வெலிங்டன்: நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனம் மீண்டும் வெளிப்பட்டது. ஜஸ்பிரீத் பும்ரா மட்டுமே சிறப்பாகப் பந்துவீசி நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். மற்ற பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தத் தடுமாறினர்.
70 ரன்களுக்கு 5 விக்கெட்களை பறிகொடுத்ததால் நியூஸிலாந்து அணியை குறைந்த ரன்களில் சுருட்டுவதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு உருவானது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களின் திறன் குறைபாடும், 30-வது ஓவருக்குப் பிறகு கூகபுரா பந்தின் பளபளப்பு குறைந்ததும் ஆட்டத்தின் போக்கையே மாற்றின.
17 ஓவர்களை வீசி 52 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, ஹென்றி நிக்கோல்ஸுக்கு பலமுறை நெருக்கடி கொடுத்தார். ஆனால், அவரை ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை. பந்து பழையதாக மாறிய பிறகும் பும்ரா மட்டுமே விக்கெட் வீழ்த்தும் முனைப்புடன் செயல்பட்டார்.
‘ஏகே-47’ என்று செல்லமாக அழைக்கப்படும் அன்ஷுல் காம்போஜ் (18 ஓவர்களில் 57 ரன்கள், 1 விக்கெட்) தொடக்கத்தில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினாலும், தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தொடக்க வீரர் டெவன் கான்வே மோசமான ஷாட் ஆடியதே அந்த விக்கெட் கிடைக்க முக்கியக் காரணமாக இருந்தது.
ஸ்டெம்புகளை நோக்கி கட்டுப்பாட்டுடன் பந்துவீசுவது மட்டும் விக்கெட்டுகளைப் பெற்றுத்தராது என்பதை காம்போஜ் உணர்ந்தார். அவரது பந்துவீச்சில் வேகமும் குறைவாக இருந்தது. சராசரியாக மணிக்கு 128 முதல் 130 கி.மீ. வேகத்தில் மட்டுமே பந்துவீசியதால் அவரால் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவால் ஏற்படவில்லை.
மறுபுறம், பிரசித் கிருஷ்ணா (16 ஓவர்களில் 58 ரன்கள், விக்கெட் இல்லை) தொடர்ந்து மிகவும் ஃபுல்லாகவோ அல்லது ஷார்ட்டாகவோ பந்துவீசி ரன்களை வாரி வழங்கினார். ஆகாஷ் தீப் (16 ஓவர்களில் 33 ரன்கள், 1 விக்கெட்) சில சிறப்பான பந்துகளை வீசினார். இருப்பினும், பும்ராவைப் போல தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியவில்லை.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு கிளென் பிலிப்ஸ் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டார். இதனால் மறுமுனையில் ஹென்றி நிக்கோல்ஸுக்கு நம்பிக்கை ஏற்பட்டு தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்.
நிக்கோல்ஸை ஷார்ட் பால்களில் திணறடிக்க ஷுப்மன் கில் 6 வீரர்களை லெக் திசையில் நிறுத்தி வியூகம் அமைத்தார். ஆனால், காம்போஜின் வேகம் குறைந்த பந்துகளால் அந்தத் திட்டம் பலனளிக்கவில்லை.
இந்திய அணி ஏற்கெனவே ஒருமுறை காம்போஜுக்கு வாய்ப்பளித்திருந்தது. அப்போதும் அவர், அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. தற்போதும் அதே தவறை செய்துள்ளார். இதற்கு முகமது சிராஜை களமிறக்கி இருக்கலாம் என ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்.
சதம் விளாசிய பின்னர் ஹென்றி நிக்கோல்ஸ், பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் கேட்ச் கொடுக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், ரிஷப் பந்த், தேவ்தத் படிக்கல் இடையே ஏற்பட்ட புரிதல் குறைவால் தேவ்தத் படிக்கல் அந்த கேட்சை சரியாகக் கணிக்கத் தவறினார். இதனால் ஹென்றி நிக்கோல்ஸ் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்தார்.
மொத்தத்தில், ஆடுகளத்தில் ஆரம்பத்தில் இருந்த ஈரப்பதம் காய்ந்த பிறகு பந்துவீச்சாளர்களின் திறமையே முக்கியமானதாக இருந்தது. இந்த சூழ்நிலையில் பும்ரா மட்டுமே அழுத்தம் கொடுத்தார். இந்திய அணியின் மற்ற பந்துவீச்சாளர்கள் அவருக்கு உரிய ஒத்துழைப்பை அளிக்கத் தவறினர். 2-வது நாளான இன்று முதல் செஷன் ஆட்டம் முக்கியத்துவம் பெறக்கூடும்.