

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே டிராவில் முடிந்த வெலிங்டன் டெஸ்ட் போட்டியின் பிட்ச் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. கிரீன் டாப் ஆகத் தொடங்கி அந்தப் பிட்ச் எப்படி ஒரு இறகாலான படுக்கை போல் ஆனது என்று அனைவருக்கும் கேள்வி எழுந்துள்ளது.
பழைய பந்தில் போட்ட 37 ஓவர்களில் இந்திய அணி பவுலர்கள் 3 நியூஸிலாந்து விக்கெட்டுகளை அவர்களது இரண்டாவது இன்னிங்சில் எடுக்க முடிந்தது ஆனால் புதிய பந்தில் ஒன்றும் நடக்கவில்லை. வாஷிங்டன் சுந்தரின் அட்டகாசமான ‘டிரிஃப்ட்’ டெவன் கான்வேயின் பேட்-கால்காப்பைப் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தது, அதே போல் ஹிட் த டெக் பந்தில் பிரசித் கிருஷ்ணா ரச்சின் ரவீந்திராவை கல்லியில் கேட்ச் கொடுக்கச் செய்தார், அன்ஷுல் காம்போஜ் டாம் பிளெண்டலின் மெல்லிய எட்ஜை உரசச் செய்து வீழ்த்தினார், மற்றபடி ஒன்றும் செய்ய முடியவில்லை ஆட்டம் அறுவையான டிராவாக முடிந்தது.
இந்தப் பிட்சில் பும்ராவின் வேகமும் எடுபடவில்லை, அவரே 130-135 என்ற வேகத்தில்தான் வீசினார். எனவே தான் 15 ஓவர்கள் மீதமிருக்கும் போது ஆட்டத்தை இரு கேப்டன்களும் கைகுலுக்கி முடித்துக் கொண்டனர். அஸ்வின், ஸ்ரீகாந்த் போன்றவர்கள் இந்த முடிவைத் தவறு என்கின்றனர், 15 ஓவர்களையும் ஆடி இன்னும் ஒரு விக்கெட்டை வீழ்த்த முடிந்திருந்தால் அடுத்து டெய்ல் எண்டர்கள் தான் இருக்கின்றனர், அவர்களை முதல் இன்னிங்சில் காலி செய்தது போல் விரைவில் வெற்றி பெற்றிருக்கலாம் அந்த வாய்ப்பை இவர்கள் முயற்சி செய்யவே இல்லை என்று விமர்சிக்கின்றனர்.
டேரில் மிட்செலும், கிளென் பிலிப்சும் இணைந்து 43 ஓவர்கள் ஆடி செத்த பிட்சைப் பயன்படுத்தி டிரா செய்தனர். இந்த டிராவினால் அவர்களுக்கும் பயனில்லை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் 2ம் இடத்திலிருந்து 3ம் இடத்திற்கு இறங்கி விட்டனர், இந்திய அணி அடுத்து வரும் 6 போட்டிகளில் 5-ல் வென்றால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு பலிக்கும். எனவேதான் 15 ஓவர்களை ஆடி முயற்சி செய்திருக்க வேண்டும் என்னும் விமர்சனத்திற்கு வலு சேர்கிறது.
செத்த பிட்ச் ஆனதன் காரணம் என்ன?
முதல் நாள் ஆட்டத்தின் போது மைதானத்தின் பசும்புல்வெளிக்கும் பிட்சிற்கும் வித்தியாசம் தெரியாமல் பிட்சில் பசுமைக் காட்சியளித்தது உண்மையில் கவாஸ்கர் சொன்னது போல் 2 நாட்களில் டெஸ்ட் முடிந்து விடும் என்பது போன்ற பிம்பத்தையே ஏற்படுத்தியது. ஆனால் ஒரு செஷன் அல்லது ஒன்றரை செஷனுக்கு மேல் பிட்ச் படு பேட்டிங் பிட்ச் ஆக மாறியது. கில் மிகச்சரியாக டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
பிட்சின் மேற்பரப்பில் இருந்த ஈரப்பதம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. வெயில் அடிக்கத் தொடங்கியவுடன் பிட்சின் பசும்புல்லின் ஈரப்பதம் மறைந்தது, மேலும் ரோலர்களை உருட்டி உருட்டி பரமாரித்ததால் அடியில் உள்ள மண் உடையாமல், வறண்டு போகாமல் ஒருங்கிணைந்திருந்தன. ஈரப்பதம் என்பது மேற்பரப்பில் புற்களில் மட்டும் இருப்பது போதாது, அடியில் இருக்கும் மண் பகுதியிலும் ஈரப்பதம் பராமரிக்கப்பட வேண்டும். இங்கு அடிப்பரப்பில் ஈரப்பதம் மருந்துக்குக் கூட இல்லை. அதனால் என்ன ஆனது வெயில் அடித்தவுடன் மேற்பரப்பு ஈரப்பதம் புஸ்வானம் ஆகிவிட்டது. அடியில் ஈரப்பதம் இல்லை.
