

வெனிசுலா: வெனிசுலாவின் கராகஸ் நகரில் 2026-ம் ஆண்டுக்கான ஃபிடே உலக ஜூனியர் (யு-20) செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 18-ம்முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா இரட்டை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
ஓபன் பிரிவில் இந்தியாவின் 15 வயது வீரர் எத்தன் வாஸ், மகளிர் பிரிவில் சவிதா ஸ்ரீ பாஸ்கர் ஆகியோர் உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினர். 2008-ம் ஆண்டுக்குப் பிறகு உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்பின் இரு பிரிவுகளிலும் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
கடந்த 2008-ம் ஆண்டு துருக்கியின் காசியான்டெப் நகரில் நடைபெற்ற போட்டியில் அபிஜீத் குப்தா, ஹரிகா துரோணவல்லி ஆகியோர் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தனர்.
ஓபன் பிரிவில் விளையாடிய கோவாவைச் சேர்ந்த 15 வயது எத்தன் வாஸ், 11 சுற்றுகளின் முடிவில் 9 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தார். அஜர்பைஜானின் சர்வதேச மாஸ்டர் ககான் அகமது 2-வது இடத்தையும், இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரணீத் வுப்பாலா வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
மகளிர் பிரிவில் இந்தியாவின் சவிதா ஸ்ரீ 11 சுற்றுகளின் முடிவில் 9.5 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
சீனாவின் யினிங் சென் 8.5 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், இந்தியாவின் நிவேதிதா 7.5 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இந்தப் போட்டியில் தோல்வியே சந்திக்காமல் சவிதா ஸ்ரீ வாகை சூடினார். 8 முதல் 10-வது சுற்று வரையிலான ஆட்டங்களில் தொடர்ந்து 3 டிரா செய்தபோதும், தனது சீரான ஆட்டத்தால் பட்டத்தை உறுதி செய்தார்.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சவிதா ஸ்ரீ, கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நிவேதிதா, வேளச்சேரியை சேர்ந்தவர்.
முதல்வர் விஜய் வாழ்த்து
உலக ஜூனியர் செஸ் போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ள தமிழக வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், தனது சமூகவலைதள பதிவில், “வெனிசுலா நாட்டில் நடைபெற்று வரும் பிடே உலக ஜூனியர் (யு-20) மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி, உலகச் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ-க்கும், 3-வது இடம் பிடித்த நிவேதிதாவுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களது அபாரமான அறிவாற்றல், நுணுக்கமான ஆட்டத்திறன், விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றால் உலக அரங்கில் சாதனை படைத்துள்ள அவர்களது வெற்றி, இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது. செஸ் வீராங்கனைகள் சவிதா ஸ்ரீ, நிவேதிதா ஆகியோர் வருங்காலங்களிலும் சர்வதேச சாதனைகள் பல படைத்து, உலக செஸ் அரங்கில் தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடித்தர எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
நகைகளை அடகு வைத்த தந்தை
சவிதா ஸ்ரீயின் சாதனைக்குப் பின்னால் அவரது குடும்பத்தின் தியாகம் நிறைந்துள்ளது. தேசிய அளவிலான போட்டியில் மகளைப் பங்கேற்கச் செய்வதற்காக அவரது தந்தை பாஸ்கர் ஒருமுறை தனது தங்க நகைகளையே அடகு வைத்தார்.
சிங்கப்பூரில் எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்த அவர், மகளின் செஸ் வாழ்க்கைக்கு ஆதரவளிப்பதற்காக அந்தப் பணியை விட்டுவிட்டு இந்தியா திரும்பினார். தனது மூத்த சகோதரர் செஸ் விளையாடுவதைப் பார்த்து ஆர்வம் கொண்ட சவிதா, குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியால் சகோதரர் விளையாட்டிலிருந்து விலகியபோதும் தனது முயற்சியைக் கைவிடவில்லை. சர்வதேசப் போட்டிகளில் முத்திரை பதித்த அவர், சமீபத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று கவனம் ஈர்த்து இருந்தார். தற்போது உலக ஜூனியர் மகளிர் சாம்பியன் பட்டத்தையும் வென்று இந்திய செஸ் உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.