent Speaker Lecture Series’ என்கிற நிகழ்வைத் தொடர்ச்சியாக நடத்திவருகிறது. மருத்துவ உலகில் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களிடம் உரையாற்றி வருகின்றனர்.

சென்னை மியூசிக் அகாடமியில் கடந்த வியாழக்கிழமை ( ஜூன். 18) அன்று நடைபெற்ற நிகழ்வில் 2012ஆம் ஆண்டு வேதியியல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் பிரையன் கோபில்கா (Brian Kobilka) கலந்துகொண்டு உரையாற்றினார்.

செல்களில் உள்ள ஜி புரோட்டின்- இணை ஏற்பிகளின் (GPCR- G protein-coupled receptors) அமைப்பு, அதன் செயல்பாடு குறித்த ஆராய்ச்சிக்காக கோபில்காவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. கோபில்கா கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.

தனது ஆராய்ச்சிப் பயணம் பற்றி மாணவர்களுடன் பகிர்ந்துகொண்ட கோபில்கா, மருத்துவமும் ஆராய்ச்சியும் சந்திக்கும் புள்ளி பற்றியும் ஆராய்ச்சித் துறையில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது குறித்தும் கலந்துரையாடினார்.

பேராசிரியர் பிரையன் கோபில்கா பேசும்போது, “ஆய்வகங்களில் ஆராய்ச்சியில் ஈடுபடுவது எனக்கு விருப்பான ஒன்று. எனது ஆராய்ச்சிக்குப் பல வருடங்கள் எடுத்துக்கொண்டேன். அப்போதெல்லாம் எனது ஆராய்ச்சிகளை முடிவில்லாத, நிச்சயமற்ற நிலை கொண்டவையாகவே உணர்ந்தேன்.

எனினும் சவால்கள் என்னைத் தொடர்ந்து செயல்படத் தூண்டின. சிறு முன்னேற்றம்கூடப் பெரிய அளவிலான நம்பிக்கையை அளிக்கும். ஆராய்ச்சியில், நம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே செல்ல வேண்டும். ஓர் ஆராய்ச்சிக்காக 20 ஆண்டுகளை நீங்கள் செலவிடும்போது உங்கள் குழுவின் பங்களிப்பும் முக்கியமானது” என்றார்.

மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியா பின்தங்கியிருப்பது குறித்த கேள்விக்கு, “ஆராய்ச்சிக்கான நிதியுதவிகள் அமெரிக்காவில் கிடைக்கின்றன; இந்தியாவில் அவை எளிதாகக் கிடைப்பதில்லை. இதன் காரணமாக இந்தியா மருத்துவ ஆய்வில் பின்தங்கியிருப்பதாகக் கருதுகிறேன். எனினும் இந்தச் சூழல் எதிர்காலத்தில் நிச்சயம் மாறும் என நம்புகிறேன்” என கோபில்கா தெரிவித்தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in