உலகக் கோப்பை கால்பந்து ஜூன் 11-ல் தொடக்கம்: முதன்முறையாக 48 அணிகள் பங்கேற்பு

உலகக் கோப்பை கால்பந்து ஜூன் 11-ல் தொடக்கம்: முதன்முறையாக 48 அணிகள் பங்கேற்பு
Updated on
2 min read

நியூ​யார்க்: 4 வருடங்​களுக்கு ஒரு முறை நடை​பெறும் உலகக் கோப்பை கால்பந்து திரு​விழா வரும் 11-ம் தேதி கோலாகல​மாக தொடங்​க​வுள்​ளது.

கால்பந்து விளை​யாட்​டில் மாபெரும் திரு​விழா என்று அழைக்கப்படும் ஃபிஃபா (உலக கால்​பந்து சம்​மேளனம்) நடத்​தும் கால்​பந்து உலகக் கோப்பை வரும் 11-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதி வரை மிக​வும் பிர​ம்மாண்​ட​மான முறை​யில் நடை​பெறவுள்​ளது. ஒலிம்​பிக் போட்​டிகளைப் போலவே மிக பிரம்மாண்ட​மான முறை​யில் நடை​பெறும் போட்​டிகளில் இது முக்கி​யத்​து​வம் வாய்ந்த போட்​டி​யாகக் கருதப்​படு​கிறது.

வழக்​கத்​துக்கு மாறாக இந்த முறை 32 அணி​களுக்​குப் பதிலாக மொத்​தம் 48 அணி​கள் பங்​கேற்​கும் இந்த உலகக் கோப்பை கால்​பந்து திரு​விழாவை அமெரிக்​கா, கனடா, மெக்​ஸிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்​துகின்​றன. 3 நாடு​களில் மொத்​தம் 16 மைதானங்​களில் போட்டி நடை​பெறும். போட்​டிகள் இந்​திய நேரப்​படி நள்​ளிரவு 12.30 மணி, அதி​காலை 3.30 மணி, காலை 6.30 மணி, 9.30 மணி ஆகிய நேரங்​களில் நடை​பெற உள்​ளன.

குரூப் சுற்​றின் முடி​வில், ஒவ்​வொரு குரூப்​பிலும் முதல் 2 இடங்​கள் பிடிக்​கும் அணி​கள் மற்​றும் குரூப் வாரி​யாக 3-ம் இடம் பெறும் 8 அணி​களும் அடுத்த சுற்​றுக்கு (ரவுண்ட் 32) தகுதி பெறும். அதன்​பின்​னர் கால், அரை, இறு​திச் சுற்​றுப் போட்​டிகள் அரங்​கேறும்.

104 ஆட்​டங்​கள்

மொத்​தம் 104 ஆட்​டம், 16 நகரங்​களில் மிக பிர​மாண்​ட​மாக அமைந்​துள்ள மைதானங்​களில் விளை​யாடப்​பட​வுள்​ளன. இறு​திப் போட்​டி, ஈஸ்ட் ருதர்ஃ​போர்​டில் அமைந்​துள்ள ‘மெட்​லைஃப் ஸ்டேடி​யத்​தில்’ நடை​பெறும். இத்​தொடர் 16 வெவ்​வேறு நகரங்​களில் அமைந்​துள்ள 16 மைதானங்​களில் நடை​பெறவுள்​ளது. அமெரிக்​கா​வில் அமைந்​துள்ள 11 மைதானங்​களில் ஒன்​றான, நியூ ஜெர்​சி​யின் ஈஸ்ட் ருதர்ஃ​போர்​டில் அமைந்​துள்ள மெட்​லைஃப் மைதானம் 82,500 பார்​வை​யாளர்​கள் அமரும் திறன் கொண்​டது.

