

தென் ஆப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரர் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளார்.
புளூம்ஃபோன்டெய்னில் நடைபெற்ற கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா டி20 சேலஞ்ச் தொடரில் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய அவர், நைட்ஸ் அணிக்கு எதிராக வெறும் 79 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 188 ரன்கள் குவித்து, கிறிஸ் கெய்லின் நீண்டகால சாதனையை முறியடித்தார்.
இதன் மூலம் ஆடவர் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற சாதனை பிரிட்டோரியஸ் வசமாகியுள்ளது. 2013-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல், புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 66 பந்துகளில் 175 ரன்கள் விளாசியதே இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 13 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டோரியஸ் முறியடித்துள்ளார்.
20 வயதான பிரிட்டோரியஸ், இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே நைட்ஸ் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். 24 பந்துகளில் அரைசதத்தை எட்டிய அவர், அடுத்த 16 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். அதன்பிறகு வேகத்தை மேலும் அதிகரித்த அவர், 58 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். இறுதியில் 79 பந்துகளில் 188 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவரது அதிரடி இன்னிங்ஸில் 15 பவுண்டரிகளும், 13 சிக்சர்களும் அடங்கும். நைட்ஸ் அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களும் செம சாத்து வாங்கினார்கள். அனைவருமே சராசரியாக ஓவருக்கு 11-க்கும் அதிகமாக ரன்களை வாரி வழங்கினர். பிரிட்டோரியஸின் அதிரடி காரணமாக டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் குவித்தது.
சிஎஸ்ஏ டி20 சேலஞ்ச் வரலாற்றில் இது இரண்டாவது அதிகபட்ச அணி ஸ்கோராகும். 2022-ம் ஆண்டு இதே நைட்ஸ் அணிக்கு எதிராக டைட்டன்ஸ் 3 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்ததே முதலிடத்தில் உள்ளது. அந்தப் போட்டியில் டிவால்ட் பிரேவிஸ் 162 ரன்கள் விளாசியிருந்தார்.
தற்போது பிரிட்டோரியஸின் 188 ரன்கள் அந்த சாதனையையும் கடந்து, இந்தத் தொடரில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகியுள்ளது. மேலும், சிஎஸ்ஏ டி20 சேலஞ்ச் வரலாற்றில் அதிகபட்ச ஐந்து டீம் ஸ்கோர்களும் டைட்டன்ஸ் வசமே உள்ளன.
பிரிட்டோரியஸின் 188 ரன்கள் இன்னும் ஒரு சாதனையையும் சமன் செய்துள்ளது. ஆடவர் டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர்கள் பட்டியலில் ஆரோன் ஃபின்ச் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸுடன் இணைந்து 79 பந்துகள் என்ற சாதனையை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
மிக முக்கியமாக, 200 ரன்களை எட்டுவதற்கு பிரிட்டோரியஸுக்கு இன்னும் 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. அந்த 12 ரன்களையும் அவர் எடுத்திருந்தால், டி20 கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்திருப்பார்.
2026-27 சீசனில் தனது முதல் போட்டியிலேயே இந்த அதிரடியை வெளிப்படுத்தியுள்ள பிரிட்டோரியஸ், சமீப காலமாகவே அபாரமான ஃபார்மில் உள்ளார். செப்டம்பரில் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவுக்கு எதிரான முத்தரப்பு தொடரில் முறையே 94 மற்றும் 101 ரன்கள் எடுத்திருந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை மூன்று வடிவங்களிலும் சேர்த்து வெறும் 22 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர், டி20 கிரிக்கெட்டில் 91 போட்டிகளை நிறைவு செய்துள்ளார். அவரது டி20 ஸ்டிரைக் ரேட் 150.44 என்பது குறிப்பிடத்தக்கது.