நியூசிலாந்து ஆடுகளங்களில் மேற்பரப்பின் அடியில் மண் பகுதியில் ஈரப்பதம் இருந்தால் பந்து படும் இடங்களில் பள்ளங்களை ஏற்படுத்தி, அவை வெயிலில் காய்ந்து இறுகும்போது பந்து சீரற்ற முறையில் எழும்பி வரக் காரணமாகலாம்; ஆனால், இந்த ஆடுகளத்தில் அதுவும் நிகழவில்லை.
மேற்பரப்பு ஈரப்பதம் காய்ந்தவுடன் புற்களும் காய்ந்து போனது, இதனால் பந்து பிட்ச் ஆகி கிரிப் ஆகாமல் அப்படியே வந்தது பேட்டர்களுக்கு படுசாதகமாகிப் போனது.
மேலும் குகாபரா பந்துகள் 35-40 ஓவர்களில் விரைவிலேயே மென்மையாகி விடும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற பிட்ச்களில் சாஃப்ட் ஆனாலும் டெக்கை அடித்து எழுப்ப முடியும் அளவுக்கு பிட்ச் கொஞ்சம் பிளவுகள் கொண்டதாக மாறியிருக்கும் இங்கு அது சாத்தியமில்லாது போனது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற மண்களில் கிரீன் டாப் பிட்ச் இப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்துவதைப் பார்த்திருக்கிறோம். ஏனினில் மேற்பரப்பை இறுக்கமாகவோ 90-150 ஓவர்களுக்குப் பிறகு சற்றே பிளவுகளை ஏற்படுத்தும் வலுவான அடித்தளமோ இங்கு ஏற்படுத்த முடியாது, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்தில் இது சாத்தியம், அப்படித்தான் நியூஸிலாந்து பிட்ச் இருந்தது.
ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற ஒன்று வந்தவுடன் அனைத்து நாடுகளும் தங்கள் பலத்திற்கு ஏற்பப் பிட்சை அமைக்கத் தொடங்கினர். அதில் நியூஸிலாந்தும் விதிவிலக்கல்ல. ஏனெனில் ஒரு கடினமான எழும்பும் ஸ்விங் ஆகும் பிட்சைப் போட்டால் அது உள்நாட்டு அணிகளுக்கே பாதகமாக முடிகிறது. எப்படி இந்தியாவில் குழிப்பிட்ச்களைப் போட்டு ஒருகாலத்தில் வென்றாலும் பிறகு 5 டெஸ்ட் போட்டிகளை இழக்க நேரிட்டதோ அதேதான் அவர்களுக்கும் நடந்தது.
எனவே இப்படிப்பட்ட பிட்சைப் போட்டால் போட்டியை வெற்றி பெற முடியாவிட்டாலும் டிரா செய்து விடலாம் என்று பிட்சைப் போடுகின்றனர்.
ஷுப்மன் கில் சொல்வதி போல் கோவிட் காலக்கட்டத்தைக் கடந்து நீண்ட தூரம் வந்து விட்டோம் இன்னும் பந்தில் உமிழ்நீரைத் தடவக்கூடாது என்ற விதியை ஏன் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. குறைந்தது பந்தின் பளபளப்பையாவது பரமாரிக்கலாம் அதுவும் முடியாமல் போகிறது.
இன்னொன்றும் ஷுப்மன் கில் சொல்வது மிக மிக முக்கியம் குகாபரா பந்துகளின் தரம் வீழ்ச்சியடைந்து விட்டது என்கிற ஐயத்தையும் ஐசிசி பரிசீலிக்க வேண்டியுள்ளது.