

ஆம்ஸ்டெல்வீன்: உலகக் கோப்பை ஹாக்கி மகளிர் லீக் போட்டியில் இந்தியா, சீனா அணிகளிடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் பிரிவு லீக் போட்டியில் இந்திய ஆடவர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது. இந்நிலையில் நேற்று மாலை டி பிரிவில் நடைபெற்ற மகளிர் பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா, சீனா அணிகள் மோதின.
இந்திய அணி தொடக்கத்திலேயே முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்நீத், ஃபீல்டு கோலையடித்து அணிக்கு 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுத் தந்தார்.
ஆனால், ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் சீன அணி ஒரு கோலடித்து 1-1 என்ற கணக்கில் சமநிலையை ஏற்படுத்தியது. சீன வீராங்கனை ஜாங் யிங், இந்த கோலை பெனல்டி ஸ்டிரோக் மூலம் அடித்தார்.
இதையடுத்து ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை தீபிகா தனக்குக் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக அற்புதமான மாற்றினார். இதனால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் சீன அணிக்கு ஒரு பெனல்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
இதை அற்புதமான கோலாக மாற்றினார் சீன வீராங்கனை மா நிங். இறுதி வரை இந்நிலை நீடிக்கவே ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
தற்போது டி பிரிவு புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்திலும், சீனா, இந்திய அணிகள் 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 4-வது இடத்திலும் உள்ளன.
தென் ஆப்பிரிக்காவுடன் மோதல்
இதைத் தொடர்ந்து நாளை (ஆகஸ்ட் 18) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்க மகளிர் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இன்று நடைபெறும் ஆடவர் லீக் ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.