

3வது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகளை 323 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-0 என்று கைப்பற்றியதையடுத்து ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் நியூஸிலாந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த 2025-27 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் முதல் டெஸ்ட் தொடரில் ஆடிய நியூஸிலாந்து 2 வெற்றி ஒரு டிராவுடன் புள்ளிகள் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா, இந்தியாவை பின்னுக்குத் தள்ளி 2ம் இடத்துக்குச் சென்றது.
இங்கிலாந்தை 3வது டெஸ்ட்டிலும் வீழ்த்தி ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியதை அடுத்து ஆஸ்திரேலியா தன் ஒன்றாம் இடத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளது. இது இந்த சீசனில் ஆஸ்திரேலியாவின் 6வது தொடர் வெற்றியாகும். இதனையடுத்து 72 புள்ளிகள் 100% வெற்றியுடன் வலுவாக ஆஸ்திரேலியா உள்ளது.
நியூஸிலாந்து 28 புள்ளிகள் 77.78 வெற்றி விகிதத்துடன் 2வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 4 டெஸ்ட்களில் 3-ல் வென்று 75 வெற்றி விகிதத்துடன் 3ம் இடத்தில் உள்ளது. இந்த சுழற்சியில் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இன்னமும் தோல்வி அடையவில்லை.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக படுமோசமான 2-0 என்ற டெஸ்ட் தோல்வியைத் தழுவிய இந்திய அணி 6வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி 2 போட்டிகளில் 1 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகளில் 5ம் இடத்தில் உள்ளது.
இந்திய அணி 9 போட்டிகளில் 4 வெற்றி 4 தோல்வி ஒரு டிராவுடன் 56 புள்ளிகளைப் பெற்றாலும் வெற்றி விகிதம் 48 என்பதால் பாகிஸ்தானுக்குக் கீழே உள்ளது. இங்கிலாந்து படுமோசமாகி 7-ம் இடத்துக்குச் சென்று விட்டது. பங்களாதேஷ், மே.இ.தீவுகள் 8 மற்றும் 9ம் இடத்தில் உள்ளன.
இந்திய அணி ஆகஸ்ட் 2026-ல் இலங்கைக்கு எதிராக இலங்கையில் 2 டெஸ்ட்களில் ஆடுகிறது, இப்போதைய இந்திய அணியின் ஸ்பின் பலவீனத்தினால் இலங்கையில் வெற்றி பெற நிச்சயம் போராட வேண்டி வரும். இதையடுத்து அக்டோபர் 2026-ல் நியூஸிலாந்துக்கு இந்திய அணி செல்கிறது அங்கு 2 டெஸ்ட் போட்டிகள். இதுவும் மிகமிகக் கடினமான ஒன்று. அனைத்திற்கும் மேலாக 2027 ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு 5 டெஸ்ட் போட்டிகள் உள்ளன.
சமீபமாக நியூஸிலாந்திடம் 3-0, தென் ஆப்பிரிக்காவுடன் 2-0 என்று உள்நாட்டிலேயே உதை வாங்கிய இந்திய அணி ஆஸ்திரேலியாவை சமாளிப்பதும் கடினமே. ஆகவே ஒரு நல்ல டெஸ்ட் அணியை, நிலையான வீரர்களை உருவாக்க கம்பீர் அண்ட் கோ முயற்சி எடுக்க வேண்டும்.