கலி​போர்​னி​யா​வின் இங்​கிள்​வுட்​டில் அமைந்​துள்ள சோஃபி மைதானத்​தில் 70,240 பேரும், டெக்​சாஸின் ஆர்​லிங்​டனில் உள்ள ஏடி அன்ட் டி மைதானத்​தில் 80,000 பேரும், டெக்​சாஸின் ஹூஸ்டனில் உள்ள என்​ஆர்ஜி மைதானத்​தில் 72,220 பேரும், மிசவுரி​யின் கன்​சாஸ் நகரில் உள்ள ஏரோஹெட் மைதானத்​தில் 76,416 பேரும், ஜார்​ஜி​யா​வின் அட்​லாண்​டா​வில் உள்ள மெர்​சிடிஸ் பென்ஸ் மைதானத்​தில் 71,000 பேரும் ஃபுளோரி​டா​வின் மியாமி கார்டன்ஸில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்​தில் 64,767 பேரும், கலிபோர்​னி​யா​வின் சாண்டா கிளா​ரா​வில் உள்ள லெவிஸ் மைதானத்​தில் 68,500 பேரும் பென்​சில்​வேனி​யா​வின் பிலடெல்பியா​வில் உள்ள லிங்​கன் ஃபை​னான்​சி​யல் ஃபீல்ட் மைதானத்​தில் 69,796 பேரும் வாஷிங்​டனின் சியாட்​டிலில் உள்ள லூமன் ஃபீல்ட் மைதானத்​தில் 68,740 பேரும், மாசாசூசெட்​ஸின் ஃபாக்​ஸ்​பரோ​வில் உள்ள ஜில்​லெட் மைதானத்​தில் 65,878 பேரும் போட்​டியை ரசிக்​கலாம்.

கனடா நாட்​டில் 2 மைதானங்​களில் போட்​டிகள் நடை​பெறும். பிரிட்​டிஷ் கொலம்​பி​யா​வின் வான்​கூவரில் அமைந்​துள்ள பிசி பிளேஸ் மைதானத்​தில் 54,500 பேரும், டொராண்​டோ​வில் உள்ள பிஎம்ஓ ஃபீல்ட் மைதானத்​தில் 45,736 பேரும் அமர்ந்து போட்​டியைக் கண்​டு​களிக்​கலாம். மெக்​ஸிகோ​வில், எஸ்​டாடியோ அஸ்​டெகா மைதானத்​தி​லும், (87,523 இருக்​கைகள்), குவாடலஜா​ரா​வில் உள்ள எஸ்​டாடியோ அக்​ரான் மைதானத்​தி​லும் (49,850 இருக்​கைகள்), மான்​டோரி​யில் உள்ள எஸ்டாடியா பிபி​விஏ மைதானத்​தி​லும் (53,500 இருக்​கைகள்​) போட்​டிகள்​ நடை​பெறும்​.

குரூப்பில் இடம்பெற்றுள்ள அணிகள் விவரம்

குரூப் ‘ஏ’: மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, செக் குடியரசு

குரூப் ‘பி‘: கனடா, போஸ்னியா & ஹெர்சகோவினா, கத்தார், சுவிட்சர்லாந்து

குரூப் ‘சி’: பிரேசில், மொராக்கோ, ஹைதி, ஸ்காட்லாந்து

குரூப் ‘டி’: அமெரிக்கா, பராகுவே, ஆஸ்திரேலியா, துருக்கி

குரூப் ‘இ‘: ஜெர்மனி, குராசாவோ, ஐவரி கோஸ்ட், ஈக்வேடார்

குரூப் ‘எஃப்: நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன், துனிசியா

குரூப் ‘ஜி’: பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூஸிலாந்து

குரூப் ‘ஹெச்’: ஸ்பெயின், கேப் வெர்டே, சவுதி அரேபியா, உருகுவே

குரூப் ‘ஐ’: பிரான்ஸ், செனகல், ஈராக், நார்வே

குரூப் ‘ஜே’: அர்ஜெண்டினா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான்

குரூப் ‘கே’: போர்ச்சுகல், காங்கோ, உஸ்பெகிஸ்தான், கொலம்பியா

குரூப் ‘எல்’: இங்கிலாந்து, குரோஷியா, கானா, பனாமா

உலகக் கோப்பை கால்பந்து ஜூன் 11-ல் தொடக்கம்: முதன்முறையாக 48 அணிகள் பங்கேற்பு
FIFA WC 2026: இந்தியாவில் போட்டிகளை ஒளிபரப்பும் ஜீ நிறுவனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in