

விண்ட்ஹோக்: நமீபியாவின் விண்ட்ஹோக் நகரில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - நமீபியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நமீபியா 6 விக்கெட்கள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜெர்ஹார்டு எராஸ்மஸ் 48 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் விளாசினார்.
157 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 18.1 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இன்னசென்ட் கையா 42 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் விளாசினார். ஜிம்பாப்வே அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.