கலக்கல் ஆசிரியர் ‘கலகல சிவா’

கலக்கல் ஆசிரியர் ‘கலகல சிவா’
Updated on
2 min read

பொதுவாக, வகுப்பறையில் மாணவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்பதுதான் தொன்றுதொட்டு நமது ஆசிரியர்கள் கடைப்பிடித்துவரும் இலக்கணம். இந்த இலக்கணத்தைத் தகர்த்திருக்கும் ஆசிரியர் ரெ.சிவா, “வகுப்பறையில் மாணவர்கள் சத்தம் போடாவிட்டால் அது எப்படி உயிருள்ள வகுப்பறையாக இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்புகிறார்.

விரும்பினால் மனதில் பதியும்

மதுரையில் உள்ள மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் சிவா. சக ஆசிரியர்கள் இவரை ‘கலகல சிவா’ என்றே அழைக்கிறார்கள். தமிழய்யா என்றாலே கொட்டாவி விடும் மாணவர்களையும் தமிழை விரும்பிப் படிக்க வைக்கும் ‘கலகல’ சூட்சுமத்தைக் கைவசம் வைத்திருக்கிறார் சிவா.

வார்த்தைகளே புரியாமல் வந்து விழும் சினிமா பாடலை வரி தப்பாமல் பாடும் மாணவர்களுக்கு நான்கு வரி வெண்பாவை வருடம் முழுவதும் படித்தாலும் மண்டையில் ஏற மறுக்கிறது. இரண்டரை மணி நேரம் பார்க்கும் ஒரு சினிமாவின் கதையை நான்கு மணி நேரம் விவரிக்கத் தெரிந்த பிள்ளைக்குப் பத்தே பத்துப் பாடங்களைப் படிக்க முடியவில்லை.

காரணம், சினிமா பார்க்கும்போதும் சினிமா பாட்டைக் கேட்கும்போதும் அதில் விருப்பம் கொள்வதால் உடனே மனப்பாடம் ஆகிவிடுகிறது. ஆனால், தேர்வுக்காகப் படிக்கிறோம் என்ற கட்டாயத்துடன் பாடப் புத்தகத்தைப் புரட்டுவதால் அது மனதில் பதிய மறுக்கிறது. இதைச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கும் சிவா, வகுப்பறைக்குள் உட்கார்ந்திருக்கிறோம் என்கிற மன அழுத்தம் கொஞ்சமும் இல்லாதபடிக்குத் தனது வகுப்பறையைக் கலகலப்பாக மாற்றி வைத்திருக்கிறார்.

கதைக்குப் பின்னால் பாடம்

வகுப்பறைக்குள் அடைத்து வைக்காமல் மாணவர்களை மரத்தடிக்கு அழைத்துச் சென்று வட்டமாக உட்காரவைத்து அவர்கள் மத்தியில் தானும் உட்கார்ந்து அவர்களுக்குப் பிடித்த நடையில் பாடத்தைப் படிக்கவைக்கிறார். மற்ற ஆசிரியர்கள் கையில் பாடப் புத்தகங்களை வைத்திருப்பார்கள். ஆனால், சிவா ஒரு சூட்கேஸ் நிறைய கதைப் புத்தகங்களை வைத்திருக்கிறார். அதை மாணவர்களுக்குக் கொடுத்து வாசிக்கச் சொல்லிப் பழக்குவதுதான் முதல் இரண்டு மாதங்கள் சிவா சொல்லித்தரும் பாடம்.

கதைப் புத்தகங்களை வாசிக்கப் பழகியதும் பாடத்துக்கு வருவார். பாடத்தைப் பாடமாக நடத்தாமல் அதையும் ஒரு கதையாக்கி மாணவர்களை நான்கைந்து குழுக்களாகப் பிரித்து அந்தக் கதையை நாடகமாக நடிக்க வைப்பார். செய்யுளாக இருந்தால் பாட்டாகவே படித்துக் காட்டுவதும் தேவைப்பட்டால் நடித்துக் காட்டுவதும் சிவாவின் கற்பித்தல் பாணி. சிலப்பதிகாரம் போன்ற பாடங்களை எடுக்கும்போது பள்ளியின் ஒலி - ஒளி அறைக்கு மாணவர்களை அழைத்துச் சென்று அங்கே பூம்புகார் சினிமாவைப் போட்டுக்காட்டிச் சிலப்பதிகாரக் கதையைப் புரியவைப்பார். சிக்கலான மற்ற பாடங்களையும் எளிதில் புரியவைக்க யூடியூப் வீடியோக்களையும் குறும்படங்களையும் ஏராளமாய்க் கைவசம் வைத்திருக்கிறார்.

“தொடக்கத்தில் ஓவிய ஆசிரியராக இருந்தபோது மாணவர்கள் என்னிடம் நெருக்கமாக இருந்தார்கள். தமிழாசிரியர் ஆனதும் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. மதிப்பெண் எடுக்க வைக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு; படிக்க வேண்டுமே என்ற கட்டாயமும் பயமும் மாணவர்களுக்கு. இந்த இறுக்கத்தைக் குறைக்கவே மாணவர்களை மரத்தடிக்கு அழைத்துச் சென்றேன். நாம் தமிழை இலக்கணப் பிழை இல்லாமல் பேசுகிறோம். ஆனால், அதை ஏட்டு வடிவில் சொல்லும்போது மிரண்டுவிடுகிறோம்.

‘அவன் உன்கிட்ட சொன்ன ரகசியம் நேர்க்கூற்று. அதை அப்படியே இன்னொருத்தன்கிட்ட நீ சொன்னா அதுதான்டா அயல்கூற்று’ இப்படிச் சொன்னால் பையனுக்கு எளிதாகப் புரிந்துவிடும். ஆசிரியர் என்றால் வகுப்பில் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் வைத்துக்கொள்ளாமல் மாணவர்களோடு சேர்ந்து ஆடுவேன், பாடுவேன், சிரிப்பேன், நடிப்பேன். எனது வகுப்பறை மாணவர்களுக்குப் பிடித்துப்போனதற்கு இதுதான் காரணம்” என்கிறார் கலகல சிவா.

இயந்திர யுகத்தில் மொழி போன்ற ஒரு சில விஷயங்களால்தான் ஒருவரை உயிருள்ள மனிதராகக் காட்ட முடியும். அந்த மொழியைத் தங்களுக்குப் பிடித்தமான நடையில் கற்றுத் தருவதால் நாளும் சிவாவின் வகுப்பிற்காக உற்சாகத்துடன் காத்திருக்கிறார்கள் மாணவர்கள்.

- சிவா

கலகல சிவாவைத் தொடர்புகொள்ள: 94428 83216

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in