முதல் தர கிரிக்கெட்டில் இருந்து யஜுவேந்திர செஹல் ஓய்வு

கோப்புப் படம் 

கோப்புப் படம் 

Updated on: 
2 min read

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர செஹல், சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்திய அணிக்காக இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில்கூட விளையாடாத செஹல், டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்ற தனது கனவு இனி நடைமுறையாவதற்குச் சாத்தியமில்லை என்பதை உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “சிவப்பு பந்து கிரிக்கெட் எனக்கு மற்றொரு வடிவம் மட்டுமல்ல. பொறுமை, குணநலன், விடாமுயற்சி ஆகியவற்றின் அர்த்தத்தையும், ஒவ்வொரு ரன்னுக்கும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் நீண்ட நேரம் போராடி விளையாடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியையும் இந்த வடிவம்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தது.

லார்ட்ஸ் மைதானத்தில் எனது கடைசி முதல்தர போட்டியை விளையாடினேன். இந்திய அணிக்கான டெஸ்ட் தொப்பியை அணிவது நீண்டகால கனவாக இருந்தது. அது நிறைவேறவில்லை என்றாலும், இந்த வடிவத்தில் நான் பயணித்த பாதையில் முழு திருப்தி அடைகிறேன்.

கிடைத்த ஒவ்வொரு வாய்ப்புக்கும் நன்றியுடன் இருக்கிறேன். நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற வேட்கை இன்னும் குறையவில்லை. என்னிடம் இன்னும் கிரிக்கெட் திறன் இருப்பதாக நம்புகிறேன். ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களில் மீண்டும் இந்திய அணிக்காக வாய்ப்பு பெற என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று செஹல் கூறியுள்ளார்.

2009-ம் ஆண்டு ஹரியானா அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமான சாஹல், 49 போட்டிகளில் 148 விக்கெட்டுகளை 32.27 சராசரியில் வீழ்த்தி தனது முதல்தர கிரிக்கெட் பயணத்தை முடித்துள்ளார்.

சமீபத்தில் 2026 கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிஷன்-2 தொடரில் நார்தாம்ப்டன்ஷயர் அணிக்காக விளையாடிய அவர், 21 விக்கெட்டுகளை 16.14 சராசரியில் கைப்பற்றினார். குறைந்தது 20 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் இது இரண்டாவது சிறந்த சராசரியாகும்.

மிடில்செக்ஸ் அணிக்கு எதிரான அந்த ஆட்டத்தில் நார்தாம்ப்டன்ஷயர் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் அந்த அணி மேலே செல்லும் வாய்ப்பும் முடிவுக்கு வந்தது. லார்ட்ஸில் விளையாடிய அந்த ஆட்டமே செஹலின் கடைசி முதல்தர போட்டியாக அமைந்தது.

இந்திய அணியின் தேர்வாளர்களின் கவனத்தில் இருந்து செஹல் தற்போது விலகியிருந்தாலும், லிஸ்ட் ஏ மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளரான செஹல், தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

ஹரியானா அணியிலும் செஹல் தொடர்ந்து சிவப்பு பந்து போட்டிகளில் இடம்பெற்றதில்லை. 2016-17 ரஞ்சி டிராபி சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளை 22.60 சராசரியில் கைப்பற்றியதே, ஒரு சீசனில் அவர் 2 போட்டிகளுக்கு மேல் விளையாடிய கடைசி முறையாகும்.

சமீபத்திய ஆண்டுகளில் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தொடர்ந்து விளையாடி வந்தாலும், விஜய் ஹசாரே டிராபியில் 2023-24 சீசனில்தான் கடைசியாக பங்கேற்றார். அந்தத் தொடரில் 18 விக்கெட்டுகளை 14.83 சராசரியில் வீழ்த்தி ஹரியானா அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்களித்தார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்&nbsp;</p></div>
கெய்லின் உலக சாதனையைத் தகர்த்த பிரிட்டோரியஸ்: 79 பந்துகளில் 188 ரன்கள் விளாசி புதிய வரலாறு!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in